Published:Updated:

`ஆற்றைக் கடந்து சிரமப்பட்டுப் படித்தேன்!’ - கல்லூரி விழாவில் முதல்வர்

கல்லூரி விழாவில் எடப்பாடி பழனிசாமி
கல்லூரி விழாவில் எடப்பாடி பழனிசாமி

``பெண் பிள்ளைகளாகிய நீங்கள், மிகுந்த கவனமாகவும், தன்னம்பிக்கையோடும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வாழ வேண்டும்'' என்று மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார் முதல்வர்!

ஈரோடு - பெருந்துறை சாலையில் திண்டல் பகுதியில் அமைந்திருக்கிறது வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இந்த வேளாளர் கல்வி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். உடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தனியார் நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் ஈரோடு வந்திருந்தாலும், சாலை நெடுகிலும் கொடிகளையும், பேனர்களை குவித்திருந்தனர் அ.தி.மு.க-வினர்.

Taminnadu CM in College Event
Taminnadu CM in College Event

கல்லூரி வளாகத்தினுள் இருபுறமும் நின்றிருந்த மாணவிகள், முதல்வர் கான்வாய் வந்தபோது கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். அதன்பிறகு நிகழ்ச்சி நடந்த சுமார் 2 மணி நேரமும், கணக்கு வகுப்பில் இருந்தது மாதிரி அரங்கு முழுக்க அவ்வளவு நிசப்தம்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் காவிரி நாயகன், குடிமராமத்து நாயகன் என எடப்பாடியாருக்கு டிஸைன் டிஸைனாக பட்டங்களை வழங்கினார்கள். அரசின் திட்டங்களைப் புள்ளி மற்றும் தசம இலக்கங்கள் மாறாமல் சொன்னவர்கள், கல்வியைப் பற்றி எதுவும் பேசவில்லை. முதல்வரின் சாதனைகளை அடுக்கி ஒரு குறும்படம் போட்டுக் காட்டப்பட்டது. மேடையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் அன்பழகனுக்குப் பேச வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. ஆனால், மேடையிலிருந்த அமைச்சர் தங்கமணி பேசவில்லை. இதன் காரணம் என்ன என்பது முதல்வருக்குத்தான் வெளிச்சம்.

Gk Vaasan - Edappadi palanisami
Gk Vaasan - Edappadi palanisami

ஒருவழியாக கடைசியில் எடப்பாடியார் மைக் பிடித்துப் பேச ஆரம்பித்தார். பெண்களுக்காக அம்மாவின் அரசு என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது தெரியுமா எனப் பட்டியலிட்டார். இடையிடையே `பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினிற்’ என்ற பாரதியார் வரிகள், `ஒரே இறக்கையுடன் பறவை பறக்க முடியாது’ என்ற விவேகானந்தர் வரிகள் என கலந்துகட்டி பேசினார்.

``கல்விக்கென ஏராளமான சலுகைகள், திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்வதால், இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு தான். மாணவிகள் படிக்கும்போது அவர்களுடைய கவனம் முழுவதும் படிப்பில்தான் இருக்க வேண்டும். உங்கள் பெற்றோர்களின் கனவை நனவாக்க பாடுபட வேண்டும். ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை பாதுகாத்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மற்றவர்கள் களவாடிவிடுவார்கள். நம் உயிர் இருக்கின்றவரை ஒட்டி இருக்கின்ற ஒரே செல்வம் கல்விச் செல்வம் மட்டும்தான்” என்று மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Tamin nadu CM Edappadai palanisami speech
Tamin nadu CM Edappadai palanisami speech

தொடர்ந்து பேசியவர், ``நான் படிக்கின்றபொழுது நடந்துசென்று தான் பள்ளியில் படித்தோம். எங்கள் ஊரிலிருந்து ஆற்றைக் கடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஆற்றிலே தண்ணீர் வந்தால், பரிசலில் சென்றுதான் படிக்க முடியும். ஆனால், இன்றைக்கு ஐந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து இருக்கின்றது. இப்பொழுது அரசாங்கம் நிறைய சலுகைகளைக் கொடுக்கின்றது. அந்தச் சலுகைகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு, முன்னேற வேண்டும். யூடியூப், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பெண் பிள்ளைகளாகிய நீங்கள், மிகுந்த கவனமாகவும், தன்னம்பிக்கையோடும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வாழ வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு