Published:Updated:

காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் ரத்து: மாணவர்களுக்கு நன்மை பயக்குமா, பின்னடைவை ஏற்படுத்துமா?

நடப்பு கல்வியாண்டில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மாணவர்களுக்குச் சாதகமா, பாதகமா?

கொரோனா பேரிடர் காரணமாக நீண்ட மாதங்களாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பலகட்ட ஆலோசனைக்குப் பிறகு சமீபத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாகப் பள்ளிகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். மேலும், வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

கொரோனா தொற்று முழுமையாகச் சரியாகாத சூழலில், பள்ளியிலுள்ள அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுழற்சிமுறையில் வகுப்புகள் என்று தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி பள்ளிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ``நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்குக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது. தேர்வு குறித்த மாணவர்களின் அச்சத்தைப் போக்க டிசம்பர் மாதம் மாதிரித் தேர்வு நடத்தப்படும். வழக்கம்போல பொதுத்தேர்வு நடைபெறும். அதேநேரத்தில், திட்டமிட்டபடி கண்டிப்பாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும்" என்று கூறினார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

கொரோனா முதல் அலை சமயத்தில், பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறாமல் இருந்தது. அந்த நேரத்தில் மாணவர்கள் முந்தைய தேர்வுகளில் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையிலும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையிலும் பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நடப்பு ஆண்டில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறாது என்று அரசு அறிவித்துள்ளது.

`அரசுப் பள்ளி வறுமை அல்ல, பெருமை’ - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சும் எதிர்பார்ப்பும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேர்வுகள் ரத்து செய்திருப்பது தொடர்பாகக் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். ``பள்ளிகள் திறந்து ஒரு மாத காலம்தான் ஆகிறது. இப்போதுதான் கற்றல் சூழலுக்கு மாணவர்கள் தயாராகிவருகிறார்கள். தேர்வு என்றால் அதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும். மாணவர்கள் இப்போதுதான் படங்களைப் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்குள் தேர்வு வைப்பது சரியாக இருக்காது. பொதுத்தேர்வுக்கு முன்னர் ஒரு மாதிரித் தேர்வை நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்த மாதிரித் தேர்வு, தேர்வு குறித்த மாணவர்களின் அச்சங்களைப் போக்க உதவும். எனவே, தற்போது அரசு தேர்வு ரத்து என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான்" என்று கூறினார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

இது தொடர்பாக அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம். ``நீண்ட மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. தற்போதுதான் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது மாணவர்களை உளவியல்ரீதியாகப் பாடம் கற்றுக்கொள்ளும் சூழலுக்குத்தான் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறோம். அவர்கள் இந்தச் சூழலுக்குத் தயாராகவே இன்னும் சில காலம் ஆகும். அதற்குள் தேர்வு என்று ஒன்று வந்தால் அது அவர்களைக் கண்டிப்பாக பாதிக்கும். எனவே, தற்போது தேர்வு ரத்து என்று அரசு கூறியிருப்பது மிகவும் சரியானது" என்று கூறினார்.

தற்போதுள்ள சுழலில் தேர்வுகளை ரத்து செய்திருப்பது மாணவர்களுக்கு நன்மைதான் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு