Published:Updated:

பேரிடரில் மக்கள் தவிக்கும் சூழலில் கல்விக்கட்டணம் கேட்பது நியாயமா?

தனியார் பள்ளி
தனியார் பள்ளி

`தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வசூல் செய்வதற்காகத்தான் 'ஆன்லைன் கல்வி'யைத் தொடங்குகிறார்கள். பெற்றோர் வருமானமின்றி தவிக்கையில் எப்படி அவர்களால் கல்விக் கட்டணம் செலுத்த முடியும்?’ என்ற கேள்வி எழுகிறது.

தனியார் பள்ளிக் கல்வி கட்டணம் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்துள்ள அனைத்து வழக்குகளும் வருகிற 17-ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

இந்த லாக்டௌன் காலத்தில் கல்வித்துறை சார்ந்த இரு முக்கிய விஷயங்கள் பெரும் விவாதங்களைக் கிளப்பின. ஒன்று ஆன்லைன் வகுப்புகள், மற்றொன்று தனியார் பள்ளிகளின் கட்டண நெருக்கடி. இரண்டுமே பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலைத் தந்தன.

ஆன்லைன் வகுப்புகள்
ஆன்லைன் வகுப்புகள்

கொரோனா காலத்தில் சிறு, குறு தொழில் செய்து வந்தோர், தினக்கூலிகள் எனப் பலரும் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர். பல நிறுவனங்களில் சம்பளப் பிடித்தம் செய்யப்பட்டது. இப்படி தமிழகத்தின் பல குடும்பங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. குடும்பத்தின் பொருளாதார சூழல் குழந்தைகளையும் பாதிக்கும் எதார்த்தம் நிகழ்ந்தேறியது. அவர்கள் இதுவரை அறிந்திடாத 'ஆன்லைன் வகுப்பு' அறிமுகமானது.

'ஆன்லைன் கல்வி'யை ஆரம்பம் முதலே கல்வியாளர்கள் பலரும் எதிர்த்து வந்தனர். தனியார் பள்ளிகளின் சார்பில் ஆன்லைன் கல்வி தொடங்க அனுமதி வழங்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆன்லைன் வழிக் கல்வி அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா, ஆன்லைன் வழி கற்றல் முறை பயன்தரக்கூடிய ஒன்றா என்பதெல்லாம் பல தளங்களில் விவாதிக்கப்பட்டன. நீண்டநேரம் மொபைலையோ, லேப்டாப்பையோ பார்க்கும் குழந்தைகள் உளவியல் சிக்கலுக்கும், கண் மற்றும் உடல்நல பிரச்னைகளுக்கும் ஆளாவார்கள் என உளவியல் நிபுணர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், `தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வசூல் செய்வதற்காகத்தான் 'ஆன்லைன் கல்வி'யைத் தொடங்குகிறார்கள். பெற்றோர் வருமானமின்றி தவிக்கையில் எப்படி அவர்களால் கல்விக் கட்டணம் செலுத்த முடியும்?’ என்ற கேள்வியும் எழுந்தது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்
ஆன்லைன் (அ) தொலைக்காட்சி வழி வகுப்புகள்... அமைச்சருக்கு சில கோரிக்கைகள்!

ஆனாலும் பல தனியார் பள்ளிகள், ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கிவிட்டன. அரசுப் பள்ளிகளிலும் ஜூலை-13 முதல் 'ஆன்லைன் வகுப்புகள்' எடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். பிறகு அவரே, ’’தொலைக்காட்சி வாயிலாகப் பாடங்கள் நடத்த 5 சேனல்கள் முன்வந்துள்ளன. கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு நடைமுறை சிக்கல்கள் சரிசெய்யப்படும்’’ என்றார்.

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஏப்ரல் மாதம் 20-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில், "தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கப் பெற்றோர்களை நிர்ப்பந்திக்க கூடாது. அதேசமயம், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசுக்குக் கோரிக்கை மனு அனுப்ப மனுதாரர் சங்கத்துக்கு அறிவுறுத்தியிருந்தது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
எம். விஜயகுமார்

இந்த வழக்கில், தமிழக உயர் கல்வித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், தனியார் கல்லூரிகள் ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் ஆகிய மாதங்களில் மூன்று தவணைகளாகக் கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கடந்த ஆண்டு நிலுவைத் தொகையை, பெற்றோருக்கு இடையூறு இல்லாமல் வசூலித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்துள்ளதால் அனைத்து வழக்குகளும் வருகிற 17-ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம்.

"இந்த 2020-21 கல்வியாண்டு என்பது மாணவர்களுக்கு மிகவும் கஷ்டமான ஆண்டாக மாறியுள்ளது. ஆனால், பிள்ளைகளின் ஆரோக்கியத்துடன் ஒப்பிடுகையில், இந்தக் கல்வியாண்டின் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரலாம். ஒன்றும் முடியாதபட்சத்துக்கு இந்தக் கல்வியாண்டையே ரத்து செய்யலாம். ஆனால், எந்தவொரு காரணத்திலும் மாணவர்களின் வாழ்வை பணயம் வைக்கக் கூடாது.

தனியார் பள்ளிகள் பல ஆன்லைன் வகுப்புகளை செயல்படுத்துகின்றன. இதைப் பெற்றோர்களும் வரவேற்கின்றனர். ஆனால், இது தவறான நடவடிக்கை. பெற்றோர் தம் பிள்ளைகள் பொழுதை வீணாகக் கழிக்காமல், படிக்கலாமே என்று எண்ணலாம். ஆனால், பள்ளி பாடமுறை என்பது சக மாணவர்களுடன் கலந்துரையாடி, சந்தேகத்தின் மூலம் ஆசிரியர்களை கேள்விகளால் துளைத்தெடுத்து கற்கும் கல்விதான் பள்ளி மாணவர்களின் அறிவைக் கூர்மையாக்கும். ஆனால், ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் நடத்த, அதற்கு தலையாட்டும் குழந்தைகளாகதான் மாறுவார்கள். இது வளரும் பிள்ளைகளுக்கு தவறான வழிமுறையாகும்.

பிரின்ஸ் கஜேந்திர பாபு
பிரின்ஸ் கஜேந்திர பாபு

மேலும், தனியார் பள்ளிகள் அவர்களிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காகக் கல்விக் கட்டணத்தை பெற்றோர் உடனே கட்ட வேண்டும் என்று நெருக்கடி தரும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.

கடந்த 4 மாதங்களாக அரை சம்பளத்துடன் அல்லது சம்பளமே இல்லாமல் வாழ்க்கையை நடத்தும் குடும்பங்கள் இங்கு ஏராளம். அந்த நிலையில் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு பெரிய தொகையை அவர்கள் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அவர்களின் நிலையையும் அரசு கணக்கில் கொள்ள வேண்டும்.

தனியார் பள்ளி, கல்லூரிகள் ஈட்டும் பணத்தில் வரும் லாபத்தை புதுக்கட்டடம், பேருந்துகள் எனத் தங்கள் சொந்த முன்னேற்றத்துக்கு பயன்படுத்துவர். ஒரு பிரச்னை வரும்பொழுது அதை மற்றவர்கள் தலையில் கட்டுவது அறமன்று. இந்த நிலையில் அவர்களும் தங்கள் பொறுப்புணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கிகளில் கடன் வாங்கியாவது பிள்ளைகளுக்கு கட்டணம் கட்டுங்கள் என்று சொல்கின்றன தனியார் கல்வி நிறுவனங்கள்.  அவர்களே வங்கியிடம் கடன்வாங்கி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கலாமே! அந்தக் கடனை பள்ளிகள் திறக்கும்போது தனியார் கல்வி நிறுவனங்கள் அடைத்துக்கொள்ளலாமே!

ஆன்லைன் வகுப்பு
ஆன்லைன் வகுப்பு
pixabay

இதற்கு மேலும் பள்ளிக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலை வரும்போது, அரசுப் பள்ளிளில் மாணவர்கக்ச் சேர்க்க முன்வருமாறு அரசு தெரிவிக்கலாம். கல்விக்கென்று ஒவ்வோர் இந்திய மனிதரும் வரி செலுத்துகிறார். எனவே, அரசானது மாணவர்களின் கல்விக்கு உத்தரவாதம் தர வேண்டும். சமச்சீரான கல்வி மற்றும் தரத்தை அரசுப் பள்ளிகளால் தர முடியும் என்று அரசு உத்தரவாதம் தர வேண்டும். அப்படித் தரும் பட்சத்தில், அரசு பள்ளிகளின் மீது கவனம் அதிகரித்து, மேலும் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும். பின்பு, கல்விக்கான செலவு என்பது மக்களுக்கு சுமையாக அமையாது" என்றார்.

இதுதொடர்பாகத் தமிழ்நாடு தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ஸ்ரீதரிடம் பேசினோம், "சென்ற வருடக் கட்டணத்தை வசூலிக்கவும், இந்தக் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தி வசூலிக்கவும் அனுமதி வழங்க வேண்டும். இல்லாதபட்சத்தில் தனியார் பள்ளிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளும்" என்றார்.

இது குறித்து உங்களின் கருத்துகளை இந்த சர்வேயில் பதிவு செய்யுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு