வழிகாட்டு நெறிமுறைகளை மதிக்காத கல்லூரிகள்... கேள்விக்குள்ளாகிறதா மாணவர்களின் பாதுகாப்பு?

அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை என்று மாணவர்களும், இவற்றைப் பின்பற்ற முடிவதில்லை என ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.
கொரோனாவால் கடந்த வருடம் தமிழகத்தில் மூடப்பட்ட கல்வி நிலையங்கள் கடந்த மாதத்திலிருந்து படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தற்போது நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. ஆனால், பெரும்பாலான கல்வி நிலையங்கள் அந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்றும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருக்கிறது என்றும் எழுந்துள்ள குற்றச்சாட்டு பெற்றோர்களைப் பதற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

- ஒரு வகுப்புக்கு 25 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்,
- சமூக இடைவெளியைப் பின்பற்றி கூடுதலான மாணவர்கள் அமர்ந்து பயில வகுப்பறையில் கூடுதல் இடம் இருந்தால் மட்டும் கூடுதல் இருக்கைகளை அமைத்துக்கொள்ளலாம்,
- உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பிறகே மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும்,
- மாணவ, மாணவிகள் சேர்ந்து உணவு உண்ணுவதையோ, உணவு பரிமாறிக்கொள்வதையோ அனுமதிக்கக் கூடாது,
- அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் பள்ளி வளாகத்தில் உள்ளேயும், வெளியேயும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்,
- காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ள மாணவர்களை வீட்டிலிருந்தே கல்வி கற்க அனுமதிக்க வேண்டும்,
- பள்ளி கல்லூரிகளுக்கு வர விரும்பாத மாணவ, மாணவிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது; அவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும்.
- கழிப்பிடங்கள், வகுப்பறைகள் என வளாகங்களில் தேவைப்படும் இடங்களில் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி, சோப்புகளை வைத்து கை கழுவும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்” என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வழங்கியிருக்கிறது.
ஆனால், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை என்று மாணவர்களும், இவற்றைப் பின்பற்ற முடிவதில்லை என ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சில கல்லூரி மாணவர்களிடம் பேசியபோது, ``அரசு வழங்கியுள்ள நடைமுறைகள் எதுவும் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. கை கழுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சானிடைஸரும் வழங்கப்படுவதில்லை. நுழைவாயிலில் ஒருவர் நின்றுகொண்டு உள்ளே நுழையும்போது மாஸ்க் அணியும்படி அறிவுறுத்துகிறார். மற்றபடி உள்ளுக்குள் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. வகுப்புக்குள் வழக்கம்போல் 50-க்கும் அதிகமான மாணவர்களை அமர வைக்கின்றனர். வகுப்புக்குள் மாணவர்கள் மாஸ்க் அணிவது கிடையாது. சில நேரத்தில் ஆசிரியர்களே மாஸ்க் அணியாமல்தான் வருகின்றனர். கழிவறைகள் முறையாகச் சுத்தம் செய்யப்படுவதில்லை. கல்லூரிப் பேருந்துகளில்கூட 100 சதவிகித இருக்கைகளில் மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால் யாருக்கும் கொரோனா குறித்த அச்சமே இல்லை” என்கின்றனர்.
கல்லூரிப் பேராசிரியர்கள் சிலரிடம் இதுகுறித்துக் கேட்டதற்கு, ``மாணவர்களைக் கட்டுப்படுத்துவது ஒன்றும் சாதாரணமான விஷயம் கிடையாது. இதைச் செய்யாதே எனச் சொன்னால்தான் அதைச் செய்வார்கள். மாஸ்க் அணியும்படி வலியுறுத்துகிறோம். ஆனால், பலரும் அதை கடைப்பிடிக்க மறுக்கின்றனர். ஆசிரியர்களைப் பார்க்கும்போது மட்டும் மாஸ்க் அணிந்துகொள்கின்றனர். ஒரு வகுப்புக்கு 25 மாணவர்கள் வீதம் அமர வைப்பதற்கு போதுமான கட்டட வசதிகள் இல்லை. கை கழுவும் இடம் இருந்தாலும் மாணவர்கள் அடிக்கடி கை கழுவுவதில்லை. வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன” என்றனர்.

இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பனிடம் இதுகுறித்து பேசியபோது, ``பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. உடனடியாக பள்ளி கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என நாங்கள் போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறோம். அதேவேளையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் முக்கியம். சில மாதங்களுக்கு முன்புவரை பல கல்லூரி வளாகங்கள் கொரோனா முகாம்களாகச் செயல்பட்டன. அவற்றை கிருமி நீக்கம் செய்யும் பணியையே இந்த அரசு முறையாகச் செய்யவில்லை. கடமைக்குச் செய்ததைப் போலத்தான் அந்தப் பணியைச் செய்தனர்.
அப்படி இருக்கும்போது, இந்த வழிகாட்டு நெறிமுறைகளையெல்லாம் முறையாக பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என நம்புவது அபத்தம்தான். இந்த அரசுக்கு மாணவர்களின் நலனில் அக்கறையே கிடையாது. என்ன வேண்டுமானாலும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துவிடலாம். ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதற்கான வசதிகளைச் செய்து தருவதுதான் கடினமான விஷயம். இங்கே அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளே கிடையாது. மொத்தம் உள்ள 57,000 பள்ளிகளில் 15,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிவறை மற்றும் குடிநீர் வசதியே கிடையாது.
மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து பாட்டிலில் எடுத்து வரும் தண்ணீரில் தங்களது தாகத்தை தீர்த்துக்கொள்கின்றனர். இப்படியான சூழலில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் எப்படி அடிக்கடி கை கழுவ முடியும்.? அரசு உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மீண்டும் பள்ளி, கல்லூரிகளை மூடக் கூடிய சூழலை உருவாக்கிவிடக் கூடாது. அது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும்.” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கல்லூரிகள் கல்வி இயக்குனர் (பொறுப்பு), தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தனிடம் பேசினோம். ``அனைத்து கல்லூரிகளுக்கும் எப்படிச் செயல்பட வேண்டும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வழிகாட்டு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என கண்காணிக்கும் பணியை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்துள்ளோம். இப்போதுதான் மாணவர்கள் வர ஆரம்பித்துள்ளனர். இதுவரை நீங்கள் சொல்வதுபோன்ற எந்தக் குற்றச்சாட்டும் என் கவனத்துக்கு வரவில்லை. இதுகுறித்து நான் விசாரிக்கிறேன்.” என்றார்.