Published:Updated:

``ஆல் பாஸ்’ முடிவு தமிழகத்திலும் சாத்தியமா?!’ – கல்வியாளரின் விளக்கம்

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

``31-ம் தேதிக்குப் பிறகு சூழலைப் பொறுத்து 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறக்கூடும். அல்லது ஒருவேளை கொரோனா பாதிப்பு அடுத்த மாதமும் தொடர்ந்தால், அரசு எத்தகைய கொள்கை முடிவுகளை எடுக்கும் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது."

கொரோனா பாதிப்பு ஒட்டுமொத்த உலகத்தையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில், 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்து அம்மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், `1 முதல் 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்’ என, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான அவசியம் மற்றும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

``கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க, மக்கள் ஓரிடத்தில் அதிகளவில் கூடுவதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 31-ம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டால், நிச்சயம் தேர்வுகளை நடத்தலாம்.

ஒருவேளை அடுத்த மாதமும் கொரோனோவின் பாதிப்பு இருக்குமானால், உத்தரப்பிரதேச அரசின் அறிவிப்பைப்போன்று, மாணவர்களின் நலன் சார்ந்து தேர்வு மற்றும் தேர்ச்சி விஷயங்களில் தமிழக அரசும் கொள்கை முடிவு எடுக்கலாம். அதற்கான சூழல் ஏற்பட்டால், முப்பருவத் தேர்வு முறையில் நடந்து முடிந்துள்ள இரண்டு பருவத் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே, மூன்றாம் பருவத் தேர்வை நடத்தாமலும் மாணவர்களை அடுத்த வகுப்புக்குத் தேர்வுசெய்யலாம். இது 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்” என்றவர், பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை விளக்கினார்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

``11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு தேர்வுகளுடன், அவ்விரண்டு வகுப்புகளுக்குமான தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்துவிடும். எனவே, இந்த மாணவர்களுக்குப் பெரிதாக எந்தச் சிக்கலும் இல்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதற்கு மாறாக பொதுத்தேர்வு தள்ளிப்போவதால், 10-ம் வகுப்பு மாணவர்களும் பெற்றோர்களும்தாம் குழப்பத்தில் இருக்க வாய்ப்புகள் உண்டு.

31-ம் தேதிக்குள் கொரோனோவின் பாதிப்பு கட்டுக்குள் வரும் என்பது அரசின் எண்ணம். அதன்படி நடந்தால் 31-ம் தேதிக்குப் பிறகு சூழலைப் பொறுத்து 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறக்கூடும். அல்லது ஒருவேளை கொரோனா பாதிப்பு அடுத்த மாதமும் தொடர்ந்தால், அரசு எத்தகைய கொள்கை முடிவுகளை எடுக்கும் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று, சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து ஆலோசித்து, 1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் குறித்த உரிய விளக்கத்தை தமிழக அரசு விரைவாகத் தெளிவுபடுத்தினால், மாணவர்களும் பெற்றோர்களும் பதற்றமடையாமல் இருப்பார்கள். அதுவரை விடுமுறை காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவது சிறந்தது” என்றார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

அடுத்த கட்டுரைக்கு