Published:Updated:

``புதிய கல்விக் கொள்கை, காட்ஸ் ஒப்பந்தத்தின் நீட்சி!'' - சென்னையில் நடந்த கல்விக் கொள்கைக் கருத்தரங்கம்

மோகன் இ

சர்வதேசச் சந்தைக்குக் கல்வியைத் திறந்து விடுவதற்கான ஓர் ஒப்புதல் ஆவணம்தான் புதிய தேசியக் கல்விக் கொள்கை.

கல்விக் கொள்கை 2019
கல்விக் கொள்கை 2019

புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்த முதல் நாளிலிருந்தே, தமிழகத்தில் அதற்கு பலத்த எதிர்ப்பு இருந்து வருகிறது. 'மும்மொழிக் கொள்கை' என்கிற பெயரில் இந்தித் திணிப்பு தொடங்கி புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள பல்வேறு விஷயங்களுக்கும் தமிழகத்தில் உள்ள கல்வியாளர்களும், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஒருநாள் கருத்தரங்கை குழந்தை நேயப் பள்ளி கூட்டமைப்பினர் சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இதில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கல்விக் கொள்கை கருத்தரங்கம்
கல்விக் கொள்கை கருத்தரங்கம்

புதிய கல்விக் கொள்கை ஆவணத்தை தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்ட கல்வியாளர் விழியன் பேசுகையில், “அங்கன்வாடி மையங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை வளர்ச்சி மையம் என உள்ள அங்கன்வாடிகளை ஒருங்கிணைந்த பள்ளிகளாக மாற்ற முனைவது, அதன் நோக்கத்தையே சீர்குலைத்துவிடும். இந்தியாவில் 50 சதவிகிதக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைச் சரிசெய்வது தொடர்பாக இந்தக் கொள்கையில் தெளிவான செயல்திட்டம் எதுவும் இல்லை. மாணவர்களின் அனைத்துப் பிரச்னைகளையும் பேசியுள்ள இந்த அறிக்கை, அதற்கு எந்தவொரு தெளிவான தீர்வையும் முன்வைக்கவில்லை” என்றார்.

ஆசிரியர் உதயலஷ்மி பேசுகையில், “மாணவர்களின் கற்றல் குறைபாட்டில் ஆசிரியர்களுக்கே முழுப்பொறுப்பு என்கிற நோக்கில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களை கண்காணித்து, அவர்களை தர மதிப்பீடு செய்வதற்கெனப் பல்வேறு வழிமுறைகளை இதில் கூறியுள்ளனர். இது ஆசிரியர்களின் சுதந்திரத்தைப் பாதிக்கின்ற செயல். ஆசிரியர்களை ஓர் அச்ச உணர்விலேயே வைத்திருக்க முயல்வது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. மேலும் ஆசிரியர்கள் நியமனங்களும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலேயே இனி மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஏற்கெனவே அதிகளவில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. மத்திய அரசின் இந்த அணுகுமுறை மேலும் மோசமான சூழலையே உருவாக்கும்” என்றார்.

கல்விக் கொள்கை கருத்தரங்கம்
கல்விக் கொள்கை கருத்தரங்கம்
1994-ம் ஆண்டு இந்தியா கையொப்பமிட்ட காட்ஸ் ஒப்பந்தத்தின் நீட்சியே இந்தப் புதிய கல்விக் கொள்கை.
- பேராசிரியர் வினோத் குமார்

மேலும் சிறப்புக் குழந்தைகளுக்கென இதில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

காட்ஸ் ஒப்பந்தம் பற்றிப் பேசிய பேராசிரியர் வினோத் குமார், “இதை தேசிய கல்விக் கொள்கை என்று சொல்வதே தவறு. கல்வி வர்த்தக அல்லது சந்தைக் கொள்கை என்று குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும். 1994-ம் ஆண்டு இந்தியா கையொப்பமிட்ட காட்ஸ் ஒப்பந்தத்தின் நீட்சியே இந்தப் புதிய கல்விக் கொள்கை. அரசு வழங்குகிற சேவைகளில் தடையற்ற பன்னாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான், காட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படை. அந்த வரிசையில் கல்வியை சர்வதேசச் சந்தைக்குத் திறந்து விடுவதற்கான ஓர் ஒப்புதல் ஆவணம்தான் இந்தப் புதியக் கல்விக் கொள்கை. பள்ளி மற்றும் உயர் கல்வியை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தைக்காக திறந்துவிடுவதற்கான ஏற்பாடுதான் இது.

இந்தக் கல்விக் கொள்கைக்கான தரவுகள் எதுவுமே கல்வியாளர்களிடமிருந்து பெறப்பட்டவை அல்ல. கார்ப்பரேட்டுகள் நடத்திய கல்வி மாநாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலலேயே இவை உருவாக்கப்பட்டுள்ளன. இனிமேல் மக்களிடம் கருத்துக் கேட்டு பின்னர் இதை அரசு செயல்படுத்தப்போவதில்லை. இவை அனைத்தும் ஏற்கெனவே செயல்பாட்டிற்கு வந்துவிட்டன. நீட் தேர்வு அதற்கு ஓர் உதாரணம். அதற்கான ஒப்புதலாகத்தான் இந்த ஆவணம் அமைந்துள்ளது” என்றார்.

கல்விக் கொள்கை கருத்தரங்கம்
கல்விக் கொள்கை கருத்தரங்கம்
கல்வி அறியும் உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்தியதால் கல்வியின் தரம் குறைந்துவிட்டது எனப் போகிற போக்கில் தெரிவித்துள்ளனர்.
செயற்பாட்டாளர் ஓவியா

பெரியாரிய செயற்பாட்டாளர் ஓவியா, “அனைவருக்குமான கல்வி என்கிற அடிப்படையில் இந்த ஆவணம் இல்லை. முகவுரையில் முந்தைய கல்விக் கொள்கைகளைப் பற்றி நேர்மறையாகக் கூற வேண்டும் என்கிற மரபின் அடிப்படையில் மட்டுமே கூறியுள்ளனர். கல்வி அறியும் உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்தியதால் கல்வியின் தரம் குறைந்துவிட்டது எனப் போகிற போக்கில் தெரிவித்துள்ளனர். எதைப் பற்றியுமே அடிப்படை புரிதல்கூட இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஆவணம். 'State census exam' என மூன்றாம், ஐந்தாம், எட்டாம் வகுப்புகளில் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதில் தோல்வியடையும் மாணவர்களை என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. முன் அனுமானத்தின் அடிப்படையிலேயே அனைத்து விஷயங்களும் அணுகப்பட்டுள்ளன” என்றார்.

`மாணவர்களின் எதிர்காலத்தில் ஏன் இவ்வளவு அவசரம்!' - புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா

பேராசிரியர் மாடசாமி பேசுகையில், “புதிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்ட நாள் முதற்கொண்டே, அது அச்சத்தைத் தருவதாக இருந்து வருகிறது. 'கல்வியின் தரம் என்பதுதான் குழந்தைகள் மீது திணிக்கப்படுகிற வன்முறை' என்று டால்ஸ்டாய் ஒருமுறை கூறினார். இன்று தரத்தின் பெயரில் மூன்றாம் வகுப்பிலிருந்தே பொதுத்தேர்வு, எட்டாம் வகுப்பிலிருந்து பருவத் தேர்வு பின்னர் உயர் கல்விக்கு தேசிய அளவில் தனி நுழைவுத் தேர்வு என மாணவர்கள் மீது சுமையை அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். ஆங்கிலத்தை அகற்றுவதற்கான வேலையும் மறைமுகமாக நடக்கிறது. ஆங்கில மொழிப் பயன்பாடு தொடர்வதை unfortunate trend (துரதிர்ஷ்டவசமான போக்கு) எனக் குறிப்பிட்டுள்ளனர் என்றால் தமிழ் போன்ற பிராந்திய மொழிகளை வளர்க்க வேண்டும் என்கிற ஆர்வமெல்லாம் இல்லை, ஆங்கிலத்தை நீக்கிவிட்டு அந்த இடத்தில் இந்தியைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் நோக்கம்” என்றார்.