Published:Updated:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா? ப்ளஸ் 2 ரிசல்ட் எப்போது? என்ன சொல்கிறார் கல்வியமைச்சர்!

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

இப்போது தமிழக கல்வித்துறைக்கு நெருக்கடியான காலகட்டம்.

பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலேயே கொரோனா பற்றிய பேச்சு தமிழகத்தில் பரவத் தொடங்கியது. கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், மருத்துவர்கள், பல்துறை வல்லுநர்கள் எனப் பலரும் இதுகுறித்து விவாதித்தனர். அரசின் சார்பில் மார்ச் மாதமே நடவடிக்கைகள் சூடுபிடித்தன.

பள்ளி மாணவர்களுக்கு மார்ச் மாதமென்பது மிக முக்கியமான காலகட்டம். 10, 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு இது பொதுத்தேர்வு நடைபெறும் காலம். வருடம் முழுவதும் பள்ளி, டியூசன் எனப் படித்த அனைத்து உழைப்பையும் சாத்தியமாக்கும் காலகட்டம்.

பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புகள்!
பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புகள்!

கொரோனா வைரஸ் காரணமாக, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்படும் எனப் பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், பள்ளிக்கல்வித்துறை அறிவித்தபடி மார்ச் 2 ம் தேதி, ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கின. பள்ளி வளாகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வழக்கம்போல தேர்வுகள் நடைபெற்றன. தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளைச் சந்திக்கவேண்டிய சூழல் வரும் என்பதால், ப்ளஸ் 2 தேர்வை ரத்துசெய்யவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் நடைபெறும் சி.பி.எஸ்.இ , ஐ.சி.எஸ்.சி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

ப்ளஸ் ஒன் தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கின. மார்ச் 26 நடைபெறவிருந்த வேதியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகள் மட்டும் நடைபெறவில்லை. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்து ஒத்தி வைக்கப்பட்டன.

மார்ச் 24 -ல் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த அசாதாரண சூழல் காரணமாகத் தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதியன்று நடைபெற்ற ப்ளஸ் 2 வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வுகளை சுமார் 34,000 மாணவர்கள் எழுத வரவில்லை. தமிழகத்தில், இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களுக்குப் பின்னாள்களில் தேர்வுகள் நடத்தப்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்கள், தாங்கள் நடத்தவிருந்த பொதுத் தேர்வுகளை ஒத்திவைத்தன. பல தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை

இப்போது தமிழக கல்வித்துறைக்கு நெருக்கடியான காலகட்டம். தேர்வு எழுதவியலாத 34,000 மாணவர்களுக்கான தேர்வை நடத்துவது, நடந்து முடிந்த ப்ளஸ் 1, ப்ளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி, அதன்பிறகு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வுகள், நீட், JEE போன்ற தேர்வுகள் குறித்த தெளிவான விளக்கங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது, சில மாதங்கள் தாமதமாக பள்ளித் திறக்க வேண்டிய சூழல், பள்ளி திறந்ததும் மாணவர்கள் சகஜமாகப் பள்ளிக்குத் திரும்ப வேண்டிய நிலையை ஏற்படுத்தித் தருவது உள்ளிட்ட பல சவால்கள் அரசின்முன் நிற்கின்றன.

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இதுகுறித்து 12-ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர் ஒருவரிடம் பேசினோம். ``கொரோனா பத்தின பயத்தைவிட ரிசல்ட் என்ன மாதிரி வரும்கிற பயம் எனக்கு இருக்கு. எக்ஸாம் நடக்கும்போதும் ஒரு மாதிரி வித்தியாசமா ஏதோ நடக்குற மாதிரி ஃபீல் இருந்தது. என் ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப பேருக்கு அவர்களோட நீட் கோச்சிங் சென்டர்ல 'ஆன்-லைன்' கிளாஸ் எடுக்குறாங்க. சிலர் நீட் ரொம்ப லேட்டா நடக்கும்னு சொல்றாங்க. சிலர் ரிசல்ட்டே ரொம்ப லேட்டாதான் வரும்னு சொல்றாங்க. எங்க சார்கிட்ட போன் பண்ணி கேட்டோம். அவரும் நியூஸ்ல சொன்னாதான் தெரியும்னு சொன்னாங்க" என்றார்.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவரின் பெற்றோர் ஒருவரிடம் பேசினோம், ``ஒட்டுமொத்தமா இந்த ஒரு மாசம் என்ன நடக்குதுனே புரியல. பசங்க எக்ஸாமின்போது இயல்பாவே ஒருவிதப் பதற்றத்தோட இருப்பாங்க. ஆனா, இந்த முறை அது இன்னும் அதிகமா இருந்ததைப் பார்க்க முடியுது. எக்ஸாம், ரிசல்ட், இதையெல்லாம்தாண்டி கல்லூரிகள் வரப்போற அட்மிசனை எப்படித் தீர்மானிச்சு வச்சுருக்காங்கனு தெரில. ஸ்கூல் ஃபீஸ், காலேஜ் ஃபீஸ்னு இந்த முறை பெத்தவங்களுக்குப் பணமும் மிகப் பெரிய சிக்கலா இருக்கப்போகுது. அரசாங்கம் இதைப் பத்தி என்ன முடிவு பண்ணி வெச்சுருக்காங்கனு தெரியல. 2000 பேர் படிக்குற ஸ்கூல்ல எப்படி பசங்க ஒண்ணா உட்காராம இருக்க முடியும். கொரோனா முடிஞ்சாலும் அதைப் பத்தின பயம் பசங்களுக்கும் எங்களுக்கும் இருக்கும். இதெல்லாம் எப்ப முடியும்னு தெரியல. எப்போ என்ன சொல்லப்போறங்கனு டி.வி முன்னாடியே உக்காந்து கவனிச்சுக்கிட்டு இருக்கோம்" என்றார் பரிதவிப்புடன்.

தொடக்கப் பள்ளி விடுமுறை; திரையரங்குகள் மூடல்!- முதல்வர் பழனிசாமி சுட்டிக்காட்டிய 5 விஷயங்கள் #Corona

இந்தச் சூழ்நிலையில் அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் பேசினோம்.

கல்வியாளர் நெடுஞ்செழியன்
கல்வியாளர் நெடுஞ்செழியன்

``நமது அரசு கவ்வித்துறையைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே அரசு சாராத கல்வியாளர்கள் கொண்ட நிபுணர்கள் குழுவை வைத்திருக்கவில்லை. அப்படி ஒரு குழு இல்லாமலிருப்பதன் விளைவை வரும் மாதங்களில் நம் கல்வித்துறை எதிர்கொள்ளப் போகிறது."

ஆன்லைன் வழிக் கல்வி:
ஆன்லைன் வழிக் கல்வி:
ஆன்லைன் வழிக் கல்வி:

ஒருவேளை சில கோச்சிங் சென்டர்கள் நடத்துவதுபோல ஆன்லைனில் பாடம் கற்றுத் தருவதற்கான சூழல் இங்கு சாத்தியமா என்றால் அதுவும் கேள்விக்குறிதான். ஏனென்றால் தமிழகத்தைப் பொறுத்தவரை 70 சதவிகித மாணவர்கள் ஆன்லைன் பயிற்சி பெறும் அளவிலான தொழில்நுட்பக் கட்டமைப்பு கொண்ட சமூகப் படிநிலையில் இல்லை. 30 சதவிகித மாணவர்களுக்கு மட்டுமே இதற்கான தன்னிறைவான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஒருவேளை, அப்படித் திட்டமிட்டால் தொலைக்காட்சியின் வழியே மாணவர்களைச் சென்றடைவதுதான் சாத்தியமிக்க வழிமுறையாக இருக்கும்.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குறித்து அரசு, கட்டாயம் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், பெரும்பாலான மாணவர்களின் வீட்டில் பெரும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருக்கும். அது மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் பாதித்திருக்கும். அன்றாடம் வேலைக்குச் சென்று வரும் பெற்றோர்கள் பலரும் வேலையிழந்து, வருமானம் இழந்து நிற்கிறார்கள். அதை அரசு கருத்தில்கொண்டு செயல்படவேண்டும். அவர்களுக்கான உணவு முதற்கொண்டு யோசிக்க வேண்டும் என்பதே யதார்த்தம்.

என்ன செய்ய வேண்டும் அரசு?

அரசு மக்களின் பாதுகாப்பையே உறுதி செய்யத் தவறிய நிலையில் அரசை நம்பி, குழந்தைகளை எவ்விதம் அனுப்புவார்கள். மேலும், பல பெற்றோர்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல தனியார் பள்ளிகளில் இப்போதே கல்விக்  கட்டணம் கேட்டு வருவதாக, பெற்றோர் சிலர் தெரிவிக்கின்றனர். இதையெல்லாம் எப்படி மக்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள், அதற்கு அரசு தரப்பில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இந்தச் சூழலிலாவது கல்வித்துறை சார்ந்து நிபுணர்கள் குழுவை உருவாக்க வேண்டும். எப்போதுமே பிரச்னைகள் ஏற்படும் முன்பே அதை எப்படிக் கையாள்வது என்பதைத் திட்டமிட வேண்டும். ஆனால், அதை அரசு செய்வதே இல்லை. இது வெறுமனே மாணவர்களின் கல்விப் பிரச்னை மட்டுமல்ல. எதிர்கால சமூகத்தின் பிரச்னை என்பதை அரசு உணர வேண்டும். வெளிநாடுகளில் பின்பற்றும் அதே முறையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. நமக்கான நல்திட்டங்களை வகுக்க வேண்டும். அரசு தன்னை மறுபரிசீலனைக்கு உட்படுத்திச் செயல்பட வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

இது குறித்து பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் பேசினோம். ``மாணவர்கள் நலன் குறித்து நாங்களும் சிந்தித்தே முடிவெடுக்கிறோம். இது கொள்கை சார்ந்து, முதல்வர் மற்றும் துறையினருடன் கலந்தாலோசித்து எடுக்கப்படவேண்டிய முடிவு. தற்போது அரசின் முழுக் கவனமும் கொரோனாவிலிருந்து தமிழக மக்களைக் காப்பதிலேயே உள்ளது. கல்வித்துறை சார்ந்த முடிவுகளை முதல்வர் மற்றும் துறையினரிடம் விவாதித்து பின்னர் அறிவிப்போம்." என்றார்.

அடுத்த கட்டுரைக்கு