நீட் தேர்வு பல மாணவர்களின் மருத்துவக் கனவைக் கலைத்துப்போட்டது. தமிழகத்தில் சில மாணவர்களின் உயிரையும் குடித்தது. இதனுடன் கொரோனா காரணமாகப் பள்ளி, கல்லூரிகளின் இறுதியாண்டுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாகத் தயக்கமும் சில குழப்பங்களும் தொடர்ந்து கொண்டிருந்தன.

இந்நிலையில், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளின் இறுதியாண்டுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் காணொலி வாயிலாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் சார்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்துக்கு நீட் தேர்வு கூடாது என்றும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக அரசு, நீட் தேர்வு குறித்த அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?