Published:Updated:

சென்னைப் பல்கலைக்கழகத்துக்கும் ஜே.என்.யூ–வுக்கும் என்ன சம்பந்தம்? - வெடிக்கும் சர்ச்சை!

சென்னைப் பல்கலைக்கழக சர்ச்சை
சென்னைப் பல்கலைக்கழக சர்ச்சை

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தராக துரைசாமி பணியாற்றி வருகிறார். அவரது பணிக்காலம் முடிவுக்கு வருவதால், புதிய துணைவேந்தரை நியமிக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்காக மூவர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் துரைசாமியின் பணிக்காலம், வரும் மே மாதத்தோடு முடிவடைவதால், புதிய துணைவேந்தரை நியமிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய மூவர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த மூவரில் தமிழக ஆளுநரின் பரிந்துரையின் பெயரில் நியமிக்கப்பட்டுள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரும் ஒருவர். இவருடைய நியமனத்துக்குதான் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜெகதீஷ் குமாரை எதிர்க்க இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது அவருடைய கல்வித்தகுதி. அடுத்தது அவர் மீதான சர்ச்சை. ஜெகதீஷ் குமார் சென்னை ஐ.ஐ.டி-யில் பயின்றவர். பொறியியல் துறையைச் சேர்ந்த ஒருவரால் கலை, அறிவியல், மானுடவியல் முதலான புலங்களைக் கற்றுத்தரும் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை எப்படித் தேர்ந்தெடுக்க முடியும் என்பது முதல் கேள்வி.

ஜெகதீஷ் குமார்
ஜெகதீஷ் குமார்

கடந்த 2016-ம் ஆண்டு, டெல்லி ஜே.என்.யூ. துணைவேந்தராகப் பதவியேற்றார் ஜெகதீஷ் குமார். பதவியேற்ற, ஒரே வாரத்துக்குள், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்காக மாணவர்கள் அறிவித்த நிகழ்ச்சியைத் தடை செய்தார். அனுமதியின்றி கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்திய மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. அடுத்த 9 மாதங்களில், நஜீப் அகமது என்ற ஜே.என்.யூ மாணவர் காணாமல் போனார். மூன்றாண்டுகள் கழித்தும் அவரைப் பற்றிய கேள்விக்கு டெல்லி காவல்துறை, சி.பி.ஐ எதுவும் பதில் தரவில்லை. மாணவர்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரும் இன்றுவரை இந்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை.

2017-ம் ஆண்டில் நேரு நினைவு சொற்பொழிவு நிகழ்வுக்கு இந்துமத குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தார் துணைவேந்தர் ஜெகதீஷ்குமார். பல ஆண்டுகளாக மாணவர் போராட்டங்கள் நடத்திய இடத்தில் போராடத் தடை போட்டார். மாணவர்களின் கல்விச் சுதந்திரத்திற்குப் பெயர்பெற்ற ஜே.என்.யூ-வில் ஜெகதீஷ் குமாரின் தலைமையில் பல்வேறு புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டன. மாணவர்கள் மட்டுமன்றி, ஜே.என்.யூ ஆசிரியர் சங்கம், `தேர்வுக் குழுவில் பி.ஜே.பி-யைச் சேர்ந்த ஆட்களை நியமிக்கிறார்’ என்று இவர் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது. ஜே.என்.யூ-வில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டியைக் கலைத்தது ஜெகதீஷ் குமார் நிர்வாகம். அதற்கு மாற்றாக, பல்கலைக்கழக நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் வைத்து, புகார் கமிட்டி ஒன்று அமைத்தார். இந்தப் புகார் கமிட்டி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர் ஒருவரைக் குற்றமற்றவர் என்று அறிவித்து சர்ச்சைக்குள்ளாகியது.

நஜீப் எங்கே? - போராட்டம்
நஜீப் எங்கே? - போராட்டம்

ஜே.என்.யூ-வில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்திவரும் மாணவர்களோடு துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் பேசவே முன்வரவில்லை. கடந்த ஜனவரி 5 அன்று, ஜே.என்.யூ-வில் மாணவர் சங்கத்தினருக்கும் பி.ஜே.பி-யின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி அமைப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது. பல்கலைக்கழக வளாகத்தினுள் குண்டர்கள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். மாணவர்களைத் தாக்கிய குண்டர்கள் மீது டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆசியோடு இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறியது, ஜே.என்.யூ ஆசிரியர் சங்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணனிடம் பேசினோம். ``இந்தியா முழுவதும் வேறு எந்த சிறந்த கல்வியாளரும் இல்லை என்பதைப் போல, சர்ச்சைக்குரிய ஜெகதீஷ்குமாரை நியமிப்பது அவசியமற்றது. மாணவர்களுக்கு எதிராக நிற்கக் கூடிய ஜெகதீஷ் குமாரை விட கல்வி ரீதியாகவும் பணி ரீதியாகவும் சிறந்த கல்விமான்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள். இது மாநில அரசின் கல்விக் கொள்கை மீதான தாக்குதல். மேலும், மத்தியில் ஆளும் கட்சி தங்கள் கொள்கைக்கு ஏற்ற ஆட்களை நியமிக்க மேற்கொள்ளும் செயலும் ஆகும்” என்றார்.

ஜே.என்.யூ துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் நியமனத்தை எதிர்த்தும், தமிழக ஆளுநரைக் கண்டித்தும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் சார்பில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ``ஜெகதீஷ் குமார் ஜே.என்.யூ-வில் தொடர்ச்சியாக மாணவர் விரோதமாகவும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாகவும் செயல்பட்டவர். அவரைச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவின் தலைவராக நியமிப்பதன் மூலமாக, சென்னைப் பல்கலைக்கழகத்தைக் காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஆளுநர் ஈடுபடுகிறார். மேலும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஜே.என்.யூ-வைப் போல, கட்டண உயர்வு அமல்படுத்தி, தனியார்மயமாக்கும் நடவடிக்கையும் இதில் அடங்கியிருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயகத்துக்காக நாங்கள் ஜெகதீஷ் குமார் நியமனத்தை எதிர்க்கிறோம்" என்றார் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவி இளவரசி.

பேராசிரியர் ராமு மணிவண்ணன்
பேராசிரியர் ராமு மணிவண்ணன்

இது தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏ.பி.வி.பி மாணவர் கதிர் நம்மிடம் பேசுகையில், ``பா.ஜ.கவோ அல்லது ஏ.பி.வி.பி-யோ குறிப்பிட்ட அடையாளம் உள்ள ஒருவரை கல்வி நிலையங்களில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனக் கேட்பது கிடையாது. தகுதியான நபர் யாராக இருந்தாலும் அவர்களை அங்கீகரிக்க வேண்டும். தகுதிகளை ஆராய்ந்துதான் ஆளுநர் இந்த முடிவை எடுத்தார். மாணவர்களும், பேராசிரியர்களும் குற்றம் சுமத்துவதைப் போல இதில் ஏ.பி.வி.பி–க்கு சாதகமாக ஆளுநர் செயல்படவில்லை" என்றார்.

இது மாநில அரசின் கல்விக் கொள்கை மீதான தாக்குதல். மேலும், மத்தியில் ஆளும் கட்சி தங்கள் கொள்கைக்கு ஏற்ற ஆள்களை நியமிக்க மேற்கொள்ளும் செயல்
பேராசிரியர் ராமு மணிவண்ணன்
``விஜய் சார்... `மாஸ்டர்’க்கு வந்தேன்...  ஆனா, நான் ஏன் `மெர்சல்’-க்கு வரலைன்னு தெரியுமா?’’ - பாவனா

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவைத் துணைவேந்தராக நியமித்தார் ஆளுநர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்னெடுத்த அரசியல் நிகழ்ச்சிகள் பலமுறை நிறுத்தி வைக்கப்பட்டதுக்கும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட மாணவர் கிருபாமோகன் நீக்கப்பட்டதுக்கும் பின்னணியில் ஆளுநர் இருக்கிறார் என்று மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இப்போது ஜெகதீஷ்குமாரை நியமித்திருப்பதால் ஆளுநர் மீதான மாணவர்களின் அதிருப்தி பெரிதாகியுள்ளது.

ஜெகதீஷ் குமார்
ஜெகதீஷ் குமார்

இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கேட்டதற்கு, ``தேடுதல் குழுவில் மூன்று பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். செனட் உறுப்பினர்களால் தேர்தல் நடத்தி, அதில் வென்றவர் குழுவில் இடம் பெற்றிருக்கிறார். சிண்டிகேட்டில் இருவர் தேடுதல் குழுவில் இடம்பெறுவதற்கு விண்ணப்பித்து, அதில் ஒருவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். மூன்றாவது, கவர்னர் நியமனம். இந்த சர்ச்சைகள் குறித்து கவர்னரிடம்தான் கேட்க வேண்டும். மக்கள் விரும்பாத விவகாரம் நடந்தால், அரசுத் தரப்பில் நாங்கள் பரிசீலனை செய்வோம். அதைப்போல, இதில் பேராசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு வருகிறது; கவர்னர் நியமனம் செய்ததால், அவர்தான் பரிசீலிக்க வேண்டும்” என்று முடித்துக்கொண்டார்.

ஜெகதீஷ் குமார் மாற்றப்படுவாரா... காத்திருந்து பார்ப்போம்!

அடுத்த கட்டுரைக்கு