Published:Updated:

`நீட்'ல பாஸாயிருந்தா டாக்டராயிருப்பேன்; என் கனவு நிறைவேறல!'- உயிரைமாய்த்த மாணவி உருக்கமான கடிதம்

பி.ஆண்டனிராஜ்

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனம் உடைந்த நிலையில் இருந்த ஆட்டோ டிரைவரின் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வுக்காக கோச்சிங் சென்டர் செல்ல பணம் இல்லாததால் தற்கொலை செய்வதாக அவர் உருக்கமாக எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட மாணவி தனலட்சுமி
தற்கொலை செய்து கொண்ட மாணவி தனலட்சுமி

நெல்லை ஊருடையான்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். ஆட்டோ டிரைவரான இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு இரு குழந்தைகளும் இரண்டாவது மனைவிக்கு இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இரண்டாம் மனைவியின் மூத்த மகள் தனலட்சுமி. படிப்பில் ஆர்வம் கொண்டவர். அவர் பத்தாம் வகுப்புத் தேர்வில் 460 மதிப்பெண் பெற்றிருந்தார். ஆனால், ப்ளஸ் டூ தேர்வில் அவரால் அதிக மதிப்பெண் எடுக்க முடியவில்லை.

குடும்ப வறுமை காரணமாக கோச்சிங் சென்டரில் சேர்ந்து நீட் தேர்வுக்காகப் படிக்க முடியாததால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.
தற்கொலை செய்து கொண்ட மாணவி தனலட்சுமி

இந்த நிலையில், நீட் தேர்வுக்காக கோச்சிங் சென்டர் செல்ல வேண்டும் எனப் பெற்றோரிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் குடும்ப கஷ்டம் காரணமாக அவரை பயிற்சி வகுப்பில் சேர்க்கவில்லை. அதனால் வீட்டில் இருந்து படித்து தேர்வு எழுதிய அவரால் நீட் தேர்வில் 90 மதிப்பெண் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த ஆண்டு நீட் கோச்சிங் சென்டரில் சேர்ந்து படிக்க வேண்டும் என விரும்பியபோதிலும், போதிய பணம் இல்லாததால் அவரால் பயிற்சி மையத்தில் சேர இயலவில்லை. அதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில் அழுதுகொண்டே இருந்துள்ளார். குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறியும், தன்னால் மருத்துவம் படிக்க இயலாமல் போய்விட்டதே என்கிற வருத்தத்தில் இருந்துள்ளார். நீட் தேர்வில் வெற்றி பெற இயலாமல் போனதுடன், கோச்சிங் சென்டரில் சேர முடியாததால் சோகத்தில் இருந்த அவர் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தனலட்சுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி எழுதிய உருக்கமான கடிதம்
மாணவி எழுதிய உருக்கமான கடிதம்

தற்கொலை செய்துகொண்ட மாணவி தனலட்சுமி உருக்கத்துடன் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தில், ’’என் சாவுக்கு யாரும் காரணமில்லை. என்னால் நான் ஆசைப்பட்டதைப் படிக்க முடியவில்லை. நான் நீட் தேர்வில் பாஸாகியிருந்தால் இப்போது படிக்கப் போயிருப்பேன். பணம் தான் என் கனவுகளை நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டது. நான் மட்டும் நீட் கோச்சிங் கிளாசுக்குப் போயிருந்தால், இப்போது டாக்டருக்குப் படிச்சுக்கிட்டு இருந்திருப்பேன். நான் ஆசைப்பட்டதை அடையுற ராசி இல்லாதவளாப் போயிட்டேன். வீட்டிலும் வெளியிலும் நான் ஆசைப்பட்டது எதுவும் கிடைக்கலை. நான் பிறந்ததே வேஸ்ட். அதனால் போயிட்டு வர்றேன்.

தங்கை வர்ஷினியை நல்லாப் படிக்க வையுங்க. உங்க பணக் கஷ்டத்தை நான் குறைச்சிருக்கிறேன். கலையரசி, சுதாகரை நல்லாப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் வாழ்க்கையே வெறுத்துப் போய்த்தான் சாகிறேன். நான் ஒரு மாதமாக உள்ளுக்குள்ளேயே வச்சுக் கவலைப்பட்டேன். இப்போது என்னால் முடியவில்லை. சாரி அம்மா. ஐ லவ் யூ அம்மா.. உங்களை நான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன். தயவு செய்து நீட் தேர்வை தடை செய்யுங்கள்’’ என உருக்கமாக எழுதிக் கையொப்பமிட்ட கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஒரு மாதமாக உள்ளுக்குள்ளேயே கவலைப்பட்டேன். இப்போது தாங்க முடியாததால் இந்த முடிவ எடுக்கிறேன்.
தற்கொலை செய்த மாணவி தனலட்சுமி

நீட் தேர்வு காரணமாகத் தமிழகத்தில் அனிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் ஒரு மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.