Published:Updated:

``இந்த உலகம் இவ்ளோ பெருசா..!’’ - நீதிக்காக பழங்குடியின இளைஞரின் முதல் ரயில் பயணம்

நவீன் இளங்கோவன்
ரமேஷ் கந்தசாமி

‘பெரிய ஊரு, பிரமாண்டமான பீச், பரபரப்பாக அலையும் மக்கள் என சென்னையைப் பார்க்கிறப்பதான், இந்த உலகம் எவ்ளோ பெருசுனு தெரியுது’...

முதல் ரயில் பயணத்தின்போது சந்திரன்
முதல் ரயில் பயணத்தின்போது சந்திரன் ( ரமேஷ் கந்தசாமி )

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா, சுண்டப்போடு மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர், சந்திரன் (18). இவர் கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் வேளாண்மைச் செயல்பாடுகள் - தொழிற்பாடப் பிரிவில் படித்து 444 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். மேல்படிப்பிற்காக கால்நடை மருத்துவம் மற்றும் பி.எஸ்சி அக்ரி படிப்பிற்கு விண்ணப்பித்திருக்கிறார். அதில், கால்நடை மருத்துவப் படிப்பிற்கான ரேங்கிங்கில், பழங்குடியினர் பிரிவில் மாநில அளவில் சந்திரன் முதலிடம் பிடித்திருக்கிறார். எப்படியாவது மேல்படிப்பு படித்து, தன் குடும்பத்தின் வறுமையைத் துடைத்திடுவோம் என்று நினைத்த சந்திரனுக்கு, அரசின் இட ஒதுக்கீடு ஒரு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல் ரயில் பயணத்தின்போது சந்திரன்
முதல் ரயில் பயணத்தின்போது சந்திரன்
ரமேஷ் கந்தசாமி

கால்நடை மருத்துவம் படிப்பதற்கு மொத்தமுள்ள 360 இடங்களில், வொகேஷனல் குரூப் எடுத்து படித்த மாணவர்களுக்கு 18 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. அதேபோல, வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி அக்ரி படிப்பதற்கு வொகேஷனல் குரூப்பில் படித்த மாணவர்களுக்கு மொத்தம் 44 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. வொகேஷனல் குரூப் எடுத்து படித்த அனைத்துப் பிரிவினருக்கும் சேர்த்து இப்படி குறைந்த அளவு இடங்களே ஒதுக்கப்படுகின்றன. இதனால், இருக்கின்ற குறைந்தபட்ச சீட்டில் பழங்குடியினருக்கான ஒரு சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே இருப்பதால் சந்திரனுக்கு படிப்பதற்கு சீட் கிடைக்காத நிலை. அரசின் இந்த இட ஒதுக்கீட்டுச் சிக்கலால், உடைந்து போயிருக்கும் சந்திரன், தன்னுடைய எதிர்காலத்திற்கான பதில் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவிருக்கிறார்.

அந்த வகையில், ஈரோட்டிலிருந்து ஒருசிலரின் உதவியோடு சென்னைக்குச் சென்ற சந்திரன், வழக்கறிஞர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். தன்னுடைய எதிர்காலத்திற்கான நீதி கேட்டு வாழ்க்கையின் முதல் ரயில் பணத்தை மேற்கொள்வோம் என சந்திரன் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். ஆம், சந்திரனின் முதல் ரயில் பயணம் இதுதான்.

வழக்கு தொடுக்க சென்னைக்குச் சென்ற சந்திரன்
வழக்கு தொடுக்க சென்னைக்குச் சென்ற சந்திரன்
ரமேஷ் கந்தசாமி
``18 சீட்டில் ஒரு சதவிகிதம் இடஒதுக்கீடு என்றால்..!” - கலெக்டரிடம் கலங்கிய பழங்குடியின மாணவன்

இதுகுறித்து சந்திரனிடம் பேசினோம். “எப்படியாவது போராடி சீட் வாங்கிடுவோம்ங்கிற நம்பிக்கை இருக்கு. இந்தத் தடவை எனக்கு சீட் கிடைக்காமப் போனாகூட, நான் போராடி அடுத்த வருஷமாவது சீட் வாங்கிடுவேன். திங்கட்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவிருக்கிறோம். கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து, ஜீப், பேருந்து போன்றவற்றில் பயணித்த எனக்கு, இந்த முதல் ரயில் பயணம் வித்தியாசமான அனுபவமாக இருக்கு. முதல் தடவையா கடல் பார்த்தேன். பெரிய ஊரு, பிரம்மாண்டமான பீச், பரபரப்பாக அலையும் மக்கள் என சென்னையைப் பார்க்கிறப்பதான் இந்த உலகம் எவ்ளோ பெருசு, இங்க எவ்ளோ விஷயங்கள் இருக்குன்னு தெரியுது. நாமளும் படிக்கணும்ங்கிற ஒரு பெரும் தன்னம்பிக்கையை இந்த சென்னைப் பயணம் கொடுத்திருக்கு” என்றார்.