Election bannerElection banner
Published:Updated:

கொரோனா கால பொதுத் தேர்வுகள்... பிரச்னைகளும், சவால்களும்!

கொரோனா காலத்தில் பொதுத் தேர்வுகள்
கொரோனா காலத்தில் பொதுத் தேர்வுகள்

கொரோனா காலத்தில் தேர்வுகளை எதிர்கொள்ள என்னனென்ன பிரச்னைகளை மாணவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்?

ஊரே ஐபிஎல் போட்டிகள் பார்த்து குதூகலிக்க, மற்றொருபுறம் தேர்தல் முடிவுகளுக்குக் காத்திருக்க...

"நீங்கள் பயணித்து வந்த அந்தப் புறநகர்ச் சாலையோரம்... யாரும் கவனிக்காத சவலைப்பிள்ளையைப்போல் பெயர்ப் பலகை கூட இல்லாமல் ஒரு ஊர் கடந்திருக்குமே. அதுதான் எங்க ஊர்" எனும் கவி வளநாடனின் கவிதையைப் போல வீட்டில் பொதுத்தேர்வு எழுதுவோரும் கவனிக்கப்படாமல் இருக்கின்றனர்.

குடும்ப வாட்ஸ்அப் குழுவில் ஆரம்பித்து, தெரு முழுக்க எளிதில் பிரபலமடைந்து விடுகின்றனர் இவன் இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதுபவன் என்று! பலர் நலம் விசாரிக்க ஆரம்பிப்பதே எக்ஸாம் எப்பனுதான் ஆரம்பிக்கிறார்கள். குடும்ப மானம், கெளரவமான மதிப்பெண், போட்டித்தேர்வு, மருத்துவ, பொறியியல் படிப்பில் நல்ல கல்லூரி, எதிர்வீட்டு பெண்ணைவிட எக்ஸ்ட்ரா ஒரு மதிப்பெண்ணாவது பெற்றுவிட வேண்டுமென்று மைலேஜ் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கின்றனர் மாணவ மாணவியர்.

கொரோனா காலத்தில் பொதுத் தேர்வுகள்
கொரோனா காலத்தில் பொதுத் தேர்வுகள்

மிரட்டும் பாடச்சுமை

பொதுத்தேர்வு எழுதுவோரில் முக்கியமானவர்கள் அறிவியல் பிரிவு மாணவர்கள். நீட் தேர்வு, ஜே.இ.இ பொறியியல் தேர்வு என இவர்கள் சற்று இன்னும் மெனக்கெட வேண்டியுள்ளது. பயமுறுத்தும் பாடச்சுமைகள் வேறு ஒருபுறம்!

உதாரணத்திற்கு, பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல் புத்தகம் பக்கம் வாரியாக தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி இயற்பியல் - 656 (648), வேதியியல் 672 (624), தாவரவியல் 608(560), விலங்கியல் 472 (440), கணிதம் - 672(608) பக்கங்கள் என ஒவ்வொரு பாடமும் ஐநூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள் இன்றைய மாணவர்களை பயமுறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது கொரோனா காலத்தில் ஒவ்வொரு பாடத்திலும் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன. பொதுவாக சில எளிய பகுதிகளே நீக்கியுள்ளனர்.

உதாரணத்திற்கு வேதியியல் பாடத்தில், 'அன்றாட வாழ்வில் வேதியியல்' பாடம் கற்றலில் குறைபாடு உடைய மாணவர்கள் எளிதில் மதிப்பெண் பெறும் பகுதி. இதனை தற்போது முற்றிலும் நீக்கியுள்ளனர்.

முந்தைய ஆண்டுகளில்...

பொதுவாக இதனை ஆசிரியர்கள் ஜூன் மாதம் துவங்கி டிசம்பர் மாதத்திற்குள் முடித்தால்தான் திருப்புதல், சுழற்சித் தேர்வுகளுக்குத் தயார்படுத்த முடியும். ஒன்றரை ஆண்டுகளில் முடிக்க வேண்டியதை ஆசிரியர்கள் 7 மாதத்தில் முடித்து மாணவர்களை படிக்க வைக்க வேண்டும். தற்போது நான்கு மாதத்தில் படிக்க வேண்டிய கட்டாயம். ப்ளூ பிரின்ட் எல்லாம் இல்லை. அட்டை டூ அட்டை படித்தால்தான் பாஸ் என்பதால் ஒரு கட்டத்தில் அவசரப்பட்டு அறிவியல் பாடம் எடுத்து விட்டோமோ எனும் விரக்தி மனநிலைக்கு மாணவர்கள் வருகிறார்கள். எந்தப் பகுதியிலிருந்து கேள்வி வருமென்று ஒரு வித பதற்றத்துடனே மாணவ மாணவியர் இருக்கின்றனர்.

கொரோனா காலத்தில் பொதுத் தேர்வுகள்
கொரோனா காலத்தில் பொதுத் தேர்வுகள்

அறிவியல் பிரிவினர்...

70 மதிப்பெண்ணுக்கு 54 மதிப்பெண்கள் பயன்படுத்தி (applied) எழுதும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில் 70 மதிப்பெண் எழுத்துத்தேர்வும் 30 மதிப்பெண் பிராக்டிகல் மற்றும் இன்டர்னெல் மதிப்பெண்களும் ஆகும். இதில் 70க்கு 15 மதிப்பெண்ணும் கலைப்பிரிவினர் 90க்கு 25 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். 30க்கு 20 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும். அல்லது மாற்றி எடுத்தாலும் மொத்தம் 35 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

மாணவர்கள் மனநிலை

தேர்வுக்காக பாடத்திட்டம் குறைக்கப்பட்டதில் மொத்த பாடத்தில் சில பகுதிகள் மட்டுமே நீக்கியுள்ளனர். அதிலும் சில எளிய பகுதிகளை நீக்கிவிட்டதால் ஏமாற்றமாகிவிட்டது. இதுவரை இரு திருப்புதல் தேர்வுகள் (50 மதிப்பெண்கள் & 70 மதிப்பெண்கள்) நடத்தியுள்ளனர். இன்னொரு மாதம் தேர்வுகளை ஒத்தி வைத்தால் மேலும் சில திருப்புதல் தேர்வு எழுதி பயிற்சி பெறலாம் என்கின்றனர் சில மாணவிகள்.

இதுவரை நடத்திய ஆன்லைன் வகுப்புகள் குறித்து கேட்டபோது தனியார் பள்ளிகளில் முதலில் இருந்த ஈடுபாடும் ஆர்வமும் நாள்பட நாள்படக் குறைந்துவிட்டது. ஆசிரியர்கள் பாடங்களை முடித்துவிடும் எண்ணத்திலேயே முடித்ததாகவும், கலந்துரையாடல் இல்லையெனவும் தெரிவித்தனர். மேலும் சில மாணவ மாணவியர் வீடியோவை OFF-ல் வைத்துவிட்டு கட் அடித்து சென்ற நிகழ்வும் நடந்தேறி இருக்கிறது. நேரடி கற்பித்தல் போல் ஆன்லைன் பாடங்கள் இல்லை. இம்முறை தோல்வியடைந்துள்ளது.

அரசுப்பள்ளியில் பயிலுவோர் நிலை இன்னும் மோசம். கோவை, திருப்பூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் பலர் வேலைக்கு சென்றுவிட்டதால் ஆன்லைன் வகுப்புகள் வரவில்லை. பள்ளி வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது எனச் சொல்லிவிட்டதால் பலர் பள்ளிக்கு வருவதில்லை. சிலர் ப்ராக்டிகல், திருப்புதல் தேர்வுக்கு மட்டும் வந்து செல்கின்றனர். பல பெற்றோர்கள் சாதாரண போன் வைத்திருப்பதால் குழந்தைகளையும் ஒன்றும் சொல்ல இயலாத கையறுநிலையில் இருந்துள்ளனர்.

இன்னும் சில மாணவர்கள் அரசு ஆல்பாஸ் அறிவித்துவிடும் எனும் மனநிலையில் தேர்வுக்கு முழுமையாகத் தயாராகாத மனநிலையில் இருக்கின்றனர்.

ஆசிரியர்கள் நிலை

ஆன்லைன் வகுப்புகள் சரிவர அமையாததால் மீண்டும் பாடங்களை முதலில் இருந்து ஜனவரியில் நடத்த ஆரம்பித்தனர். 8 மாதங்களில் நடத்த வேண்டிய பாடங்களை இரண்டு, மூன்று மாதங்களில் தயார் செய்திருக்கின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் 25 பேர் மட்டும் அமர வைக்கப்படுவதால் 300 பேர் பயிலும் பள்ளியில் 12 வகுப்புகளுக்கு இரு ஆசிரியர்கள் பாடம் நடத்தியுள்ளனர்.

கொரோனா காலத்தில் பொதுத் தேர்வுகள்
கொரோனா காலத்தில் பொதுத் தேர்வுகள்

மொத்தமுள்ள இந்த நான்கு மாதத்தில் சில மாவட்டங்களில் திருப்புதல் தேர்வு நடந்துள்ளது. முதல் இரு தேர்வுகள் காலை, மாலை என நான்கு நாள்களும், மூன்றாம் தேர்வு ஆறு நாள்களும் என 14 நாள்களும் தேர்வில் கழிந்துள்ளன. மீதமுள்ள நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆசிரியர் 20 பக்கங்கள் நடத்தினால் ஆறு ஆசிரியர்கள் நடத்திய 120 பக்கங்களை தினசரி ஒரு மாணவன் படிக்க வேண்டியிருக்கிறது.

Attendance கட்டாயமில்லாததால் பலரை வகுப்பறைக்கு வரவைக்க முடியவில்லை. தொழில் நகரங்கள் மற்றும் உள்ள பல ஊர்களில் கட்டட வேலை, தினசரி கூலி வேலைக்குச் செல்வதால் படிப்பில் நாட்டமின்றி இருக்கின்றனர். கவனத்தைச் சிதறவைக்கும் திறன்பேசியில் மூழ்கிவிட்டனர். சமூக ஊடகங்களில் அதிக நேரங்கள் செலவிடுகின்றனர். சில பெற்றோர்கள் போதிய அக்கறையின்மையால் ஆசிரியர்களுடன் ஒத்துழைப்பதில்லை.

CBSE பள்ளிகளில் இதைவிட சுமை அதிகம். சில பள்ளிகளில் பேக்கேஜ் முறையில் ஆசிரியர்களை கான்ட்ராக்ட் முறையில் முடித்துக் கொடுக்க வேகமாய் பாடங்களை நடத்தி விரைந்து முடித்து வருகின்றனர்.

கல்வியாளர்கள் பார்வையில்...

ப்ளஸ் 2 மதிப்பெண்கள்தான் மருத்துவம், பொறியியலில் சேர ஆதாரமாக இருப்பதால் அவசரகதியில் தேர்வுகளை நடத்த வேண்டாம் என்கின்றனர். தனியார் பள்ளிகள் எப்போதும் போல் பிளஸ் 1ல் ப்ளஸ் 2 பாடங்கள் நடத்துகின்றனர். தேர்வுகளில் சமமின்மை நிலவுவதாக ஆதங்கப்படுகின்றனர். தேர்வு அழுத்தத்திற்கு மாற்றாக ஆண்டு இறுதியில் ஒட்டுமொத்தமாக பாடப்பகுதிகளை எழுதாமல் 'செமஸ்டர்' முறையில் தேர்வு நடத்த மாற்று வழிகளை கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா காலத்தில் பொதுத் தேர்வுகள்
கொரோனா காலத்தில் பொதுத் தேர்வுகள்

ஆன்லைனில் தேர்வு நடத்தவும் பாடச்சுமை, பாடங்கள் புரியாமை, பெற்றோர் நெருக்கடி போன்றவை பொதுத்தேர்வு எழுதுவோரை மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அறிவியல் இயக்கத்தினர் போன்றோர் கடந்த காலங்களில் முப்பருவ கல்வி முறை, எழுத்துத்தேர்வு முறையை குறைத்து அகமதிப்பீட்டு முறைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தியுள்ளனர். கொரோனா பரவல், கோடைவெயில் தவிர்த்து தாமதமாகவாவது நடத்தலாம்.

தேர்வு குறித்த பார்வை!

குறுகிய காலமே உள்ளதால் மாணவர்களும் ஆசிரியர்களும் கூறும் காரணங்களில் அடிப்படையானது இந்த ஆண்டு Blue Print முறைப்படி தேர்வுத்தாள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதுதான். கொள்குறி வினாக்கள் அதிகம் தரப்பட வேண்டும். தேர்வினை ஒரு மாத காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும். மே மாதம் மாதிரி வினாத்தாள்களை கொடுத்து தேர்வு குறித்த பயத்தினை நீக்கி தாமதமாய் தேர்வினை ஜூன் மாதத்தில் துவக்கலாம்.

- மெல்லினா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு