Published:Updated:

`H ஆக மாறிய D..!' - `ராஜா' சர்ச்சையில் சிக்கிய சேலம் அரசுக் கல்லூரி

சேலம் அரசு கலைக்கல்லூரி வெளியிட்டுள்ள 2019-2020 கல்வியாண்டுக்கான கையேடு புத்தகத்தில், டி.ராஜா வழங்கினார் என்பதற்குப் பதிலாக ஹெச்.ராஜா 50 லட்ச ரூபாயை வழங்கியதாகப் பிரசுரித்துள்ளனர்.

டி.ராஜா, ஹெச்.ராஜா
டி.ராஜா, ஹெச்.ராஜா

சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு புதிய வகுப்பறைகளைக் கட்டுவதற்கு, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.பி.ஐ கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா, எம்.பி நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை வழங்கியிருந்தார். இதுகுறித்து சேலம் அரசு கலைக்கல்லூரி வெளியிட்டுள்ள 2019-2020 கல்வியாண்டுக்கான கையேடு புத்தகத்தில், டி.ராஜா வழங்கினார் என்பதற்குப் பதிலாக ஹெச்.ராஜா 50 லட்ச ரூபாயை வழங்கியதாகப் பிரசுரித்துள்ளனர். இதனால் கொந்தளிப்பில் உள்ளனர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

கையேடு
கையேடு

இந்த சர்ச்சை குறித்து நம்மிடம் பேசிய சி.பி.ஐ கட்சியின் சேலம் மாவட்டக் குழு உறுப்பினர் பிரவீன், ``சேலம் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியர்கள் இந்துத்துவ சிந்தனை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர், பா.ஜ.க பிரமுகர்களை அழைத்து அடிக்கடி கூட்டம் நடத்துகின்றனர். இதனைப் பலமுறை நாங்கள் கண்டித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அரசு கலைக்கல்லூரி சார்பாக 2019-2020 கல்வியாண்டுக்கான கையேடு 5000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் பேராசிரியர்களின் முகவரியும் கல்லூரியில் செயல்பட்டுவரும் துறைகள், கட்டட வசதிகள், கட்டுமானப் பணிகள் எனக் கல்லூரி தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும்.

சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு எம்.பி நிதியிலிருந்து 50 லட்ச ரூபாயை ஒதுக்கியிருந்தார் டி.ராஜா. இந்தப் பணத்தில் 5 வகுப்பறைகள் கட்டப்பட்டு 6 மாதங்களுக்கு முன்பு திறப்பு விழா நடைபெற்றது. ஆனால், அரசு கலைக்கல்லூரி வெளியிட்டுள்ள கையேட்டின் 13-வது பக்கத்தில் 'பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு ஹெச்.ராஜா (டி.ராஜா என்பதற்குப் பதில்) அவர்களின் தொகுதி வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து 50 லட்சத்தில் 5 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் ஒன்று அடிக்கல் நாட்டப்பட்டுக் கட்டப்பட்டு வருகிறது' என்று குறிப்பிட்டுள்ளனர்.

பிரவின்
பிரவின்

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா என்பதற்குப் பதிலாக ஹெச்.ராஜா என்று வெளியிட்டிருப்பது பிழையாகப் பார்க்கத் தோன்றவில்லை. இது திட்டமிட்டே உள்ளே இருக்கும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனை உடையவர்களால் செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கையேட்டைத் தயாரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்றார் கொதிப்புடன்.

எம்.பி நிதி சர்ச்சை தொடர்பாக மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ள சேலம் அரசுக் கலைக்கல்லூரி முதல்வர் கலைச்செல்வன், 'சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, தொகுதி வளர்ச்சித் திட்ட நிதியிலிருந்து ரூ.50,00,000 வழங்கியுள்ளார். அதில் மாணவர்கள் பயன்பாட்டுக்காக 5 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது.

அரசு கலைக்கல்லூரி
அரசு கலைக்கல்லூரி

2019-20ம் கல்வியாண்டுக்கான கல்லூரி கையேட்டில் டி.ராஜா என்பதற்குப் பதிலாக ஹெச்.ராஜா என எழுத்துப் பிழையாக அச்சிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். திரு ஹெச். ராஜா அவர்கள் எங்கள் கல்லூரிக்கு எந்த ஒரு நிதியும் வழங்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.