Published:Updated:

டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்... காரணம் என்ன?

விஷ்ணுராஜ் சௌ

பொருளாதார அடிப்படையில் பத்து சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகின்றன.

டெல்லிப் பல்கலைக் கழகம்
டெல்லிப் பல்கலைக் கழகம்

மக்களவையில் 323 வாக்குகள், மாநிலங்களவையில் 165 வாக்குகள் ஆதரவாகப் பெற்று, இரு அவைகளிலும் நிறைவேறியது பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான பத்து சதவிகித இடஒதுக்கீடு மசோதா. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இந்தியா முழுமைக்கும் இடஒதுக்கீடு குறித்தான சர்ச்சைகள் தொற்றிக் கொண்டன. எல்லைப் பாதுகாப்புப்படையில் சேருவதற்கான தேர்வு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு செய்தித்தாள்களில் வெளியான நிலையில், அதில் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு ஒதுக்கப்படாமல், புதிதாகக் கொண்டுவரப்பட்ட பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு மட்டும் அமலாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மாணவர்கள்
மாணவர்கள்

இதன் மூலம் பொருளாதார அடிப்படையிலான 10 சதவிகித இடஒதுக்கீட்டை கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. டெல்லிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், இந்த 10 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி, தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது புதிதல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்தபோதே விவாதிக்கப்பட்டதுதான். இடஒதுக்கீட்டு முறைக்குப் பொருளாதாரத்தை அடிப்படையாக வைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் நேருவின் குரலும் ஓங்கி ஒலித்தது. ஆனால், இன்றைய நிலையோ வேறொன்றாக உள்ளது. மேடைப் பேச்சுகளின் போதெல்லாம் 'நாங்கள் நேருவின் வழியில் நிற்கின்றோம்' என்று கூறுபவர்கள், தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, இந்த மசோதாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்கள். சமீபத்தில் தமிழகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் “நிபந்தனை உடன் வரவேற்கிறோம்” எனத் தங்களின் நிலைப்பாட்டை முன் வைத்திருக்கிறது தமிழக காங்கிரஸ் தலைமை.

இந்த மசோதாவை நடைமுறைப்படுத்துவதில் நிச்சயம் சிக்கல் இருக்கும்.
கபில்சிபல்

பொருளாதார அடிப்படையிலான 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்த மசோதாவானது, மாநிலங்களவையில் கிட்டத்தட்ட 10 மணி நேரங்களுக்கும் மேல் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தில் பங்கு பெற்ற முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில்சிபல், இந்த மசோதாவில் உள்ள சிக்கல்கள் எனச் சில கருத்துகளை முன் வைத்தார். அவற்றில் முக்கியமானது, “இந்த மசோதாவை நடைமுறைப்படுத்துவதில் நிச்சயம் சிக்கல் இருக்கும்” என்றார்.

ஆம், இப்போது நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. சட்டதிட்டங்களில் உள்ள சிக்கல்கள் ஒரு புறமிருக்க, இப்போது இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் இந்தியா எங்கும் ஏற்பட ஆரம்பித்துள்ளன. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான இடஒதுக்கீட்டு பிரச்னைகளுக்கே இன்னும் தீர்வு கண்டபாடில்லை. குழப்பமான நிலையிலேதான் அவை உள்ளன.

Vikatan

மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழக அரசு மொத்தமுள்ள சீட்டுகளை 25 சதவிகிதம் உயர்த்திக் கொண்டு, அதன் வாயிலாக ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்திக் கொள்ளுமாறு வாய்ப்புகளை வழங்கியது எம்.சி.ஐ. ஒடிசா போன்ற மாநிலங்கள் இவற்றை ஏற்று, கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டன.

இந்த நடைமுறையானது, குறைவான இடங்களைப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு வழங்கிவிட்டு அதிகமான இடங்களை அபகரித்துக் கொள்வதற்கான முயற்சி. எனவே, இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க உள்ளிட்ட பெருவாரியான கட்சிகள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் இன்னும் இதில் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை.

கபில் சிபில்
கபில் சிபில்

இதே பிரச்னைதான், தற்போது டெல்லிப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டத்திற்கும் காரணமாகியுள்ளது. கிட்டத்தட்ட நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்காலிக முறையில் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் இந்த 10 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நினைக்கும் நிலையில் 400-க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் வேலையிழக்கும் நிலையில் உள்ளனர். எனவே, இவற்றை எதிர்த்து கடந்த திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் ஆசிரியர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க துணைத்தலைவர் சுதன்ஷூ குமார், "சமீபத்தில் இந்திய உயர்கல்விப் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தைப் பற்றிய கூட்டம் ஒன்று டெல்லிப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடத்திட்டங்களில் சில பிரச்னைகள் இருந்தன. அதுபற்றிய விவாதங்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் உள்ளரங்கில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஒரு மாணவர் உள்ளே அத்துமீறி வந்து கூச்சலிட ஆரம்பித்து விட்டார்.

Vikatan

ஆனால், கடந்த இரண்டு நாள்களாக தற்போதைய சூழலில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதால் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்த நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டோம். இதுதான் களநிலவரமாக உள்ளது.

பல ஆண்டுகளாகத் தற்காலிக ஆசிரியர்களாக உள்ளவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம். ஆனால், அவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது இந்தப் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆசிரியர் பணியிடங்களுக்கு நடைமுறைப்படுத்துவதாகக் காரணம் காட்டி 400-க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் வேலையைப் பறிக்கும் சூழலை உருவாக்கியுள்ளனர். எங்கள் போராட்டத்திற்கு வழக்கம்போல தீர்வு கிடைக்கவில்லை. போராட்டம் மட்டும் தொடர்கிறது” என்றார்.

டெல்லி பல்கலைக் கழகம்
டெல்லி பல்கலைக் கழகம்

அரசின் முடிவுகள் மக்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது!