Published:Updated:

’`ஆன்லைன்’ வார்த்தை எங்கே?!’ - மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

ஆன்லைன் வழியாக எப்படி பிராக்டிக்கல் வகுப்பு நடத்த முடியும். வகுப்பு நடத்த முடியாதபட்சத்தில் தேர்வு தேதியை மட்டும் பல்கலைக்கழகம் எப்படி அறிவித்தது. அப்போது நேரடி வகுப்புகள் தான் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் இல்லை

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளன. கல்லூரிகளை பொறுத்தவரை, இந்த செமஸ்டரில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் அடுத்த செமஸ்டர் தொடங்கும்போது நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்
ஆர்.எம்.முத்துராஜ்

தமிழக அரசு , கல்லூரியின் இறுதி ஆண்டு தேர்வு தவிர மற்ற தேர்வுகளையும், செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் பொறியியல் கல்லூரி வகுப்புகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 26-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் டிசம்பர் 14-ம் தேதி முதல் தொடங்கும் என்றும் அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 28-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பு

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை தான் தற்போது குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார்கள் மாணவர்களும் பெற்றோர்களும். பல்கலைக்கழக அறிவிப்பில் வகுப்புகள் தொடங்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர அதில் ஆன்லைன் என்ற வார்த்தையே இல்லை. ஆனால் இன்று காலை முதல் கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புக்கான அட்டவணை வெளியீடு என தகவல்கள் வெளியானது. உண்மையில் ஆன்லைன் வகுப்பா அல்லது நேரடியாக கல்லூரிகளை திறக்க திட்டமா என மாணவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இது தொடர்பாக கல்லூரியில் பணியாற்றும் சிலரிடம் விசாரித்தோம். ``இந்த குழப்பம் எங்களுக்கும் இருக்கிறது. விரைவில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என எங்கள் கல்லூரி தரப்பில் தெரிவித்தார்கள். ஆசிரியர்களான எங்களை அதற்கு தயாராகும்படி தெரிவித்தார்கள். ஆனால் அண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கையில் ஆன்லைன் என்ற வார்த்தையே இல்லை. 28/10/2020 முதல் பிராக்டிக்கல் தேர்வுகள் தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆன்லைன் வழியாக எப்படி பிராக்டிக்கல் வகுப்பு நடத்த முடியும். வகுப்பு நடத்த முடியாதபட்சத்தில் தேர்வு தேதியை மட்டும் பல்கலைக்கழகம் எப்படி அறிவித்தது. அப்போது நேரடி வகுப்புகள் தான் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் இல்லை” என்றனர்.

அண்ணா பல்கலை கழகம்
அண்ணா பல்கலை கழகம்

இது தொடர்பாக பல்கலைகழக தரப்பிலும் உயர் கல்வி துறை தரப்பிலும் விளக்கம் பெற முயன்ற போதும் அவர்கள் பதிலளிக்க தயாராக இல்லை. இது போன்ற குழப்பங்களால் மாணவர்கள் பெற்றோர்கள் மட்டுமல்ல, கல்லூரி பேராசிரியர்களும் குழம்பி போய் உள்ளார்கள்.

`ஆசையைத் தூண்டு; கோடிகளை  அள்ளு!' - போலி அரசு வேலை உத்தரவால் சிக்கிய அண்ணா பல்கலை. துணைப் பதிவாளர்
அடுத்த கட்டுரைக்கு