Published:Updated:

``ஆரோக்கியமான உணவு... எந்த மதமாக இருந்தால் என்ன?'' - `அட்சய பாத்ரா’ திவ்யா சத்யராஜ்

திவ்யா சத்யராஜ்
திவ்யா சத்யராஜ்

பள்ளி மாணவர்களுக்கு `அட்சய பாத்ரா' என்ற அறக்கட்டளை இலவச உணவு வழங்கிவருகிறது. இந்த அமைப்பின் தூதுவராக, நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்த கேள்வியின்போது, "நான் ஊட்டச்சத்து நிபுணர்; இந்து அல்ல'' என்று காட்டமாகப் பதிலளிக்கிறார்.

சென்னையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு `அட்சய பாத்ரா அறக்கட்டளை'யினர் வழங்கும் இலவச காலை உணவுத் திட்டம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது. 'இஸ்கான்' என்ற இந்து மத அமைப்பைச் சார்ந்தவர்கள் நடத்திவரும் 'அட்சய பாத்ரா' அறக்கட்டளை, சைவ உணவுகளை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுத்து மத ரீதியாக மக்களைப் பிரித்தாள்கிறது என்ற குற்றச்சாட்டு இதில் வலுவாக எதிரொலிக்கிறது.

திவ்யா - சத்யராஜ்
திவ்யா - சத்யராஜ்

இந்நிலையில், இந்த அறக்கட்டளையின் தூதுவராக நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளது பலரது புருவங்களை உயரச் செய்துள்ளது. 'இறை மறுப்பாளராக, பகுத்தறிவாளராக அறியப்பட்ட நடிகர் சத்யராஜ் குடும்பத்தின் வாரிசு ஒருவரே இதுபோன்ற மத அடிப்படையிலான நிறுவனத்தின் பிடியில் சிக்கலாமா...' என்று கேட்டு கொதித்து வருகிறார்கள் கறுப்புச் சட்டைக்காரர்கள்!

இதையடுத்து, 'அட்சய பாத்ரா அறக்கட்டளை'யின் தூதுவரும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யாவிடம் பேசினோம்...

`5 வயது முதல் மாடலிங்; அமெரிக்காவின் ஃபேஷன் ஐகான்!’ - `மெலானியா ட்ரம்ப்’... சில  சுவாரஸ்ய தகவல்கள்

''அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு அளிக்க வேண்டிய அவசியம் என்ன?''

''உடல் ஆரோக்கியம் என்பது வசதியானவர்களுக்கு மட்டுமானதாக இருக்கக் கூடாது. ஏழைக் குழந்தைகளுக்கும் நிறைவான ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைத்தாக வேண்டும். 'வைட்டமின் குறைபாடு' பற்றி நான் மேற்கொண்ட ஆய்வில், அரசுப் பள்ளி மாணவர்களிடையே இந்தப் பாதிப்பு அதிகம் இருப்பது தெரியவந்தது. குழந்தைகள் மட்டுமன்றி, எல்லோருக்குமே காலை உணவுதான் மிகவும் அத்தியாவசியமானது. எனவே, வளர் பருவத்திலுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு, காலை உணவு என்பது ரொம்பவே அவசியமான ஒன்று!''

திவ்யா சத்யராஜ்
திவ்யா சத்யராஜ்

'' 'அட்சய பாத்ரா அறக்கட்டளை'யின் தூதுவராக நீங்கள் தேர்வானது எப்படி?''

''பள்ளிக் குழந்தைகளிடையேயான வைட்டமின் குறைபாடு பற்றி நான் ஆய்வு மேற்கொண்டிருந்த சமயத்தில்தான், அட்சய பாத்ரா அமைப்பின் ஊட்டச்சத்து ஆலோசகர் மற்றும் பிராண்ட் அம்பாசடராகப் பொறுப்பேற்றுக்கொள்ளச் சொல்லி அவ்வமைப்பினரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. இந்தியா முழுவதும் இவ்வமைப்பினர் செய்துவரும் பணிகளைப் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தேன். ஒபாமா போன்ற பெரிய தலைவர்களேகூட 'அட்சய பாத்ரா' அமைப்பினரின் பணிகளைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள். எனவே, எந்தவித தயக்கமுமின்றி தூதுவராக ஒப்புக்கொண்டேன்!''

"கடவுள் மறுப்பாளரான நடிகர் சத்தியராஜின் மகள், இந்து மதம் சார்ந்த ஓர் அறக்கட்டளையின் அம்பாசடராகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறதே..?''

"நிறையபேர் நேரிலேயேகூட என்னிடம் கேட்டுவிட்டார்கள். 'வெளியில் பகுத்தறிவு பேசிவருகிற நீங்கள், இப்படி இந்து மத அடிப்படையிலான ஒரு நிறுவனத்தில் இணைந்திருக்கலாமா...' என்று.

என்னைப் பொறுத்தவரையில், பள்ளிக்கூட விண்ணப்பத்தில்கூட, மதம் என்ற கேள்விக்கு எதிரே, 'எனக்கு இது பொருந்தாது' என்றுதான் பதிலளித்து வந்திருக்கிறேன். இப்போதும் குறிப்பிட்ட எந்தவொரு மத அடையாளமும் எனக்கு இல்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், 'நான் இந்து அல்ல!'

அதேசமயம், நல்லதொரு ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறேன் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் 'அட்சய பாத்ரா' அமைப்பினர் என்னைத் தொடர்புகொண்டதாகவே நான் நம்புகிறேன். அவர்களும்கூட, குழந்தைகளுக்கான உணவை சுத்தமாக, ஆரோக்கியமாகத் தயாரித்தளிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். உணவு தயாரிக்கப்படும் கூடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததன் அடிப்படையிலேயே இதை நான் சொல்கிறேன்.

ஆக, என் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான - சுத்தமான ஊட்டச்சத்து கிடைக்கிறது என்றால், அது எந்த மதத்தைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தால் என்ன..?''

அட்சய பாத்திரம்
அட்சய பாத்திரம்
For Representation Only
`கண்டதும் சுட உத்தரவு?!' - டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த அதிரடி #NowAtVikatan

''வளர் பருவத்திலுள்ள பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும் அசைவ உணவு வகைகளை இவ்வமைப்பினர் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?''

''பெரும்பாலும் காலை உணவில், முட்டையைத் தவிர அசைவ உணவுகளை யாரும் சேர்த்துக்கொள்வதில்லை என்பதுதான் எதார்த்தம். 'அசைவ உணவுகளை நாங்கள் வழங்குவதில்லையே தவிர, வேறு யாரேனும் முட்டை வழங்கினால், அதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை' என்றுதான் அட்சய பாத்திரம் அமைப்பினரும் கூறுகின்றனர்.

பொதுவாக, 'சைவ உணவில், புரோட்டீன் அளவு குறைவாக இருக்கிறது' என்ற நம்பிக்கை இங்கு எல்லோரிடத்திலுமே இருக்கிறது. ஆனால், சோயா, பருப்பு என சைவ உணவுகளிலிருந்தும் நமக்குத் தேவையான புரோட்டீனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுதான் ஓர் ஊட்டச்சத்து நிபுணராக என் கருத்து.

இந்த வகையில், ஒரு குழந்தைக்குத் தேவையான கலோரி அளவைக் கணக்கிட்டு, அதே அளவிலான கலோரி கிடைக்கும் வண்ணம் சைவ உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன!''

திவ்யா சத்யராஜ்
திவ்யா சத்யராஜ்

"அசைவ உணவுகளைத் தவிர்ப்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடு ஏற்படும் என்கிறார்களே மருத்துவர்கள்?''

"அசைவ உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து வருபவர்களுக்கு பி12 வைட்டமின் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது உண்மைதான். சைவ வகை உணவுகளில் இந்த வைட்டமின் மிகமிகக் குறைவாகவே கிடைக்கும். ஆனால், பால் பொருள்களில் வைட்டமின் பி 12 அதிகம் இருப்பதால், இதைச் சாப்பிட்டு பூர்த்தி செய்துகொள்ள முடியும்.''

அடுத்த கட்டுரைக்கு