Published:Updated:

`தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலசுப்ரமணியம் நியமனம் ரத்து!’- உயர் நீதிமன்றம் அதிரடி

எல்லாத் தகுதியும் இருந்தும் என்னைப் போன்ற சிலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் பாலசுப்ரமணியன் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தாமலேயே, நடத்தியதாகப் பொய்யான சான்றிதழைக் காண்பித்து, தேர்வுக் கமிட்டியை ஏமாற்றி, துணைவேந்தராகத் தன்னை நியமனம் செய்யவைத்தார்.

பாலசுப்ரமணியன்
பாலசுப்ரமணியன் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால், பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்பல்கலைக்கழகம்
தமிழ்பல்கலைக்கழகம்

தமிழுக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தஞ்சாவூரில் தொடங்கப்பட்டது தமிழ்ப் பல்கலைக்கழகம். இதன் துணைவேந்தராக பாலசுப்ரமணியன் என்பவர் தற்போது இருந்து வருகிறார். `துணைவேந்தராக வரக்கூடியவர்களுக்கு சில விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. ஆனால், பொறுப்பேற்பதற்கு அடிப்படைத் தகுதியே இல்லாதவர் பாலசுப்ரமணியன். அத்துடன், தேர்வு கமிட்டியிடம் முறைகேடான ஆவணங்களைச் சமர்பித்து, துணைவேந்தராகப் பொறுப்பேற்றிருக்கிறார்’ என தமிழ்ப் பல்கலைகழகத்தில் நாடகத்துறை தலைவர் மற்றும் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இரவீந்திரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், இன்று துணைவேந்தர் பாலசுப்ரமணியன் நியமனத்தை ரத்துசெய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இரவீந்திரனிடம் பேசினோம், ``தமிழின் வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக வரக்கூடியவர்கள், தமிழ் அறிஞர்களாகவும் தமிழோடு தொடர்புடையவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு, துணை வேந்தராக வருபவர்களுக்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள், பன்னாட்டுக் கருந்தரங்கம் ஒன்றை கட்டாயம் நடத்தியிருக்க வேண்டும்.

இரவீந்திரன்
இரவீந்திரன்

கடந்த முறை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பொறுப்புக்கு வருவதற்கு 36 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில், பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தவில்லை என்று 26 பேர் விண்ணப்பத்தை ரிஜெக்ட் செய்துவிட்டனர். மீதம் உள்ள பத்து பேரை மட்டும் தேர்வு கமிட்டி நேர்காணலுக்கு அழைத்திருந்தது. எல்லாத் தகுதியும் இருந்தும் என்னைப் போன்ற சிலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் பாலசுப்ரமணியன், பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தாமலேயே நடத்தியதாகப் பொய்யான சான்றிதழைக் காண்பித்து, தேர்வு கமிட்டியை ஏமாற்றி, துணைவேந்தராகத் தன்னை நியமனம் செய்ய வைத்தார்.

அதன்படி, அவர் துணைவேந்தராகப் பொறுப்பேற்று ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. அனைத்துத் தகுதியும்கொண்ட மூன்று தமிழ் அறிஞர்கள் உட்பட, பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதில், எல்லாவிதமான தகுதியும் இருந்த எனக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் துணைவேந்தராகப் பொறுப்பேற்பதற்கு அரசு அறிவித்த அடிப்படைத் தகுதியே இல்லாதவர் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்றும், இந்தப் பொறுப்புக்கு வருவதற்கு முறைகேடான ஆவணத்தைக் காண்பித்து ஏமாற்றியிருக்கிறார் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தேன். அதில், பாலசுப்ரமணியத்தை துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்துசெய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை நான், நீதிக்கும் தமிழுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்” என்றார்.

துணைவேந்தர் பாலசுப்ரமணியன்
துணைவேந்தர் பாலசுப்ரமணியன்

இதுகுறித்து பாலசுப்ரமணியனிடம் பேசினோம், ``நீதிமன்ற உத்தரவு காப்பி எனது கைக்கு வந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரியும்” என்றார்.