Published:Updated:

2G மொபைலிலேயே இயங்கும் ஆன்லைன் கல்வி ரேடியோ; அரசுப்பள்ளி ஆசிரியரின் அசத்தல் முயற்சி!

அரசுப்பள்ளி மாணவர்கள்
News
அரசுப்பள்ளி மாணவர்கள்

ஆசிரியர் கார்த்திக் ராஜா எளிய ஆன்லைன் கல்வி ரேடியோ சேவையைத் தொடங்கியதுடன், தன் மாணவர்களுக்கு அதற்காக செல்போன்களையும் வாங்கிக் கொடுத்து நெகிழ வைத்திருக்கிறார்.

Published:Updated:

2G மொபைலிலேயே இயங்கும் ஆன்லைன் கல்வி ரேடியோ; அரசுப்பள்ளி ஆசிரியரின் அசத்தல் முயற்சி!

ஆசிரியர் கார்த்திக் ராஜா எளிய ஆன்லைன் கல்வி ரேடியோ சேவையைத் தொடங்கியதுடன், தன் மாணவர்களுக்கு அதற்காக செல்போன்களையும் வாங்கிக் கொடுத்து நெகிழ வைத்திருக்கிறார்.

அரசுப்பள்ளி மாணவர்கள்
News
அரசுப்பள்ளி மாணவர்கள்

இந்தியாவுக்குள் கடந்த ஆண்டு ஊடுருவிய கொரோனா தொற்று, லட்சக்கணக்கான அப்பாவி உயிர்களைக் காவு வாங்கியது. கொத்துக் கொத்தாக மக்கள் செத்து மடிந்த இந்தத் துயரமான காலகட்டத்தில்தான், சேவை மனப்பான்மை கொண்ட பல நல்ல உள்ளங்கள் வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர்தான் புவனகிரி ஒன்றியம் கத்தாழைப் பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் நிலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் கார்த்திக் ராஜா. கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கால வரையறையின்றி மூடப்பட்டது. அதற்கு மாற்றாக அரசு கொண்டு வந்த ஆன்லைன் கல்வித்திட்டம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எந்த விதத்திலும் பலன் தரவில்லை.

ஆன்லைன் கல்வி ரேடியோ
ஆன்லைன் கல்வி ரேடியோ

பெருந்தொற்றின் இரண்டாவது அலையின்போதும் இதே நிலை நீடித்தது. ஆனாலும் அர்ப்பணிப்பு உள்ளத்துடன் பணியாற்றிய பல அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் படிப்பு தொடர வேண்டுமென பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர். அந்த வரிசையில், ஆசிரியர் கார்த்திக் ராஜா எளிய ஆன்லைன் கல்வி ரேடியோ சேவையைத் தொடங்கியதுடன், தன் மாணவர்களுக்கு அதற்காக செல்போன்களையும் வாங்கிக் கொடுத்து நெகிழ வைத்திருக்கிறார். இவரது இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், கல்விக்கென தனியாக ரேடியோவை தொடங்க வேண்டுமென்று தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஆன்லைனில் வானொலி... கிடைத்தது புதிய வழி!

கார்த்திக் ராஜாவிடம் பேசினோம். ``தமிழக அரசு மூன்று வருடங்களுக்கு முன்பு கல்வித் தொலைக்காட்சியைத் தொடங்கியது. அந்தக் கல்வி தொலைக்காட்சியைப் போல கல்வி ரேடியோ இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

ஆனால், ரேடியோ தொடங்குவது பெரிய விஷயம் என்பதுடன், அதற்கான தேவையும் அப்போது இல்லை என்பதால் அதற்கு மேல் அதுகுறித்து நான் யோசிக்கவில்லை. அதன் பிறகு, கொரோனா முதல் அலையின்போது மீண்டும் ரேடியோ குறித்த எண்ணம் தோன்றியது. ஆனால் ரேடியோ ஆரம்பிப்பது அவ்வளவு சுலபமான பணி இல்லை என்பதால், இணையம் குறித்த தகவல்கள் அறிந்த ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் ஆலோசித்தேன். அப்போதுதான் ஆன்லைனில் வானொலி தொடங்க முடியும் என்ற புதிய வழி கிடைத்தது.

ஆசிரியர் கார்த்திக் ராஜா
ஆசிரியர் கார்த்திக் ராஜா

உடனே ஆன்லைன் ரேடியோ தொடர்பான அனைத்து விவரங்களையும் இணையத்தில் தெரிந்துகொண்டேன். பொதுவாக, ரேடியோ இயங்குவதற்கு ஸ்பீக்கர் உள்ளிட்ட கருவிகளை அடக்கிய பெட்டி தேவை. ஆனால், ஆன்லைன் ரேடியோவை பயன்படுத்த இணைய வசதிகளைக் கொண்ட செல்போன், டேப், கம்ப்யூட்டர் போன்றவையே போதும். விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு போன்கள்கூட தேவையில்லை. 2ஜி இணைய வசதியைக் கொண்ட சாதாரண பட்டன் போன்களே போதுமானது.

பட்டன் போன், வாட்ஸ்அப் குழு!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சோதனை ஓட்டமாக எங்கள் பள்ளியில் மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் `ஆன்லைன் கல்வி ரேடியோ’யைத் தொடங்கினேன்.

முதலில் தொடங்கிய ரேடியோ, ஆண்ட்ராய்டு செல்போனில் மட்டும்தான் இயங்கியது. ஆனால், அவர்கள் அனைவரிடமும் செல்போன்கள் இல்லை. சிலரிடம்தான் ஆண்ட்ராய்டு போன் இருந்தது. மற்ற மாணவர்களிடம் சாதாரண பட்டன் போன்தான் இருந்தது. அதனால் அனைத்து போன்களிலும் இயங்கும் விதமாக மீண்டும் முயன்றேன். அந்த முயற்சி வெற்றியடைந்தது. ஆனால், அப்போது ஒரே நேரத்தில் 10 மாணவர்கள் மட்டும்தான் அந்த ரேடியோவை கேட்க முடிந்தது. அதன் பிறகு பணத்தை செலுத்தி, உலகின் எந்த மூலையில் இருந்தும் எத்தனை மாணவர்கள் வேண்டுமானாலும் கேட்கும்படி எளிய ஆன்லைன் கல்வி ரேடியோவின் தரத்தை உயர்த்தினேன். பள்ளி மாணவர்கள் தொடர்பாக எந்த முயற்சியை நான் மேற்கொண்டாலும் அனைவரும் தெரிந்துகொள்ளும்படியாக அந்தத் தகவலை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துவிடுவேன்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

அதன்படி ஆன்லைன் ரேடியோ லிங்க்கையும் பகிர்ந்தேன். அதையடுத்து மூன்று மற்றும் நான்காம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் அனைவரும் அதைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

இணைந்த ஆசிரியர்கள், 38 மாவட்டங்கள், 2,70,000 பேர்!

அப்போது என்னைத் தொடர்பு கொண்ட சக ஆசிரியர்கள், `மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் இந்த முறையில் பாடம் நடத்தினால் உதவியாக இருக்குமே’ என்று ஆலோசனை கூறினார்கள். அதன்படி அவர்கள் பாடம் நடத்தியதை அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் ஆன்லைன் ரேடியோவில் தொகுத்து வழங்கினேன். அரசுப் பள்ளி மாணவர்களை முன்னேற்றத் துடித்துக்கொண்டிருக்கும் நிறைய ஆசிரியர்கள் எங்களுடன் இணைந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் என்னைப் போன்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.

தற்போது 38 மாவட்டங்களைச் சேர்ந்த 75 ஆசிரியர்கள் குழுவாக இணைந்து 1 - 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் பாடங்களைத் தொகுத்துக் கால அட்டவணை முறைப்படி வழங்குகிறோம். கடந்த ஆறு மாதத்தில் எங்கள் ஆன்லைன் ரேடியோ பக்கத்துக்கு 2,70,000 பேர் வருகை தந்திருக்கின்றனர். அதேபோல சுமார் 15,000 மணி நேரம் ஆன்லைன் கல்வி ரேடியோ இயங்கியிருக்கிறது. எங்கள் ரேடியோவை கேட்கும் மாணவர்களுக்கு பாடங்கள் தொடர்பான தகவல்களை மட்டும் நாங்கள் தருவதில்லை. விடுகதைகள், திருக்குறள், நற்சிந்தனை கருத்துகள் போன்ற அவர்களை நல்வழிப்படுத்தும் தகவல்களையும் தருகிறோம்.

24 மணி நேரமும் இயங்கும் இந்த ரேடியோவில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களுக்கான பாடங்கள் நடத்தப்படும். மாணவர்கள் சோர்ந்துவிடக் கூடாது என்பதால் அரை மணி நேரத்துக்கு ஒரு வகுப்பு எனப் பிரித்திருக்கிறோம். அதன் பிறகு, விடுகதைகள் கேட்கப்படும். அதேபோல மாலை 6 மணிக்கு `மின்மினிகள் மின்னும் நேரம்’ என்ற தலைப்பில் மாணவர்களே பேசி அனுப்பும் கதைகள், கருத்துகள் போன்றவை ஒலிபரப்பாகும். அதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இ-சான்றிதழ்களையும் வழங்குகிறோம்.

ப்ளே லிஸ்ட் வசதி உண்டு... மொபைல் அபாயம் இல்லை!

24 மணி நேரமும் ரேடியோ இயங்கும் என்றாலும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரைதான் புதிய பாடங்கள் நடத்தப்படும். அந்தந்த மாணவர்கள் அவர்களுக்குரிய நேரத்தில் பாடங்களை கேட்டுக்கொள்வார்கள். அதேபோல அனைத்துப் பாடங்களும் `பிளே லிஸ்ட்’ என்ற பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அதன்மூலம் விடுபட்ட பாடங்களை அல்லது மீண்டும் மீண்டும் கேட்க நினைக்கும் பாடங்களை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போது ஆன்லைன் கல்விக்காக மாணவர்களின் கைகளில் கொடுக்கப்படும் ஆண்ட்ராய்டு போன்கள் தேவையில்லாத பக்கங்களுக்கு அவர்களை இழுத்துச் செல்லும் அபாயங்கள் இருக்கின்றன. அவர்கள் படிக்கிறார்களா அல்லது `பப்ஜி’ கேம் விளையாடுகிறார்களா என்பது தெரியாது. ஆனால், ஆன்லைன் கல்வி ரேடியோவில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. பெற்றோர்கள் அதைக் கேட்க முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. தற்போது செல்போன்கள் வாங்குமளவுக்கு வசதியில்லாத என் மாணவர்களுக்கு மட்டும் ஆரம்பநிலை செல்போன்களை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்” என்றார் மகிழ்ச்சியுடன்.

மகிழ்வான வாழ்த்துகள் ஆசிரியரே!