Published:Updated:

``இஸ்லாமிய மதத்தவர், எங்களுக்கு வேதத்தைப் போதிக்கலாமா?’’- பனாரஸ் பல்கலையில் மாணவர்கள் போராட்டம்!

``இதே பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்வெட்டில், `இந்து மதத்தை சாராத ஒருவர் சம்ஸ்கிருதத் துறையில் சேரவோ, கற்றுக் கொடுக்கவோ கூடாது' என்று சொல்லப்பட்டுள்ளது.''

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் தொடர் சர்ச்சைகளில் சிக்கிவருகிறது. இரு நாள்களுக்கு முன், பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் கொடியை அகற்றிய அலுவலரை பணியிலிருந்து நீக்க வேண்டுமென்று மாணவர்கள் போராடினார்கள். இதையடுத்து, அந்த அலுவலர் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இப்போது, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், தங்களுக்குப் பாடம் எடுப்பதை எதிர்த்து சம்ஸ்கிருதத் துறை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

அகில பாரத இந்து சபாவின் நிறுவனர்களில் ஒருவரான மதன் மோகன் மால்வியாவால் தோற்றுவிக்கப்பட்ட பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சாதிய, மத வேறுபாடுகள் தலைவிரித்தாடுவதாக புகார்கள் எழுவதுண்டு. கடந்த 6-ம் தேதி இந்தப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத் துறையில் பிரோஸ்கான் என்பவர் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவர், சம்ஸ்கிருத மொழியில் பி.ஹெச்டி படித்தவர். பல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில், இந்து பல்கலைக்கழகத்தில் பிரோஸ்கானுக்கு பணி வழங்கப்பட்டது. ஆனால், பிரோஸ்கானை தங்களுக்குப் பாடம் எடுக்கக் கூடாது என, சம்ஸ்கிருதம் படிக்கும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் ``மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தவறு. போராட்டம் நடத்தினாலும் பிரோஸ்கானின் பணி நியமனம் ரத்து செய்யப்படாது'' என்று தெளிவாகவும் உறுதியாகவும் கூறிவிட்டது. மேலும், `` பேராசிரியர்களுக்கு பணி அளிப்பது எல்லாம் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறுப்பு. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பல்கலைக்கழகத்தில் விதி வகுக்கப்பட்டுள்ளது '' எனவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``சொல்லிக் கொடுத்து பேசச்  சொன்னார்கள்!'' - எட்டு வழிச்சாலைக்காக நிலம் கொடுத்த  விவசாயி தகவல்

பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனக்குழு, `நாங்கள் நடத்திய இன்டர்வியூ மற்றும் தகுதி அடிப்படையில் மற்றவர்களைவிட பிரோஸ்கான் திறமையானவராக இருக்கிறார். எனவே, அவருக்குப் பணி நியமனம் வழங்கலாம்' என்று துணை வேந்தர் ராகேஷ் பட்னாகரிடத்தில் பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, பிரோஸ்கானுக்கு பல்கலைக்கழத்தில் சம்ஸ்கிருதத் துறையில் துணைப் பேராசிரியர் பணி வழங்கப்பட்டது. உடனடியாக சம்ஸ்கிருதத் துறையில் சலசலப்பு எழுந்தது.

``இஸ்லாமிய மத்தைச் சேர்ந்த ஒருவர் எங்களுக்கு வேதத்தைப் போதிக்கலாமா?'' என்று அந்தத் துறை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரோஸ்கானை ஒரு நாள் கூட பாடம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவ அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

போராட்டத்தில் மாணவர்கள்
போராட்டத்தில் மாணவர்கள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பின் தலைவரான சக்ரபாணி ஓஜா கூறுகையில், ``பிரோஸ்கான் சம்ஸ்கிருதத் துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டது உள்நோக்கம் கொண்டது. தொடக்கத்திலிருந்தே இன்டர்வியூவில் இருந்து அனைத்து விஷயங்களிலும் பிரோஸ்கானுக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டுள்ளனர். இதே பல்கலைக்கழக வளாகத்தில், உள்ள கல்வெட்டில், `இந்து மதத்தைச் சாராத ஒருவர் சம்ஸ்கிருதத் துறையில் சேர்ந்து படிக்கவோ, கற்றுக் கொடுக்கவோ கூடாது' என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில், இஸ்லாமிய மத்தைச் சேர்ந்த ஒருவரை பேராசிரியராக நியமித்தது ஏன்? இதன்மூலம் இந்தப் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த மதன் மோகன் மால்வியாவை அவமதித்துள்ளனர்'' என குற்றம்சாட்டியுள்ளார்.

சம்ஸ்கிருத ஆய்வு மாணவர் சுபம் திவாரி என்ற மாணவர், ``எங்கள் துறை பேராசிரியர்களை நாங்கள் குருவாகவே பார்ப்போம். தினமும் நாங்கள் அவர்களின் கால்களைத் தொட்டு வணங்குவோம். அதேபோல் இந்து மதச் சடங்குகளும் நடைபெறும். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவரால், இந்து தர்மத்தை எப்படி எங்களுக்குப் போதிக்க முடியும்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

துணை வேந்தர் ராகேஷ் பட்னாகர்
துணை வேந்தர் ராகேஷ் பட்னாகர்

பல்கலைக்கழக வளாகத்தில் வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் சம்ஸ்கிருதத் துறையில் படிக்கக் கூடாது, பணி செய்யக் கூடாது என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இல்லை' என்று நிர்வாகம் மறுத்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் ராகேஷ் பட்னாகர் கூறுகையில், ``பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துத் தகுதியானவர்களைத் தேர்வு செய்துள்ளோம். மதத்தையோ அல்லது சாதியைக் காட்டி ஒருவருக்கு பணி வழங்கக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை'' என்றார்.

சம்ஸ்கிருதத்துறை தலைவர் உமாகாந்த் சதுர்வேதி, ``இன்டர்வியூவுக்கு 29 பேர் வந்திருந்தனர். 10 பேர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டனர். இன்டர்வியூவில் மற்றவர்கள் 10 மதிப்பெண்களுக்கு 2 மார்க் எடுத்தனர். பிரோஸ்கான் 10-க்கு 10 மதிப்பெண்கள் எடுத்தார். தகுதியின் அடிப்படையில் மட்டுமே அவருக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.