Published:Updated:

எதிர்காலமே இருண்டகாலமா? - கனவுகளைக் கருக்கும் தேர்வுகள்!

எதிர்காலமே இருண்டகாலமா?
பிரீமியம் ஸ்டோரி
எதிர்காலமே இருண்டகாலமா?

உலகில் எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு இறுக்கமான நுழைவு மற்றும் தகுதித் தேர்வுகளை அரசுகள் திணிக்கவில்லை” என்கிறார்

எதிர்காலமே இருண்டகாலமா? - கனவுகளைக் கருக்கும் தேர்வுகள்!

உலகில் எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு இறுக்கமான நுழைவு மற்றும் தகுதித் தேர்வுகளை அரசுகள் திணிக்கவில்லை” என்கிறார்

Published:Updated:
எதிர்காலமே இருண்டகாலமா?
பிரீமியம் ஸ்டோரி
எதிர்காலமே இருண்டகாலமா?
ட்டுக்கோட்டைக்குப் பக்கத்திலுள்ள கரம்பயத்தைச் சேர்ந்தவர் வளர்மதி. விவசாயத்தை நம்பிய எளிய குடும்பம். வீட்டை விட்டு பெண்களை வெளியே அனுப்பவே தயங்கும் குடும்பம்... மருத்துவராக வேண்டும் என்பது அவரது சிறுவயதுக் கனவு. போராடிப் படித்த வளர்மதிக்கு மருத்துவர் வாய்ப்பு கிடைக்கவில்லை. மனநிறைவோடு நர்சிங் சேர்ந்தார். அரசு உதவித் தொகையோடு படிப்பை முடித்த வளர்மதி இன்று தமிழ்நாடு நர்ஸ் அசோசியேஷனின் பொதுச்செயலாளர். பலநூறு நர்ஸ்களை உருவாக்கிய ஆசிரியை.

வளர்மதியைப் போல எளிய கிராமத்துப் பெண்களுக்கு கௌரவத்தையும் அடையாளத்தையும் பெற்றுத்தந்தது நர்சிங் படிப்பு. அரசு வேலை கிடைக்கிறதோ இல்லையோ, உள்ளூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் எட்டாயிரம் ரூபாய்க்கு வேலை கிடைத்துவிடும்.

இனிமேல் கிராமத்து வளர்மதிகளுக்கெல்லாம் நர்சிங் படிப்போ நர்ஸ் வேலையோ வாய்க்காது போலிருக்கிறது. நர்சிங் படிப்புகளில் சேர, இனி நீட் தேர்வை எழுதவேண்டிய சூழல் வரும். பி.எஸ்ஸி லைப் சயின்ஸ் படிப்புக்கும் நீட் தேர்வு மூலமாக மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது தேசியத் தேர்வு முகமை.

எதிர்காலமே இருண்டகாலமா? -  கனவுகளைக் கருக்கும் தேர்வுகள்!

இதுமட்டுமல்ல... சமீபத்தில் சென்னை வந்திருந்த இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுதே, ‘கலை அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கும் தேசிய அளவில் தகுதித்தேர்வு நடத்தப்படும்’ என்று சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்.

நீட் தேர்வு, மருத்துவப் படிப்பை எளிய மாணவர் களுக்கு எட்டாக் கனியாக்கு கிறது என்ற குரல் தமிழகத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டி ருக்கிறது. விலக்கு கேட்டு தமிழகம் இயற்றிய மசோதாக்களை மத்திய அரசு புறந்தள்ளிய பிறகு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு கொடுத்து சற்றே வலி குறைத்தது தமிழக அரசு. இப்போது அடுத்த அஸ்திரத்தை எடுத்திருக்கிறது தேசியத் தேர்வு முகமை.

புதிய கல்விக்கொள்கை வரும் கல்வியாண்டில் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இப்போது 10, +1, +2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்துகிறது. புதிய கல்விக்கொள்கை 3, 5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்கிறது. தவிர, 9-ம் வகுப்பு முதல் செமஸ்டர் முறையில் ஆறுமாதங்களுக்கு ஒரு தேர்வு நடத்தப்படும். 3-ம் வகுப்பு தொடங்கி +2 வரை 11 பொதுத்தேர்வுகளைக் கடந்துவரும் மாணவர்கள், கல்லூரியில் சேர அகில இந்திய அளவிலான ஒரு பொதுத்தேர்வை எழுதவேண்டும் என்பதுதான் புதிய கல்விக்கொள்கையின் வழிகாட்டுதல். இது பள்ளிக்கல்வி முறையையே அர்த்தமற்றதாக்குகிறது என்று சுட்டிக்காட்டுகிறார்கள் கல்வியாளர்கள்.

வளர்மதி
வளர்மதி

‘‘பள்ளியில் தொழில்திறன் வளர்க்கப்படும் என்கிறது புதிய கல்விக்கொள்கை. பள்ளிக்கல்வியைத் தொழில் கற்றுக்கொடுக்கும்கூடமாக மாற்றிவிட்டு, உயர்கல்வியில் சேர கோச்சிங் சென்டர் போய்ப் படி என்று விரட்டுகிறது மத்திய அரசு. இதன்மூலம் வசதியற்ற, எளிய குடும்பத்துப் பிள்ளைகள் தாமாகவே கல்வியை விட்டு விலகி பெரு நிறுவனங்களுக்குத் தேவையான பிளம்பர்களாக, வெல்டர்களாக, எலக்ட்ரீஷியன்களாக மாறிவிடுவார்கள். இதுதான் மத்திய அரசின் எதிர்பார்ப்பு’’ என்ற குற்றசாட்டையும் முன்வைக்கிறார்கள் கல்வியாளர்கள்.

“ஏற்கெனவே இந்தியாவில் 28% மாணவர்கள்தான் +2-வுக்குப் பிறகு உயர்கல்வியில் சேர்கிறார்கள். கொரோனாவால் இது இன்னும் குறையும். தமிழகத்தில் நம் தலைவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் வாய்ப்புகளால் 50% பேர் உயர்கல்விக்கு வருகிறார்கள். நுழைவுத்தேர்வு முடிவை எதிர்த்து நிற்கவில்லை என்றால் நாம் மிகவும் பின்தங்கிவிடுவோம். சமூகத்தின் அடிநிலையிலிருக்கிற பிள்ளைகளே பெரும்பாலும் நர்சிங் படிப்புக்கு வருகிறார்கள். அவர்களையும் தடுத்து வீட்டில் முடக்கும் வேலையைத்தான் இந்த நுழைவுத்தேர்வு செய்யப்போகிறது” என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.

முதுநிலை மருத்துவப் படிப்புக் கான நீட் தேர்வுக் கட்டணம் 3,750 ரூபாயிலிருந்து 5,015 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலைத் தேர்வுக்கும் கட்டணம் உயர்த்தப்படும் என்கிறார்கள். நாடெங்கும் 10 லட்சம் பேர் தேர்வு எழுதும்பட்சத்தில் இது எவ்வளவு பெரிய தொகை..? ஒரு பக்கம் கோச்சிங் சென்டர்களில் பல்லாயிரம் கோடிப் பரிவர்த்தனை நடக்கிறது. நுழைவுத்தேர்வுகள் கல்வியை வணிகமாக்கிவிடும் என்பதே அனைவரின் அச்சமும்.

ஜவகர் நேசன், நெடுஞ்செழியன்
ஜவகர் நேசன், நெடுஞ்செழியன்

சென்னை, செங்கல்பட்டு, சேலம், மதுரை, தேனி மருத்துவக் கல்லூரிகளில் காலேஜ் ஆப் நர்சிங் உள்ளது. சுமார் 350 சீட்டுகள் இங்குள்ளன. 150-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் உள்ளன. அரசுக்கல்லூரிகளில் ஆண்டுக்கு 12,000 கட்டணம். தனியார் கல்லூரிகளில் ஒரு லட்சத்துக்கும் மேல். மூன்றாண்டு டிப்ளோமா படிப்பு, 24 அரசு நர்சிங் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. 150 தனியார் நர்சிங் பள்ளிகள் உள்ளன. ஒவ்வோராண்டும் சுமார் 6,000 பேர் நர்சிங் முடிக்கிறார்கள்.

“நர்ஸ்ங்கிறது வேலையில்லை, சேவை. அர்ப்பணிப்பு இருக்கிறவங் கதான் இந்த வேலையைச் செய் யமுடியும். அரசு மருத்துவமனைகள்ல ஏராளமான நர்ஸ் பணியிடங்கள் காலியாயிருக்கு. சம்பளம்னு பார்த்தா மாதம் 14,000 ரூபாய்தான். சம்பளத்தைத் தாண்டி ஆத்ம திருப்தின்னு ஒண்ணு இருக்கு. பெரிசா செலவில்லாததால கிராமத்துப் பிள்ளைகளுக்கு நர்சிங் படிப்பு பெரிய நம்பிக்கையாயிருக்கு. நீட் கொண்டு வந்தா கோச்சிங் போகணும். லட்சக்கணக்குல செலவுபண்ணி கோச்சிங் போய்ப் படிச்சுட்டு வர்ற ஒரு நர்ஸ், இவங்க குடுக்கிற குறைஞ்ச சம்பளத்துக்கு அரசுப்பணிக்கு வருவாங்களா? இதுக்கு விலை வச்சுட்டா சேவை மனப்பான்மை எங்கிருந்து வரும்? ஒவ்வொரு வருஷமும் டிப்ளோமா முடிச்சு வேலைக்கு வர்ற 100 நர்ஸ்கள் போஸ்ட் பி.எஸ்ஸி படிக்கப்போவாங்க. டிகிரி முடிச்சா ஆசிரிய ராக முடியும். பெரும் பணிச்சுமையோட அவங்க எப்படி நீட்டுக்குத் தயாராக முடியும்?” என்று அடுக்கடுக்காகக் கேள்வியெழுப்புகிறார் தமிழ்நாடு நர்ஸ் அசோசியேஷன் பொதுச்செயலாளர் வளர்மதி.

“உலகில் எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு இறுக்கமான நுழைவு மற்றும் தகுதித் தேர்வுகளை அரசுகள் திணிக்கவில்லை” என்கிறார் மைசூர் ஜே.எஸ்.எஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ஜவகர்நேசன்.

“அமெரிக்காவில் உயர்கல்விச் சேர்க்கைக் காக SAT என்ற தேர்வு நடைமுறையில் இருக்கிறது. இந்தத் தேர்வுக்கும் அரசுக்கும் தொடர்பே இல்லை. இதைத் தகுதித்தேர்வாகக் கொள்ளவேண்டும் என்று எந்தச் சட்டமும் அந்நாடு போடவில்லை. இந்தத் தேர்வை நடத்துவது ‘காலேஜ் போர்டு’ என்கிற தொண்டு நிறுவனம்.

அமெரிக்காவில் பாடத்திட்ட உருவாக்கம், தேர்வுகள் போன்றவற்றை கல்வித்துறை கட்டுப்படுத்துவதில்லை. பொதுவான வழிகாட்டுதல்களை மட்டுமே வகுத்துக் கொடுக்கும். பாடங்களை உருவாக்குவது, தேர்ச்சி வழங்குவது எல்லாமே பள்ளிகள்தான். இங்கு நடத்தப்படுவதுபோல பொதுத் தேர்வுகள் அங்கு இல்லை. பள்ளியளவில் தனித்தனிப் பாடத் திட்டங்களைப் படித்துவிட்டு வருகிற மாணவர்களை ஓர்நிலைப்படுத்துவதற்காக அந்தத் தொண்டு நிறுவனம் SAT தேர்வை நடத்துகிறது. ஹார்வர்டு யுனிவர்சிடி உட்பட எல்லாக் கல்வி நிறுவனங்களுமே அதை மாணவர் சேர்க்கைக்கான தகுதியாக ஏற்றுக்கொண்டுள்ளன. அதேநேரம், இந்தத் தேர்வை எழுதாத திறன்மிக்க மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள்.

இந்தத்தேர்வில் இந்திய வம்சாவளியினரும், வெள்ளைக்காரர்களுமே அதிக மதிப்பெண்களைப் பெற்றார்கள். ஆப்ரோ அமெரிக்கர்கள்போல ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் பின்தங்கியே யிருந்தார்கள். இதுதொடர்பாக ஆய்வு செய்த காலேஜ் போர்டு, இந்த ஏற்றத்தாழ்வை நீக்குவதற்காக adversity score என்ற இழப்பீட்டு மதிப்பெண் வழங்கத் தீர்மானித்தது. 31 காரணிகளைக் கணக்கிட்டு இந்த மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதை வெள்ளைக்காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனாலும் காலேஜ் போர்டு பின்வாங்கவில்லை. இதை ஏற்றுக்கொண்ட முதல் பல்கலைக்கழகம், நாம் எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமாகச் சொல்கிற ஹார்வர்டு பல்கலைக்கழகம்தான்.

இந்தியாவில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை அரசுகளே நடத்துகின்றன. பள்ளிப் பாடத்திட்டங்களை அரசே வகுத்துத் தருகிறது. கற்றல், கற்பித்தல் தொடர்பான முடிவுகளை அரசே தீர்மானிக்கிறது. அரசே பொதுத்தேர்வு நடத்தி மதிப்பெண் தந்து மாணவர்களின் தேர்ச்சியைத் தீர்மானித்தபிறகு இன்னுமொரு தகுதித்தேர்வு நடத்தினால், இதுவரை நடத்திய பொதுத்தேர்வுகளுக்கு என்ன மதிப்பு? உலகில் வேறெங்குமே இல்லாதவகையில் நுழைவுத்தேர்வைத் திணிப்பது ஒடுக்கப்பட்ட எளிய மாணவர்களைக் கல்விக்கூடத்திலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கை.

புதிய கல்விக்கொள்கை, மாணவர்களுக்கு கிரிட்டிக்கல் திங்கிங் தேவை என்று வலியுறுத்துகிறது. பாடத்திட்டங்கள், கற்பித்தல் முறைகளும் இதற்கேற்றவாறு மாற்றப்படும் என்றும் சொல்கிறது. மனப்பாடம் செய்து நான்கு பதில்களில் ஒன்றை டிக் செய்வதன்மூலம் கிரிட்டிக்கல் திங்கிங் திறனைத் தீர்மானிக்க முடியாது. இந்த எதார்த்தம் இந்த நுழைவுத்தேர்வுகளை ஆதரிப்பவர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது” என்கிறார் ஜவகர் நேசன்.

பள்ளிக்கல்வியை அர்த்தமற்றதாக்கும், கோச்சிங் சென்டர்களைக் கொழிக்க வைக்கும், அடித்தட்டு மாணவர்களின் கனவுகளைப் புதைக்கும் இதுபோன்ற நுழைவு மற்றும் தகுதித்தேர்வுகள், இளம் தலைமுறையின் எதிர்காலத்தை இருளாக்கும்.