Published:Updated:

சிபிஎஸ்இ: குடியுரிமை, மதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகள் பாடங்கள் நீக்கம்!

சிபிஎஸ்இ மாணவர்கள்
சிபிஎஸ்இ மாணவர்கள்

``சிபிஎஸ்இ 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக உரிமைகள் மற்றும் கட்டமைப்பு என்ற அத்தியாயமும் நீக்கப்பட்டுள்ளன.”

கொரோனா வைரஸ் பரவி வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த கல்வி ஆண்டில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகளும் பல மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் மாநில அரசுகள் அறிவித்தன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பாக எந்தவித முடிவுகளையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்காத நிலையில், தற்போது பல பள்ளிகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகளை நடத்தி வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பாடதிட்டத்தின் அளவைக் குறைக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் உட்பட பலரும் குரல் கொடுத்து வந்தனர். இந்தநிலையில், தற்போது மத்திய அரசானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவிகிதம் வரை பாடங்கள் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான சர்ச்சைகளும் தற்போது எழுந்துள்ளன.

பாடத்திட்டத்தைக் குறைப்பது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கற்றல் அளவை அடைவதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முக்கிய பாடங்களைத் தக்க வைத்துக்கொண்டு பாடத்திட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் நிலவுகின்ற அசாதாரணமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கான அளவைக் குறைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 30 சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான முடிவினை எடுப்பதற்காகக் கல்வியாளர்களிடம் பரிந்துரைகளைக் கேட்டிருந்தேன். இதனையடுத்து 1,500-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்? கல்வியாளர் வழிகாட்டல் #DoubtOfCommonMan

இதனையடுத்து, சிபிஎஸ்இ 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் உள்ள குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி உள்ளிட்ட சில முக்கியமான அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. பாடத்திட்டத்தின் துணைப்பிரிவுகளாக இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகிய அத்தியாங்களும் நீக்கப்பட்டுள்ளன.

அதேபோல, 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திலிருந்து தற்கால உலகில் பாதுகாப்பு, சுற்றுசூழல் மற்றும் இயற்கை வளங்கள், இந்தியாவில் சமூக மற்றும் புதிய சமூக இயக்கங்கள் உள்ளிட்ட அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், நீக்கப்பட்டுள்ள இந்த அத்தியாயங்களை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்றும் எனினும், அந்த அத்தியாயங்கள் ஆண்டின் இறுதித் தேர்வில் இடம்பெறாது என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையின் வழியாகத் தெரிவித்துள்ளது.

மாணவிகள்
மாணவிகள்

சிபிஎஸ்இ 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக உரிமைகள் மற்றும் கட்டமைப்பு என்ற அத்தியாயமும் பொருளாதாரப் பாடத்தில் இருந்து உணவு பாதுகாப்பு தொடர்பான அத்தியாயமும் நீக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, சாதி, மதம் மற்றும் பாலினம், ஜனநாயக அமைப்பின் சவால்கள் ஆகிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய பாடங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் தற்போது குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொடர்பான நெருக்கடியான சூழலைக் காரணம் காட்டி மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தங்களது விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

`கே.ஜி குழந்தைகளுக்கு இணைய கல்வி.. கொரோனா காலத்திலும் குறையாத வீட்டுப்பாடம்!’ -மதுரை எம்.பி காட்டம்
அடுத்த கட்டுரைக்கு