Published:Updated:

அரியர் ஆல்பாஸ்: கேள்வியெழுப்பிய ஏ.ஐ.சி.டி.இ; கொதிக்கும் கல்வியாளர்கள்! - நெருக்கடியில் அரசு?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையிலேயே மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. யு.ஜி.சி விதிகளுக்கு முரணாக அரசு செயல்படவில்லை' என்கிறது தமிழக அரசு.

தமிழக அரசுக்குக் கூடுதல் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது `அரியர் ஆல் பாஸ்' விவகாரம். இதில், அரசின் முடிவுக்கு எதிராக ஏ.ஐ.சி.டி.இ தலைவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு, அரியர் மாணவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா சீஸன் தொடங்கியதிலிருந்தே மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகளை வாரியிறைத்துவருகிறது தமிழக அரசு. பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து, சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவுத் திட்டம் என அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியானாலும், `அரியர் தேர்வுக்குப் பணம் கட்டினாலே தேர்ச்சி' என்ற அறிவிப்பை மாணவர்களே எதிர்பார்க்கவில்லை.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, `அரியர் ஆல் பாஸ் அறிவிப்பை ஏ.ஐ.சி.டி.இ அங்கீகரிக்கவில்லை. இது தொடர்பாக பல்கலைக்கழக இமெயிலுக்குக் கடிதம் வந்திருக்கிறது' எனக் கொளுத்திப்போட்டார். இதை எதிர்பார்க்காத உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், `தமிழ்நாட்டிலுள்ள 13 துணைவேந்தர்களில் இவர் ஒருவர் மட்டுமே அரசின் முடிவை எதிர்க்கிறார். அப்படி எந்த இமெயிலும் ஏ.ஐ.சி.டி.இ-யிடமிருந்து வரவில்லை" என்றார்.

ஒருகட்டத்தில், ஏ.ஐ.சி.டி.இ அனுப்பியதாகக் கூறப்பட்ட கடிதமும் வெளியானது. `அந்தக் கடிதமும் போலியானது. போட்டோ ஷாப் முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது. அப்படி எந்தக் கடிதமும் வரவில்லை' என்ற விளக்கம் வெளியானது. இந்தநிலையில், ஏ.ஐ.சி.டி.இ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே, `அரியர் தேர்வு ரத்து என்பது தவறான முடிவு' எனக் கூற, விவகாரம் மீண்டும் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி. இந்த வழக்கின் விசாரணையில் விளக்கமளித்த தமிழக அரசின் வழக்கறிஞர், `பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையிலேயே மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. யு.ஜி.சி விதிகளுக்கு முரணாக அரசு செயல்படவில்லை' என்றார்.

இதையடுத்துப் பேசிய இ.பாலகுருசாமி தரப்பு வழக்கறிஞர், `அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்தால், பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் பாதிக்கப்படும். இதையாவது அரசு கருத்தில்கொண்டிருக்க வேண்டும்' என்றார். முடிவில், `தமிழக அரசு, யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ ஆகியவை இரண்டு வார காலத்துக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர் நீதியரசர்கள்.

பாலகுருசாமி
பாலகுருசாமி

`அரியர் ஆல் பாஸ்’ அறிவிப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்த இ.பாலகுருசாமியிடம் பேசினோம். ``கொரோனாவுக்கும் அரியர் ஆல் பாஸ் அறிவிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கொரானாவைப் பயன்படுத்தி அரசு தவறு செய்வதாகத்தான் பார்க்கிறேன். தேர்ச்சி பெறாத மாணவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதற்கு அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.

பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டுகளில் 10 முதல் 20 பாடங்கள் வரையில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் இருக்கிறார்கள். 20 பாடங்களில் ஃபெயிலான மாணவர்களை ஒரே ஓர் உத்தரவில் பாஸ் என அறிவிக்க முடியுமா... வெறும் 5 மார்க், 10 மார்க் வாங்கியவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியுமா... அப்படிச் செய்தால் கல்வித்தரம் என்னவாவது?" எனக் கொதித்தவர்,

`` அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஆறு மாதம் கழித்துக்கூட தேர்வு வைக்கலாம். ஆன்லைனில் தேர்வை நடத்துவதற்குப் பல்கலைக்கழகங்கள் தயாராக உள்ளன. சொல்லப்போனால், ஃபெயிலான மாணவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பல்கலைக்கழகத்துக்கே அதிகாரம் இல்லை. பல்கலைக்கழகம் என்பது தன்னாட்சி அதிகாரமுள்ள அமைப்பு. அந்த அதிகாரத்துக்குள் நுழைவதற்கு அரசுக்கும் அதிகாரம் இல்லை. சில மாணவர்கள் 25 அரியர்கள்கூட வைத்திருக்கிறார்கள். பல பொறியியல் கல்லூரிகள் `ஜீரோ தேர்ச்சி' என்ற அளவில்தான் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் படித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்துவிட்டனர்.

“ஓட்டுக்காகவா அரியர் ஆல் பாஸ்?” - அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிரடி

இதனால் தமிழ்நாட்டின் பெயர்தான் கெட்டுவிட்டது. இவ்வாறு செய்வதற்கு விதிகளில் இடமில்லை. அரசுக்கு யார் இந்த ஆலோசனையைக் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. தேர்வு எழுதி பாஸ் ஆகவில்லையென்றால், அப்படியே போக வேண்டியதுதானே... அதனால் யாருக்கும் நஷ்டம் இல்லை. இந்த உத்தரவு, கல்வித்துறைக்கே அவமானம். `யு.ஜி.சி, ஏ.ஐ.சி.டி.இ வழிகாட்டுதல்படி அறிவிப்பு வெளியிட்டோம்' என்கிறார்கள். அப்படி எதாவது விதிகள் இருக்கின்றனவா? இது கல்வியாளர்களையும் துணைவேந்தர்களையும் முட்டாளாக்கும் அறிவிப்பு. கொரோனா முடிந்ததும், தேர்வு எழுத வைப்பதால் என்ன நேர்ந்துவிடப் போகிறது... இந்த உத்தரவால் தேர்ச்சி பெறப்போகும் மாணவர்களுக்கு யாரும் வேலை தர மாட்டார்கள், மதிக்கவும் மாட்டார்கள்" என்றார் ஆவேசத்துடன்.

அதேநேரம், அரசின் முடிவை வரவேற்கும் பேராசிரியர் பிரபா கல்விமணி, `` தற்போதுள்ள அசாதாரண சூழலில், தேர்வு நடத்துவதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. அரசாங்கமே முடிவெடுத்துச் சொல்லும்போது அதைக் கணக்கில் எடுத்துக்கொள்வதே நல்லது. இது வரவேற்கக்கூடிய ஒன்றுதான். அரியர் மாணவர்களுக்குத் தேர்வெழுத வாய்ப்பு கொடுத்திருக்கலாம் எனச் சிலர் சொல்கின்றனர். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டிய சிக்கல்களும் உள்ளன. எனவே, அரசின் முடிவு சரியானதுதான்" என்றார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

இது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவிடம் கேட்டபோது, ``நான் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்றதோடு முடித்துக்கொண்டார்.

இதையடுத்து, கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரனிடம் பேசினோம். `` அரியர் மாணவர்களைத் தேர்ச்சி பெறவைப்பது தொடர்பாக அரசு கமிட்டி அமைத்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை எங்களுக்குக் கொடுப்பார்கள். இப்படியொரு உத்தரவை நன்கு ஆராயாமல் போகிறபோக்கில் செய்ய மாட்டார்கள். எங்களுக்கு இது தொடர்பான தகவல்கள் வந்த பிறகு விரிவாகப் பேசுகிறேன்" என்றார்.

இந்த விவகாரத்தில் பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ``பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளைப் பின்பற்றுவதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவித்திருக்கிறது. யு.ஜி.சி-யின் விதிமுறைகளைப் பின்பற்றித்தான் தமிழக அரசு விலக்கு அளித்திருக்கிறது" என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`அரியர் மாணவர்களின் அரசனே', `மாணவர்களின் பாகுபலியே' என்றெல்லாம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி பேனர்களையும் விளம்பரங்களையும் வாரியிறைத்த அரியர் மாணவர்கள், `அடுத்தகட்டமாக என்ன நடக்கும்?' எனத் தெரியாமல் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு