Published:Updated:

`சர்வர் ஃபெயில்!' - தேர்வு எழுத முடியாமல் தவித்த சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள்

 சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்

கடந்த 18,19-ம் தேதிகளில் மாணவர்களுக்கு நடத்திய மாதிரி தேர்வுகளிலும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு அதனால் அந்தத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் இன்றும் ஆன்லைன் தேர்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் நீண்ட நாள்களாகத் திறக்கப்படாத நிலையில், வகுப்புகளும் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில், சென்னைப் பல்கலைக்கழகம் (Madras university) மற்றும் அதைச் சார்ந்த கிளை கல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

online exam (Representational Image)
online exam (Representational Image)
Photo Courtesy: Pixabay

செப்டம்பர் 21-ல் தொடங்கி 30-வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் காலை 9 மணிக்குத் தேர்வு தொடங்கி 10.30 மணிக்கு முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்பில் உள்ளபடி சென்னை பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களின் முதல் தேர்வு இன்று தொடங்கியது. தேர்வுக்கான வினாத்தாளைப் பெறுவதற்காக மாணவர்கள், நிர்வாகம் அனுப்பி வைத்த exam.unom.ac.in என்ற வெப்சைட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். ஆனால், அதற்குள் செல்ல முடியவில்லை. 9 மணிக்குக் கிடைக்க வேண்டிய வினாத்தாள் 10.30 ஆகியும் கிடைக்காததால் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்துள்ளனர். மாணவர்கள், பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அவர்கள் சரியான மாற்று ஏற்பாடு செய்துதரவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த, சென்னை பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவி ஒருவர்,

``இன்று காலையில் நடைபெற இருந்த 9 மணி தேர்வுக்குத் தயாராகி கல்லூரியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட லிங்குக்குள் சென்றோம். முதலில் `சர்வர் ஃபெயில்' என்று வந்தது. சிறிது நேரம் கழித்துதான் அதற்குள் செல்ல முடித்தது. ஆனால், அதில் கேட்கப்பட்ட எங்களைக் குறித்த தகவல்களைப் பதிவு செய்த பிறகும் வினாத்தாள் கிடைக்கவில்லை. தேர்வு எழுத எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த 90 நிமிடங்களும் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே முடிந்துவிட்டன.

Education (Representational Image)
Education (Representational Image)

11 மணிக்கு மேல்தான் வினாத்தாளைப் பெற முடிந்தது. தேர்வு எழுதி முடித்த பிறகு, அதற்கான விடைத்தாளைச் சரியான முறையில் அப்லோட் செய்யவும் முடியவில்லை. சர்வர் பழுதாகிவிட்டது என்று சொல்லி, விடைத்தாளை முழுவதுமாக அனுப்ப முடியாது என ஒவ்வொரு பக்கமாக அனுப்பச் சொல்கிறார்கள். மொத்தம் 18 பக்கங்கள். ஒரு பக்கத்தை அப்லோட் செய்த பிறகு, ரீலோட் செய்து 5 நிமிடங்களுக்குப் பிறகே மற்றொரு பக்கத்தை அனுப்ப முடியும். ஒரு பக்கத்தை அப்லோடு செய்யவே 30 நிமிடம் ஆகிறது. 18 பக்கங்களையும் அனுப்ப எப்படியும் இரவு தாண்டிவிடும். இது குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மிகவும் குழப்பமாகவும் மன உளைச்சலாகவும் உள்ளது" என்று கூறினார்.

30 ஆண்டு உழைப்பில் 3 கி.மீ கால்வாய் வெட்டிய விவசாயி... டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா!

இந்தப் பிரச்னை குறித்து நம்மிடம் பேசிய சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தினர், ``இந்த இறுதித் தேர்வைக் கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகிறார்கள். அனைவரும் ஒரே நேரத்தில் வெப்சைட்டுக்குள் செல்ல நேர்வதால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. மேலும், முதல் முறையாக ஆன்லைனில் தேர்வுகளை நடத்துவதால் எங்கள் பக்கமும் சில குறைகள் இருக்கவே செய்கின்றன. இதைக் கவனத்தில் கொண்டு மாணவர்களுக்கு விதிமுறைகளில் சில விலக்குகளையும் அளித்துள்ளோம். தற்போது தேர்வு எழுதுவதிலிருந்த டெக்னிக்கல் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டுவிட்டன. விடைத்தாளை அப்லோட் செய்வதிலும் மாணவர்களுக்குப் பிரச்னை இருப்பதால், அதற்கான நேரத்தை இன்று முழுவதும் நீட்டித்துள்ளோம். நாளை நடைபெறப்போகும் தேர்வில் இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்" என்றனர்.

ஆன்லைன் இறுதி செமஸ்டர் தேர்வுக்கு முன்னோட்டமாகச் சென்னை பல்கலைக்கழகம் கடந்த 18,19-ம் தேதிகளில் மாணவர்களுக்கு நடத்திய மாதிரி தேர்வுகளிலும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு அதனால் அந்தத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதே, ``இறுதி செமஸ்டர் தேர்வை எழுதும்போது இதேபோன்று பிரச்னை வந்தால் மாணவர்களுக்குச் சிக்கல் ஏற்படாதா?" என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்விலும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு