Published:Updated:

புதிய கல்வி கொள்கை: `தனியார்மயமாக்கலுக்குதான் உதவும்!’ - சமூக ஆர்வலர்கள் கவலை

மாணவர்கள்
News
மாணவர்கள்

அரசுக்கல்லூரிகள் தனியார் கல்லூரிகளாக மாறினால் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அந்தந்த மாநிலங்கள் தங்கள் சூழலுக்கேற்ப, கல்விக் கொள்கையை உருவாக்கிக்கொள்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும்.

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கை குறித்து நாடும் முழுவதும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் உள்ள பாதக, சாதகங்கள் குறித்து, கல்வியாளர்கள், மாணவ அமைப்பினர், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில்தான் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை நடைமுறைக்கு வந்தால், அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளாக மாறும் எனவும் இதனால் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கவலை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கி.வெங்கட்ராமன்
கி.வெங்கட்ராமன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயாலளர் கி.வெங்கட்ராமன், ``தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019” என்ற பெயரால், கடந்த ஆண்டு மே மாதம் டாக்டர் கஸ்தூரிரெங்கன் குழுவின் அறிக்கையை மத்திய அரசு முன்வைத்தது. இதன் மீது, இந்தியா முழுவதிலுமிருந்து கல்வியாளர்கள் மாணவர் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் ஆகியவை மிக விரிவான மாற்றுக் கருத்துகளை முன் வைத்திருந்தனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் மிக விரிவான கருத்துரையாடல்கள் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்களின் சார்பாகவும் ஏராளமான கருத்துகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. இவை எதையுமே சட்டை செய்யாமல், தாங்கள் ஏற்காததன் காரணத்தையும் விளக்காமல் அதே வரைவை 60 பக்கத்தில் வடிவமைத்து, மத்திய அமைச்சரவை `தேசிய கல்விக் கொள்கை - 2020 (NEP - 2020)’ என்ற பெயரால் இறுதி செய்து அறிவித்துள்ளது. அரசு கொண்டு வரும் கல்விக்கொள்கை என்பது, தற்போதைய மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல... அடுத்தடுத்த தலைமுறையினரின் கல்வியையும் தீர்மானிக்கக்கூடியது. ஆனால், புதிய கல்விக் கொள்கை குறித்து, நாடாளுமன்றத்திலோ நாடாளுமன்றக் குழுக்களிலோ எந்த விவாதமும் நடத்தப்படவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தி, சம்ஸ்கிருத ஆதிக்கத்திற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேவையான படிப்பாளிகளை உருவாக்குவதற்கும், கல்வியை மேன்மேலும் தனியார்மயமாக்குவதற்கும்தான் இது பலன் அளிக்கும். இதற்கு வசதியாகத்தான், மத்திய அரசின் கைகளில் கல்வித்துறை அதிகாரத்தை முழுவதுமாகக் குவிக்க, இக்கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சம்ஸ்கிருதத்தைப் பள்ளிக் கல்வியிலிருந்தே திணிப்பது, மூன்றாவது மொழி என்ற பெயரால் கொல்லைப்புற வழியில் இந்தியைத் திணிப்பது, கல்வித்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது போன்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பல்கலைக்கழக இணைப்பிலிருந்து கல்லூரிகளைப் பிரித்து தன்னாட்சிக் கல்லூரிகள் என்ற பெயரால் தனியார் கல்வி முதலாளிகளின் வேட்டைக்கு வழி வகுக்கும். அரசு கல்லூரிகள் படிபடியாகத் தனியார் கல்லூரிகளாக மாறும்.

கல்விக் கட்டணம்
கல்விக் கட்டணம்

மருத்துவக் கல்லூரிக்கு அனைத்திந்திய `நீட்’ தேர்வு இருப்பதுபோல், கலை அறிவியல் பாடங்கள் உள்ளிட்ட கல்லூரி வகுப்புகள் அனைத்துக்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படும். தனியார் நிறுவனங்களின் நுழைவை உறுதி செய்யும் வகையில் “தேசியத் தேர்வு ஆணையம்” (National Testing Agency) உருவாக்குவது, மழலையர் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை அனைத்திலும் மத்திய அரசின் முழு அதிகாரத்தை நிறுவும் வகையில் `இராஷ்ட்ரிய சிக்ஷா அபியான்’ என்ற பெயரில் மத்தியக் கல்வியமைச்சர் தலைமையில் ஆணையத்தை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் இதில் மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு பின்னடைவுகளைக் கொண்ட இந்தக் கல்விக்கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அந்தந்த மாநிலங்கள் தங்கள் சூழலுக்கேற்ப - கல்விக் கொள்கையை உருவாக்கிக் கொள்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிய கல்விக்கொள்கை மீதான விமர்சனங்கள் குறித்து, பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளர் எம்.எஸ்.ராமலிங்கம்,``இந்தியா முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதமான கல்வி கிடைக்கும். தனியார் கல்லூரிகளுக்கு நிகராக அரசுக்கல்லூரி மாணவர்களும் தரமான கல்வி பெறுவார்கள் என்பதுதான் உண்மை. பாரபட்சம் இருக்காது. குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் அதிகமாகப் பயன் அடைவார்கள். இந்தி. சம்ஸ்கிருதம் மட்டுமல்ல, கூடுதலாக வேறொரு எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம்.

பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளர் எம்.எஸ்.ராமலிங்கம்
பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளர் எம்.எஸ்.ராமலிங்கம்

சம்ஸ்கிருதத்தை ஒரு குறிப்பட்ட சாதியினரின் மொழியாகச் சிலர் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். இது மிகவும் பழைமையான மொழி. எல்லோருக்கும் பொதுவானது. பல மொழிகளுக்கும் இது அடிப்படையானது. புதிய கல்விக்கொள்கை வந்தாலும், கல்வி, மாநில அதிகாரப் பட்டியலில்தான் இருக்கும். இது இப்போது புதிதாகக் கொண்டு வரப்பட்டது அல்ல. காங்கிரஸ் ஆட்சியிலேயே முன் வைக்கப்பட்டு, 6 ஆண்டுகள் நாடு முழுவதும் பல தரப்பினரோடும் கலந்தாலோசிக்கப்பட்டு, தற்போது செயல் வடிவம் பெறுகிறது" என்றார்.