Published:Updated:

'கல்விக் கொள்கையில் சண்டையிடும் மத்திய, மாநில அரசுகள்' - வேதனையில் கல்வியாளர்கள்

புதிய கல்விக் கொள்கை

புதிய தேசிய கல்விக் கொள்கையில் மத்திய, மாநில அரசுகள் சண்டையிட்டுவரும் நிலையில் இந்தியா முழுவதும் 20,000 பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதற்குக் கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

'கல்விக் கொள்கையில் சண்டையிடும் மத்திய, மாநில அரசுகள்' - வேதனையில் கல்வியாளர்கள்

புதிய தேசிய கல்விக் கொள்கையில் மத்திய, மாநில அரசுகள் சண்டையிட்டுவரும் நிலையில் இந்தியா முழுவதும் 20,000 பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதற்குக் கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
புதிய கல்விக் கொள்கை

மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை அறிவித்தது. அப்போது, ``தேசிய கல்விக் கொள்கை, பள்ளிக்கல்வியின் அனைத்து மட்டங்களிலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதிசெய்தல், கட்டமைப்பு வசதி மேம்படுத்துதல் ஆராய்ச்சிக்கான கல்வி மையங்களை அமைத்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.  பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிட்ட மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்க உதவுகிறது. மாணவர்களிடம் 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற முக்கியமான திறமைகளை ஏற்படுத்துகிறது. 

அவசியமானவற்றைக் கற்கும் திறனை மேம்படுத்துவதற்கேற்ப பாடத்திட்டத்தைக் குறைக்கிறது. சோதனை அடிப்படையிலான கல்வி மற்றும் சிந்தனைக்குப் பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரையிலும், 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும் தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 

மாணவர்கள்
மாணவர்கள்

இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், மாநிலத்துக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதாகவும் அறிவித்திருக்கிறது. இதற்காக ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் த.முருகேசன் தலைமையில் ஓர் உயர்மட்டக்குழுவை அமைக்க ஆணையிட்டிருக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில கோவை தனியார் கல்லூரி நிகழ்ச்சியில், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் கலந்துகொண்டார். 

அப்போது அவர் அளித்த பேட்டியில், ``தமிழக அரசும், மாநிலக் கல்வி கொள்கையின் மூலம் தேசிய கல்விக் கொள்கையையே பின்பற்றிவருகிறது. தமிழகத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கை எதிர்க்கப்பட்டுவருகிறது. அனைத்து உயர்கல்வியும் தாய் மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம். 12 மாநில மொழிகளில் பொறியியலுக்கான  கேள்வித்தாள்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன” என்றார். 

தமிழக அரசு
தமிழக அரசு

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் 2020-21-ம் ஆண்டில் இந்தியாவில் 20,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டிருப்பது கல்வி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவலின் மூலம் தெரியவந்திருக்கிறது. அதில், '44.85% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதிகள் இருக்கின்றன. அவற்றில் கிட்டத்தட்ட 34% பள்ளிகளில் இணைய இணைப்பு பெறப்பட்டிருக்கின்றன. 

மேலும் 2020-21-ல் 15.09 லட்சமாக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 2021-22ல் 14.89 லட்சமாக இருந்தது. தனியார் மற்றும் பிற நிர்வாகத்தின் கீழுள்ள பள்ளிகள் மூடப்படுவதால் மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை சரிந்திருக்கிறது. 2021-22-ம் ஆண்டில், தொடக்கநிலை முதல் மேல்நிலை வரை பள்ளிக் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை சுமார் 25.57 கோடியாக இருந்தது. இது 2020-21-ம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கையுடன் ஒப்பிடும்போது 19.36 லட்சம் அதிகம். 

இணையம்
இணையம்

2020-21 உடன் ஒப்பிடும்போது 2021-22 -ல் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 1.95% குறைந்திருக்கிறது. 2020-21-ல் 97.87 லட்சமாக ஆசிரியர்களின் எண்ணிக்கை இருந்தது. இது 2021-22-ல் 95.07 லட்சமாக குறைந்திருக்கிறது. முந்தைய ஆண்டைவிட 2021-22-ல் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளில் 0.9%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1.45%, தனியார் பள்ளிகளில் 2.94% மற்றும் பிற பள்ளிகளில் 8.3% ஆகக் குறைந்திருக்கிறது' என்பது உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 

ஒருபுறம் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவோம் என மத்திய அரசும், மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்துவோம் என மாநில அரசும் சண்டையிட்டுவருகின்றன. மறுபுறம் இந்தியாவில் 20,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டிருப்பது வேதனையை  ஏற்படுத்தியிருப்பதாகக் கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

பள்ளிக்கல்வி இயக்குனரகம்
பள்ளிக்கல்வி இயக்குனரகம்

இது குறித்து பொதுக் கல்விக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நம்மிடம் பேசுகையில், "நிதி ஆயோக்கின் பரிந்துரையின்படிதான் பள்ளிகள் மூடப்பட்டுவருகின்றன. எங்கெல்லாம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதோ அல்லது ஆசிரியர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதோ, அந்தப் பள்ளிகளை மற்ற பள்ளிகளுடன் இணைத்துவிடுங்கள் என்று சொல்கிறது. 

நிதி ஆயோக் உருவானதிலிருந்து இதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. அதனுடைய விளைவுதான், இது. ஏழைகள் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அரசியலமைப்பு சட்டம், கட்டணம் இல்லாமல்  அரசை  பள்ளிக்கூடம்  நடத்தச்  சொல்கிறது. இதற்கு எதிராக நிதி ஆயோக் கொடுத்த பரிந்துரையின்படி  மூடப்பட்டிருக்கிறது. 

நிதி ஆயோக்
நிதி ஆயோக்

மேலும் அரசின் பொருளாதாரம் வளர வளர கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. வகுப்புக்கு ஓர் ஆசிரியர், பாடத்துக்கு ஓர் ஆசிரியர் கொடுக்கவில்லை. இதனால்தான் மாணவர் எண்ணிக்கை குறைகிறது. அரசுப் பள்ளிகளைத் திட்டமிட்டு குறைத்துவருகிறார்கள். இது மக்களுக்கு ஏற்புடையது இல்லை. 

இந்த 20,000 பள்ளிகளை மூடுவது என்பது  கவலைக்குரிய  விஷயம். இத்துடன் நிற்கப்போவது இல்லை. இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையும் இவ்வாறு பலவீனமாக இருக்கக்கூடிய பள்ளிகளை மூடச் சொல்கிறது. மேலும், அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகளுடன் இணைத்துவிடுங்கள் என்று சொல்கிறார்கள். எனவே, இதைவிடுத்து கல்வியைப் பிற மேலை நாடுகளைப்போல் இலவசமாக வழங்க வேண்டும்.  பாடத்திட்டத்தைப்  பொறுத்தவரை, ஒவ்வோர் ஐந்து ஆண்டுக்கும் மேம்படுத்தப்பட்டுத்தான் வருகிறது" என்றார்.