Published:Updated:

`நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்’ - சென்னை மாணவர் மீது தேனியில் வழக்குப் பதிவு!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Theni Medical College
Theni Medical College

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் இந்தக் கல்வியாண்டில் எழுதிய மாணவர்களில் 100 பேர், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அதில், சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது.

Kaana Vilakku Police Station
Kaana Vilakku Police Station

இது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன், ``சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக, ஒருவர் மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.

Deen Rajenthiran
Deen Rajenthiran

பின்னர், கானாவிலக்கு காவல்நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தப் புகார் உண்மை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கானாவிலக்கு காவல்நிலையத்தில் விசாரித்த போது, “நீட் நுழைவுத்தேர்வு எழுதியது ஒரு நபர் என்றும், வகுப்பிற்கு வந்தது வேறொரு நபர் என்றும், அசோக் கிருஷ்ணன் என்பவர் மின்னஞ்சல் மூலமாக புகார் கொடுத்ததாகவும், இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் மருத்துவக் கல்லூரி டீன், புகார் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில், முதல் கட்டமாக விசாரணை செய்தோம்.

மகாராஷ்டிராவில் தேர்வு; தேனி  மருத்துவக் கல்லூரியில் சீட்!-நீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள்மாறாட்டம்?

குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால், உதித் சூர்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து நீட் தேர்வு எழுதிய நபர் என இருவர் மீது ஆள்மாறாட்டம், போலியான ஆவணங்கள் தயார் செய்தல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் உதித் சூர்யாவிடம் விசாரிக்க இருக்கிறோம்” என்றனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.