Published:Updated:

`உயர்த்தப்படும் கல்விக்கட்டணம்; மருத்துவர்கள் எதிர்ப்பு!’- ஜே.என்.யூ வரிசையில் டெல்லி எய்ம்ஸ்

எய்ம்ஸ் மருத்துவமனையின் பொருளாதார இழப்பீடுகளைச் சரிகட்டவே இந்த நடவடிக்கை என்றும் இதற்கான உத்தரவை எய்ம்ஸ் மருத்துவமனைகளின் மத்திய நிர்வாகத்துக்கும் அமைச்சகம் அனுப்பியுள்ளது.

எய்ம்ஸ்
எய்ம்ஸ்

மத்திய அரசின் 6 எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கல்விக்கட்டண உயர்வுக்கான ஆயத்த வேலைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதுதவிர புறநோயாளிகளின் மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்த அரசு முடிவு செய்திருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக எய்ம்ஸ் கல்லூரிகளில் கல்விக்கட்டணமே உயர்த்தப்படவில்லை என்பதும், எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கடந்த 25 ஆண்டுகளாக ஏழைகளுக்கான மருத்துவ வசதிகளை வழங்கும் பொருட்டுக் கல்விக்கட்டணமே உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகமும் சுகாதார அமைச்சகமும் இணைந்து இந்த முடிவை அறிவித்துள்ளன.

எய்ம்ஸ்
எய்ம்ஸ்

எய்ம்ஸ் மருத்துவமனையின் பொருளாதார இழப்பீடுகளைச் சரிகட்டவே இந்த நடவடிக்கை என்றும் இதற்கான உத்தரவை எய்ம்ஸ் மருத்துவமனைகளின் மத்திய நிர்வாகத்துக்கும் அமைச்சகம் அனுப்பியுள்ளது.

எய்ம்ஸ் மத்திய அரசு மருத்துவக்கல்லூரிகள்தான் நாட்டிலேயே மிகக் குறைவான கட்டணத்தில் மருத்துவக் கல்வி தருகின்றன. கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணம் என அத்தனையும் சேர்த்து ஐந்து வருடங்களுக்கு ஒரு மாணவர் ரூ.6000 செலவு செய்தாலே இதுநாள் வரை போதுமானதாக இருந்தது. தற்போது வருடத்துக்கு இந்தக் கட்டணம் ரூ.50,000 முதல் ரூ.70.000 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் ஒடுக்கப்பட்ட அல்லது கல்வி மறுக்கப்பட்ட பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலுவது இனி சவாலாகவே இருக்கும் என்கின்றது எய்ம்ஸ் மருத்துவர்கள் கூட்டமைப்பு. இது தொடர்பாக தங்களது அதிருப்தியையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

``மருத்துவக் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிகளின் நோக்கம். மருத்துவம் பெற வசதி இல்லாதவர்களுக்குமான மருத்துவ உதவிகளைத் தருவதுதான் எங்கள் நோக்கம். அரசு கட்டணங்களை உயர்த்தும்பட்சத்தில் அதை நாங்கள் நிச்சயம் அனுமதிக்க மாட்டோம்" என்று கூறியுள்ளனர்.

ஜே.என்.யூ
ஜே.என்.யூ

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு எதிராக அண்மையில் மாணவர் போராட்டம் வெடித்தது. இதற்கிடையேதான் தற்போது எய்ம்ஸ் மருத்துவக்கல்விக் கட்டணங்களை உயர்த்துவதற்கான அரசின் இந்த அறிவிப்பும் தற்போது வெளிவந்துள்ளது.