Published:Updated:

`தேர்வுக்கட்டணம் 24 மடங்கு உயர்வு!' - சி.பி.எஸ்.இ சொல்லும் காரணம்

பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுக்கட்டணத்தை 24 மடங்கு அளவுக்கு உயர்த்தியிருக்கிறது சி.பி.எஸ்.இ கல்வி வாரியம். பொதுப்பிரிவினருக்கான கட்டணமும் இருமடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது.

CBSE
CBSE

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதுவதற்கு தேர்வுக் கட்டணம் கட்டி வருகின்றனர். 10ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் 9ம் வகுப்பு பயிலும்போதும் 12ம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் 11ம் வகுப்புப் பயிலும்போதும் தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன்படி, பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் தேர்வுக் கட்டணமாக 5 பாடப்பிரிவுகளுக்கு ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணம் தற்போது ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், பொதுப்பிரிவினருக்கான தேர்வுக் கட்டணம் ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு என இரண்டு வகுப்புகளுக்கும் இந்தத் தேர்வுக் கட்டணம் பொருந்தும் என சி.பி.எஸ்.இ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Students
Students

இதுதொடர்பான சுற்றறிக்கை பள்ளிகளுக்குக் கடந்த வாரமே அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்யும் நடைமுறைகளைத் தொடங்கியிருக்கும் பள்ளிகள், மாணவர்களிடம் கூடுதல் கட்டணத்தைப் பெற்று உரிய நேரத்துக்குள் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறு செலுத்தாத மாணவர்கள் பதிவு செய்யப்படாதவர்களாகக் கருதி, பொதுத்தேர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், 5 பாடப்பிரிவுகளை விடக் கூடுதலாக ஒரு பாடப்பிரிவைக் கொண்டுள்ள பட்டியலின, பழங்குடி மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்ற நடைமுறை இதுவரை இருந்தது. இந்தநிலையில், அவர்கள் கூடுதலான ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் ரூ.300 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.150 ஆக இருந்தநிலையில், அவர்களுக்கும் ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், 100 சதவிகிதம் கண்பார்வைக் குறைபாடு கொண்ட மாணவர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

Students
Students

வெளிநாடுகளில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கானத் தேர்வுக் கட்டணம் ரூ.5000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேநேரம் 12ம் வகுப்பில் கூடுதலாக ஒரு பாடத்துக்கான தேர்வுக்கட்டணம் ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. முன்னதாக, இந்தக் கட்டணம் ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த 5 ஆண்டுகளாகத் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படாதநிலையில், தற்போதுதான் உயர்த்தப்பட்டிருப்பதாக சி.பி.எஸ்.இ தெரிவித்திருக்கிறது.