Published:Updated:

5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு... ஏன் இவ்வளவு குழப்பம்?

Representational Image
Representational Image ( Vikatan )

தேர்வு எழுதப்போகிறவர்கள் மாணவர்கள். அவர்கள் மனதளவில் தயாராக வேண்டாமா? பக்குவம் இல்லாத வயதில் ஒரு மாணவனுக்கு இந்தத் தேர்வு அவசியமா?

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கல்வியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த 19-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ``5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை, அந்தந்தப் பள்ளியிலேயே எழுதலாம்” என்று அறிவித்திருந்தார். அவருடைய இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
Vikatan

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்தார்கள். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச்சூழலில் மத்திய அரசு அமைத்திருந்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசியக் கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுவின் வரைவு அறிக்கையும் கடந்த ஆண்டு வெளியானது. அந்த அறிக்கையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரை செய்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முறை இந்தக் கல்வியாண்டில் இருந்தே அமலாகும் என்றும் அறிவித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்குக் கல்வியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தத் தேர்வு எழுதும் மையங்கள் குறித்து நாள்தோறும் வெளியாகும் மாறுபட்ட அறிவிப்புகளால் மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். ஆரம்பத்தில் தமிழக அரசு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டபோதே 5 மற்றும் 8-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்குத் தனியாக தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.

பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை
Vikatan

அதன்பின்னர், 5 வகுப்பு மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரமும், 8 வகுப்பு மாணவர்கள் 3 கிலோமீட்டர் தூரமும் உள்ள பள்ளியில் தேர்வெழுதுவார்கள் என்று மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுதான் பள்ளிக் கல்வித்துறையின் இறுதியான அறிவிப்பாக இருக்கும் என்று மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த வேளையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ``மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வெழுதலாம்" என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அக்ஷயா என்ற மாணவியின் தாய் சசி பேசுகையில் ``இந்தப் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அவசியமில்லாதது. இதை யாரும் விரும்பவில்லை என்று தெரிந்த பின்பும் தமிழக அரசு இந்தத் தேர்வை ஏன் நடத்த வேண்டும்? முதலில் விருப்பம் இல்லாத ஒன்றைத் திணிப்பதே தவறு. இந்தத் தேர்வு தொடர்பாக வெளியாகும் விவரங்கள் மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன. அமைச்சரின் தற்போதைய அறிவிப்பு இறுதியானதா, இதுவும் மாறிவிடுமா என்று தெரியவில்லை. மிகவும் பயமாக இருக்கிறது.

Representational Image
Representational Image
Vikatan

ஆரம்பத்தில் வேறு மையங்களுக்குச் சென்று தேர்வெழுத வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதை அறிந்த என் மகள் என்னிடம் வந்து பயமாக இருப்பதாகக் கூறி அழுதாள். அதோடு அடிஷனல் சீட் பற்றியும் அவளுக்குத் தெரியவில்லை. அது தொடர்பான சந்தேகங்களையும் என்னிடம் கேட்டாள் அப்போது இந்தத் தேர்வு குறித்து எனக்குத் தெரிந்த சில தகவல்களை அவளுக்கு எடுத்துரைத்தேன். அதன் பின்னரே அமைதியானாள். தற்போது எனக்கும் பயம் வந்துவிட்டது. சும்மா தேர்விலேயே ஒன்றிரண்டு மதிப்பெண் குறைந்தால் அழுவாள்... சாப்பிட மாட்டாள். அவளை அதில் இருந்து வெளியில் கொண்டு வர நாங்கள் படாதபாடுபடுவோம். இப்போது பொதுத் தேர்வு என்று பயமுறுத்துகிறார்கள்" என்றார்.

இதுகுறித்து பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு , ``5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதே தேவையில்லை என்று பலரும் கூறி வரும் நிலையில், எதற்காகத் தேர்வு மையங்கள் குறித்து குழப்பமான தகவல்களைத் தொடர்ந்து அமைச்சர் அறிவித்துவருகிறார் என்று தெரியவில்லை. இப்படியான குழப்பமான அறிவிப்பு மாணவர்களிடையே எவ்வளவு பெரிய உளவியல் சிக்கலை ஏற்படுத்தும்? கல்வியாண்டின் தொடக்கத்திலேயே இதை முடிவு செய்வதில் என்ன சிரமம் இருக்கிறது ?

ஜூன் மாதத்திலேயே முடிவு செய்ய வேண்டிய கல்வி நடைமுறைகளை, ஏன் அந்தக் கல்வியாண்டின் இறுதிவரை இழுத்துக்கொண்டு செல்ல வேண்டும். கல்வியாண்டின் தொடக்கத்திலேயே அட்டவணைகளை முடிவு செய்வதுதானே நடைமுறை. அப்படி என்ன அவசர அவசரமாக இந்தப் பொதுத் தேர்வை நடத்த வேண்டிய அவசியம்?

பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்
பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்

இந்தக் கல்வியாண்டில்தான் மத்திய அரசு பொதுத்தேர்வை பரிந்துரை செய்தது. அதை அப்படியே உடனடியாக எந்தவித ஆலோசனையுமின்றி நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை என்ன? இந்தத் தேர்வை எழுதவில்லை என்றால் எந்த வகையில் மாணவர்கள் குறைந்தவர்களாகி விடுவார்கள்?

நாடாளுமன்றத்தில் கல்வி உரிமைச் சட்டம் திருத்தப்பட்டே பொதுத் தேர்வு நடத்தப்படுவதாகக் கூறி வருகிறார்கள். அது முற்றிலும் தவறு. அப்படி ஒரு வார்த்தை திருத்தப்பட்ட சட்டத்தில் இடம் பெறவே இல்லை என்பதுதான் உண்மை. குறிப்பாகத் திருத்தப்பட்ட சட்டம் 16 -ல் நான்கு உட்பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதில் எதிலுமே பொதுத்தேர்வு என்று குறிப்பிடவே இல்லை. திருத்தப்பட்ட கல்வி உரிமைச்சட்டத்தில் பொதுத் தேர்வு என்று குறிப்பிடாமல், வழக்கமான தேர்வு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எட்டாம் வகுப்பு முடியும்வரை எந்த வாரியத் தேர்விலும் ஒரு மாணவன் தேர்ச்சிபெறவேண்டிய அவசியமில்லை என்று அந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, இதை ஏன் பொதுத் தேர்வு என்று குறிப்பிட வேண்டும்? அப்படிக் குறிப்பிட்டு மாணவர்களுக்கு ஏன் மன அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும்?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

இதுகுறித்துப் பேசிய ஆசிரியர் கௌதமி, ``இந்தப் பொதுத் தேர்வு குறித்து மாணவர்களுக்கு எந்தப் புரிதலும் இல்லை. சாதாரணமாக வைக்கப்படுகின்ற தேர்வுகளுக்கே மாணவர்கள் மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். இது பொதுத் தேர்வு என்று அரசு அறிவித்துவிட்டது. அதனால் எந்நேரமும் இதைப்பற்றியே வகுப்பறையில் பேசுகிறார்கள். இது தொடர்பாக அரசுக்குக் கூறினால் ஆசிரியர்கள் நீங்கள் சரியாக பாடம் கற்பிக்கவில்லை என்று எங்களைக் குறை கூறுகிறார்கள்.

புதிய ஒரு முறையைக் கல்வித்துறையில் கொண்டு வரும்போது அதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டாமா? அது குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிய வேண்டாமா? அப்படி ஓர் ஆலோசனையை இந்தத் தேர்வு விஷயத்தில் அரசாங்கம் பின்பற்றவில்லை.

தேர்வு எழுதப்போகிறவர்கள் மாணவர்கள். அவர்கள் மனதளவில் தயாராக வேண்டாமா? பக்குவம் இல்லாத வயதில் ஒரு மாணவனுக்கு இந்தத் தேர்வு அவசியமா என்பதுதான் எனது கேள்வி. அவர்கள் இந்தத் தேர்வை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை என்று கூறுகிறோம். அதை ஏற்க மறுக்கிறார்கள்.

மேலும், இந்தப் பொதுத் தேர்வு என்பது நகர்ப்புறத்து மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் இடையே மாறுபட்ட மன நிலையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர், மலைவாழ் பகுதியில் உள்ள பழங்குடி மாணவர்களுக்குப் பாடம் கற்பித்து வருகிறார். ஆரம்பத்தில் அங்குள்ள மாணவர்களின் பள்ளி வருகையை அதிகரிக்க அவர் படாத பாடுபட்டார். தற்போது அரசாங்கம் பொதுத் தேர்வு அறிவித்து அந்த மாணவர்களைப் பாதியில் நிறுத்திவிட்டது. பொதுத் தேர்வு என்று அறிவிப்பு வந்ததுமே அந்த மாணவர்கள் பள்ளிக்கு வருவதே இல்லை. படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு கிழங்கு எடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த மாணவர்கள் படிக்க வருவதே அரிதான ஒன்று. இப்படி ஒரு கொள்கை முடிவை எடுத்து ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வியைத் துண்டித்துவிட்டது அரசு" என்கிறார்

`இரண்டு தேர்வு மையங்கள்; முதல் 100 இடங்களுக்குள் 40 பேர்!' - ராமநாதபுரம் குரூப்-4 தேர்வு சர்ச்சை

இது குறித்துப் பேசிய ஆசிரியர் சண்முகம் ``இந்தப் பொதுத் தேர்வு தேவையில்லை என்று சொல்ல முடியாது. மாணவர்களை தங்களுடைய திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு இது ஒரு வழி. அதுமட்டுமன்றி இந்தத் தேர்வு அவர்களுக்கு ஒரு அனுபவமாக இருக்கும். அதனால் தேர்வுத் தேவையில்லை என்று எதிர்க்க வேண்டாம். ஆனால், இந்தப் பொதுத் தேர்வு குறித்து மாணவர்களிடையே ஆசிரியர்கள் புரிய வைக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்கான கால அவகாசம்தான் தற்போது குறைவாக உள்ளது. மேலும், இந்தப் பொதுத்தேர்வை அடுத்த கல்வியாண்டில் வைத்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஏனென்றால் இந்தத் தேர்வு நடைமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கே இன்னும் முழுமையான புரிதல் இல்லை. அப்படியான நிலையில் இந்தத் தேர்வு என்பது மாணவர்களுக்கு சற்றுக் கடினம்தான்" என்றார்.

இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையனை தொடர்பு கொண்டபோது அவருடைய உதவியாளர் ``அமைச்சரிடம் தற்போது இதுபற்றி பேச முடியாது” என்றார். அதைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனையும் தொடர்பு கொள்ள முயன்றபோது அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. லேண்ட் லைனில் தொடர்புகொண்டபோது அந்த தொலைபேசியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அடுத்த கட்டுரைக்கு