Published:Updated:

`ஆல் பாஸ் அறிவிப்பு; டீ கடைகளுக்குத் தடை!’ -அதிரடி காட்டிய முதல்வர் #corona

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கொரோனா அச்சம் காரணமாக நேற்று நடந்த ப்ளஸ் டூ தேர்வில் சுமார் 34,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ப்ளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடந்துள்ளது. ப்ளஸ் டூ பொதுத்தேர்வுக்கு சுமார் 8 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கத்துடன் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக நேற்று நடந்த ப்ளஸ் டூ தேர்வில் சுமார் 34,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தேர்வு
தேர்வு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் அமலில் இருக்கும்; மாவட்ட எல்லைகள் மூடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 23-ம் தேதி அறிவித்தார். இதன்காரணமாக நேற்று குறிப்பிட்ட வழித்தடங்களில் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. பேருந்து வசதி இல்லாதது மற்றும் கொரோனா அச்சம் காரணமாக மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை எனக் கூறப்படுகிறது.

கொரோனா அச்சம் காரணமாக தேர்வு எழுதச் செல்லாத மாணவர்கள் தங்களது எதிர்காலம் குறித்த கவலையில் இருந்தனர். தமிழக அரசு இதற்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கையாக இருந்தது.

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு தொடர்பாக தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் ப்ளஸ் டூ தேர்வு குறித்த தகவல் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்றைய தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் தனியாகத் தேர்வு நடத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `மார்ச் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் சில மாணவர்கள் தேர்வு எழுதச் செல்லவில்லை என்ற விவரம் என் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து ப்ளஸ் டூ தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாகத் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துப் பள்ளிகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டு இன்று வரை அமலில் உள்ளது. இதனால் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இறுதித்தேர்வு எழுத முடியாத சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தேநீர் கடைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதைத் தவிர்க்க தமிழ்நாடு முழுவதும் உள்ள தேநீர் கடைகள் இயங்குவதற்கு இன்று மாலை 6 மணி முதல் மறுஅறிவிப்பு வரும்வரை தடை விதிக்கப்படுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு