Published:Updated:

திண்டிவனம்: கட்டட வசதியற்ற தொடக்கப்பள்ளி; இரவல் இடத்தில் கல்வி; ஒதுக்கப்பட்ட ரூ.19 லட்சம் என்னவானது?

மாடுகட்டும் கொட்டகையில் நடக்கும் வகுப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், வகுப்பறை, சமையலறை, கழிப்பிடம், விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகளே இல்லாததால் அம்மாணவர்கள் சிரமப்பட்டுக் கல்வி பயின்றுவருகின்றனர்.

திண்டிவனம்: கட்டட வசதியற்ற தொடக்கப்பள்ளி; இரவல் இடத்தில் கல்வி; ஒதுக்கப்பட்ட ரூ.19 லட்சம் என்னவானது?

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், வகுப்பறை, சமையலறை, கழிப்பிடம், விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகளே இல்லாததால் அம்மாணவர்கள் சிரமப்பட்டுக் கல்வி பயின்றுவருகின்றனர்.

Published:Updated:
மாடுகட்டும் கொட்டகையில் நடக்கும் வகுப்பு
விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டிக்கு மிக அருகில், தேசிய நெடுஞ்சாலை (சென்னை - திருச்சி) ஓரமாகவே உள்ளது கன்னிகாபுரம். சிறிய கிராமமான இங்கு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், ஒற்றை இலக்கத்தில் இருந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 54-ஆக உயர்ந்துள்ளது.

ஆனால், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பறை என்னவோ, ஒன்றே ஒன்றுதான்.

ஒரே வகுப்பறையில் அனைத்து வகுப்பு மாணவர்களையும் அமர்த்தி, வகுப்பு வாரியாக தனித்தனிப் பாடம் எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், பள்ளியின் வராண்டாவிலும், சத்துணவு ஊழியரின் வீட்டு வாசலிலும், சில நேரம் பள்ளிக்கு அருகில் உள்ள மாட்டுத் தொழுவத்திலும் பிஞ்சு மாணவ, மாணவியர்களை அமர வைத்துப் பாடம் பயிற்றுவிக்கும் அவல நிலை நிலவிவருகிறது. இந்நிலையில், கூடுதல் வகுப்பறைகள், சமையலறை, கழிப்பிடம், விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தர வலியுறுத்தி, கடந்த 5-ம் தேதி பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

வராண்டாவில் கல்வி, ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
வராண்டாவில் கல்வி, ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

இதுகுறித்துக் கன்னிகாபுரம் பகுதி மக்களிடம் பேசினோம். "இரண்டு அரசு ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக இரு ஆசிரியர்கள், திருக்குறளைத் தனிக் கவனத்துடன் பயிற்றுவிக்க இரு பகுதிநேர ஆசிரியர்கள் என 6 ஆசிரியர்கள் இந்தப் பள்ளியில் பணிபுரிகின்றனர். மேலும், 'இங்கிலாந்துப் பள்ளி' ஆசிரியர் ஒருவரும் அவ்வப்போது வந்து `ஸ்போகன் இங்கிலீஸ்' வகுப்பு நடத்துகிறார். அனைவரும் பாடத்தைச் சிறப்பாக நடத்துவதால், குழந்தைகளும் ஆர்வத்துடன் பள்ளிக்குச் செல்கின்றனர். இதனால் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்தது. 61 மாணவர்கள் வரை இந்தப் பள்ளியில் சேர்ந்தார்கள். ஆனால், போதிய வகுப்பறை இல்லாததால், வேறு வழியின்றி, பள்ளியின் வராண்டாவிலும் சத்துணவு ஊழியரின் வீட்டு வாசலில் ஓட்டில் கூரை அமைத்தும், அவ்வப்போது மாடு கட்டும் கொட்டகையிலும் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், 7 குழந்தைகளை இங்கிருந்து அழைத்துச் சென்று வேறு பள்ளிகளில் பெற்றோர்கள் சேர்த்துவிட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சத்துணவு சமைக்கும் இடமும் இல்லாமல், பள்ளிக்கு அருகிலேயே சத்துணவு ஊழியரின் வீட்டு வாசலில் சமைக்கப்படுகிறது. இதனால் அங்கு வெப்பம் அதிகமாகி குழந்தைகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மழை நேரம் என்றால், வராண்டாவிலும் குழந்தைகள் அமர முடியாது, சத்துணவு ஊழியரின் வீட்டு வாசலிலும் அமர முடியாது. 54 மாணவர்களையும் ஒரே வகுப்பறையில்தான் அமர வைத்தாக வேண்டும். எனவே, அரசாங்கம் உடனடியாகக் கூடுதல் கட்டடங்களைக் கட்டித்தர வேண்டும் " என்றனர்.

எம்.எல்.ஏ அர்ஜூனன் ஆய்வு, வாக்குவாதம்
எம்.எல்.ஏ அர்ஜூனன் ஆய்வு, வாக்குவாதம்

கன்னிகாபுரம் தொடக்கப்பள்ளிக்கு அடிப்படை வசதிகளுடன் கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியதும், அந்தப் பள்ளிக்கு இன்று (07.09.2022) நேரில் ஆய்வு மேற்கொண்டார் திண்டிவனம் எம்.எல்.ஏ அர்ஜுனன். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தவர், "அடிப்படை வசதிகளுடன் கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் எனக் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பள்ளிக் குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் மனு கொடுத்துள்ளனர். அதனைச் செய்தி வாயிலாக அறிந்து, இன்றைய தினம் நான் நேரில் ஆய்வு மேற்கொண்டேன். இங்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த மே மாதமே 19 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளேன். ஆனால், கட்டடம் கட்டுவதற்கு இடப்பற்றாக்குறை உள்ள காரணத்தால் அப்பணி தொடங்கப்படாமல் உள்ளது. இது சம்பந்தமாக ஊர் மக்களை அழைத்துப்பேசி, விரைவில் இங்கு பள்ளிக் கட்டடம் கட்டப்படும். ஆசிரியர் பெருமக்களின் கோரிக்கைகளை ஏற்று சமையலறை மற்றும் கழிப்பறை இந்த ஆண்டே கட்டித்தரப்படும் என உறுதியளிக்கிறேன்" என்றார்.

அப்போது, எம்.எல்.ஏ அர்ஜுனன் முன்னிலையிலேயே மக்கள் பிரதிநிகளும் கட்சிக்காரர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பார்ப்போரை முகம் சுளிக்கச் செய்தது.

கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு கடந்த மே மாதமே 19 லட்சத்தை ஒதுக்கியதாக எம்.எல்.ஏ கூறும்போது, ஏன் உரிய இடத்தைத் தேர்வு செய்து கட்டடத்தைக் கட்டாமல் கால தாமதம் செய்கிறது அரசு எந்திரங்கள்? அடிப்படை வசதிகளும், புதிய பள்ளிக் கட்டடமும் எப்போது வரும் எனக் காத்துக்கிடக்கின்றனா் இளம் மழலைகள்.