Published:Updated:

அடுத்தடுத்த திருப்பங்களால் தகிக்கும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்- இயல்புநிலை எப்போது?

இப்பிரச்னைக்கு நீதிமன்றம் விரைவில் முற்றுப்புள்ளி வைத்து, இப்பல்கலைக்கழகம் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி என்பது, கடந்த சில ஆண்டுகளாகவே பரபரப்புக்குரியதாகவே தொடர்ந்து வருகிறது. இங்கு துணைவேந்தராக பாஸ்கரன் பதவி வகித்தபோது, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனல் பறந்தன. அவருக்குப் பிறகு இப்பதவிக்கு வந்த பாலசுப்ரமணியன் நேர்மையானவர், மிகவும் கறாரானவர் எனப் பலராலும் சொல்லப்பட்ட நிலையில், ஒரு பேராசிரியர் தொடர்ந்த வழக்கில், பாலசுப்ரமணியனின் பணிநியமனத்தை மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் தனி நீதிபதி ரத்து செய்தார். அது பெரும் அதிர்ச்சி அலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் திடீர் திருப்பமாக, இவரது பதவி நீக்கத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

துணைவேந்தர் பாலசுப்ரமணியன்
துணைவேந்தர் பாலசுப்ரமணியன்

தமிழ் வளர்ச்சிக்காகவும், உயர் ஆராய்ச்சிக்காகவும் தொடங்கப்பட்ட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், அளப்பறிய பல சாதனைகளை செய்து சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஏராளமான அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கிய இப்பல்கலைக்கழகம், காலப்போக்கில் கவலைக்குரிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இங்கு துணைவேந்தராகப் பாஸ்கரன் என்பவர் பதவி வகித்தபோது, ஊழல் குற்றச்சாட்டுகள் அனல் பறந்தன.

லட்சக்கனக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு, தகுதியற்ற நபர்களை, பேராசியர்கள் பணிகளுக்கு நியமனம் செய்ததாக, இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து இப்பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர்கள் மற்றும் ஆய்வு சிறகுகள் கூட்டமைப்பினர், குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டவர்களுக்குக் கடிதம் அனுப்பினர். அதைத் தொடர்ந்து அவர் மீது லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். புதிய துணைவேந்தரான பாலசுப்ரமணியன் இதில் முனைப்பு காட்டுவதாக, முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் தரப்பு ஆதங்கப்பட்டது.

முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன்
முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன்

இதற்கிடையில்தான் துணைவேந்தர் பதவிக்கு பாலசுப்ரமணியன் தகுதியானவர் அல்ல என ஓய்வுபெற்ற பேராசிரியர் ரவீந்திரன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த தனிநீதிபதி, பாலசுப்ரமணியனின் பணிநியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பாலசுப்ரமணியன் சார்பிலும் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாலசுப்ரமணியன் பணிநியமன ரத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதுகுறித்து கருத்தறிய துணைவேந்தர் பாலசுப்ரமணியனை தொடர்பு கொண்டோம். ``நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இது தொடர்பாகப் பேச இயலாது” என்றார்.

இங்கு பணியாற்றும் பேராசிரியர்களிடம் நாம் பேசியபோது, ``பாலசுப்ரமணியன் மிகவும் நேர்மையானவர். அதேசமயம் கண்டிப்பானவர். இவர் இங்கு துணைவேந்தராகத் தொடர்ந்தால், ஏற்கெனவே ஊழல் செய்தவர்கள், சிக்கிக்கொள்வார்களோ என்ற பயத்தால்தான் இவருக்கு எதிராக சதி செய்தார்கள். துணைவேந்தராகப் பதவி வகிக்க, அனைத்து தகுதிகளையும் உடையவர் இவர். நீண்ட அனுவம் பெற்றவர். ஆந்திர மாநிலத்தில் உள்ள திராவிட பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தராக இருந்தவர். கேரள மாநிலத்தின் காலிகேட் பல்கலைக்கழகத்திலும், போலந்து நாட்டில் உள்ள வார்ஸா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியவர்.

பத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு கருத்தரங்குகளில் கலந்து ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியவர். இரண்டு சர்வதேச கருத்தரங்குகளை முன்னின்று நடத்தியவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகள் அறிந்தவர். இவர் இங்கு துணைவேந்தராகத் தொடர்ந்தால் இந்தப் பல்கலைக்கழகம் சிறப்பாகச் செயல்பட்டு வளர்ச்சி அடையும்” என்றனர்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

தற்போதைய வழக்கின் சாராம்சம் குறித்து இப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோவிந்தசாமி தெளிவாக விவரித்தார். ``பாலசுப்ரமணியனுக்கு எதிராகச் செயல்படக்கூடியவர்களால், இவரது தகுதி மற்றும் நேர்மை குறித்து குறை சொல்ல முடியவில்லை. இதனால்தான் இவரை தேர்வு செய்த தேர்வுக் குழுவுக்கு தகுதியில்லை எனவும் அதனால் அக்குழு தேர்வு செய்த பாலசுப்ரமணியனுக்கு துணைவேந்தராக இருக்க தகுதி இல்லை என வழக்கு தொடர்ந்தார்கள். அதன் அடிப்படையில்தான் நீதிமன்றம் இவரது பணிநியமனத்தை ரத்து செய்தது.

அதற்கு எதிராக, பாலசுப்ரமணியன் மட்டுமல்ல, தமிழக அரசு மற்றும் ஆளுநர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. தேர்வுக்குழு அமைக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லையென வாதிடப்பட்டது. பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர்கள், தேர்வுக்குழுவில் இருக்கக் கூடாது என்பதுதான் விதிமுறை. அக்குழுவில் இடம்பெற்ற கருணாகரன், மணிவேல் இருவருமே தற்போது இங்கு பணியாற்றவில்லை. ஏற்கெனவே இங்கு பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். பாலசுப்ரமணியன் பணிநியமன ரத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலதடை விதித்துள்ளது” என்றார்.

இப்பிரச்னைக்கு நீதிமன்றம் விரைவில் முற்றுப்புள்ளி வைத்து, இப்பல்கலைக்கழகம் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.