Published:Updated:

`ஃபீஸ் கட்டாததால் வெயிலில் நிற்கவைக்கப்பட்ட மாணவி'- கைகொடுத்த காங்கிரஸ் நிர்வாகி

வாணியம்பாடி அருகே கல்விக் கட்டணத்தை குறைவாகச் செலுத்தியதால், ஆட்டோ ஓட்டுநரின் மகளை வெயிலில் நிற்கவைத்துத் தண்டித்திருக்கிறது, தனியார் பள்ளி நிர்வாகம். மயங்கி விழுந்த அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. ஆட்டோ ஓட்டுநர். இவரது மகள் காயத்திரி, செட்டியப்பனூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். இந்தாண்டு கல்விக் கட்டணமாக 45 ஆயிரம் ரூபாயைக் கட்ட பள்ளி நிர்வாகம் சொல்லியிருக்கிறது. காயத்திரியின் தந்தை ஆட்டோ ஓட்டுவதால் அவரால் 9 ஆயிரம் ரூபாயை மட்டுமே தற்போது கட்ட முடிந்திருக்கிறது.

காயத்திரி
காயத்திரி

மீதி தொகையைத் சில நாள்களில் தருவதாகக் கூறியிருக்கிறார். இதை ஏற்காத பள்ளி நிர்வாகம், மீதித் தொகையை உடனே செலுத்துமாறு கூறி காயத்திரியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வளாகத்திலேயே நிற்கவைத்திருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் நின்ற அந்த மாணவி, திடீரென மயங்கிவிழுந்தார். அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கையைப் பல்வேறு தரப்பினர் கண்டித்திருக்கிறார்கள். காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி காயத்திரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், 30 ஆயிரம் ரூபாயைக் கல்வி நிதி உதவியாக அந்த மாணவிக்கு வழங்கினார். 

30 ஆயிரம் ரூபாய் வழங்கிய அஸ்லம் பாஷா
30 ஆயிரம் ரூபாய் வழங்கிய அஸ்லம் பாஷா

இதுபற்றி நம்மிடம் பேசிய அஸ்லம் பாஷா, ‘‘ஒரு ஆட்டோ ஓட்டுநர் மிகவும் கஷ்டப்பட்டு தன் மகளைப் படிக்கவைக்கிறார். இதை உணராத அந்தப் பள்ளி நிர்வாகம், பணத்திற்காக மாணவியை வெயிலில் நிற்கவைத்து தண்டனை வழங்கியிருப்பது மனித உரிமை மீறல். இந்தச் சம்பவம் என்னை மனதளவில் பாதித்ததால் நான் உதவிசெய்தேன். அந்தக் காலத்தில் காமராஜர் நிறைய பள்ளிகளைத் திறந்தார். படிக்காத அந்த மேதையே படி படி என்றார். 

இப்போதைய அரசு, குடி குடி என்று சொல்லி மதுக்கடைகளைத் திறந்துகொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்காமல் போவதால்தான் தனியார் பள்ளிகளை நோக்கி மக்கள் செல்கிறார்கள். தெருவுக்குத் தெரு தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதி கொடுத்தால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறையத்தான் செய்யும். உடனே, அரசுப் பள்ளியை இழுத்து மூடுகிறார்கள் அல்லது நூலகமாக மாற்றுகிறார்கள்.

அஸ்லம் பாஷா
அஸ்லம் பாஷா

இப்படியிருந்தால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை எப்படியிருக்கும். கல்வித் தரத்தை உயர்த்த முதல்வரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் என்ன செய்திருக்கிறார்கள். சாதாரண அடிப்படை அறிவுகூட இந்த ஆட்சியாளர்களுக்கு இல்லை. அந்தப் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி ப்ளஸ் டூ முடிக்கும் வரை அதற்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகமே ஏற்கவேண்டும்’’ என்றார்.