Published:Updated:

மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு: தாமதம் குறித்து பா.ம.க-வும் தி.மு.க-வும் சொல்வது என்ன?

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

̀`மருத்துவ உயர் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்காமல் வஞ்சித்து வருகிறது மத்திய பா.ஜ.க அரசு' என்கின்றன தமிழக அரசியல் கட்சிகள்.

தமிழக அரசியல் வரலாற்றில், முதன்முறையாக அ.தி.மு.க - தி.மு.க-வை கைகோக்க வைத்து சாதனை படைத்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. ``மருத்துவ உயர் படிப்புகளில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய பா.ஜ.க அரசு மறுக்கிறது" என்ற உரிமை மீட்புக்கான போராட்டக் களத்தில், அ.தி.மு.க - தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டிருக்கின்றன.

``மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லும் மத்திய அரசு, உயர் சாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை மட்டும் கொடுத்துவருவது சமூக அநீதி'' என்று தமிழக பா.ஜ.க-வோடு கூட்டணியில் அங்கம்வகித்த பா.ம.க.வும் இதை கடுமையாகச் சாடியிருக்கிறது.

தமிழக அரசியல் தலைவர்கள்
தமிழக அரசியல் தலைவர்கள்

``தமிழ்நாட்டிலிருந்து ஒப்படைக்கப்படும் இடங்களில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும்" எனத் தி.மு.க தரப்பிலும் தொடர்ச்சியான அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், ``மருத்துவ உயர் படிப்புகளில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே கொடுக்கப்படவில்லை. ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை என்பதுபோன்ற பொய்யான செய்தியைப் பரப்புகின்றன தமிழக அரசியல் கட்சிகள்" என்று பதிலடி கொடுத்துவருகிறது தமிழக பா.ஜ.க.

இதுகுறித்துப் பேசும் தி.மு.க எம்.பி-யும் மருத்துவருமான செந்தில்குமார், ``மருத்துவக் கல்வி உயர் படிப்புகளில், 2006-ம் ஆண்டு வரையிலுமே இந்திய அளவில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கே இட ஒதுக்கீடு கிடையாது. 2003-லிருந்து இதற்காக நிறைய போராட்டங்களை முன்னெடுத்த பிறகுதான் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. இதிலும்கூட, ஆரம்பத்தில் வெறுமனே 9 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு என்ற வகையில் கொடுத்தனர். அதையும்கூட, இருக்கிற 100 சதவிகித சீட்களிலிருந்து 9 சதவிகிதமாகப் பிரித்துக் கொடுக்காமல், புதிதாக 9 சீட்களை உருவாக்கி அந்த சீட்களையே இடஒதுக்கீடாகக் கொடுத்தனர். இது இடஒதுக்கீட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்கே விரோதமானது.

2007-லிருந்துதான் ஓ.பி.சி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தச் சொல்லி, உச்ச நீதிமன்றம் உத்தரவு கொடுத்துவிட்டது. ஆனாலும்கூட, அப்போதைய காலகட்டத்தில், இதுகுறித்த விழிப்புணர்வு ஓ.பி.சி மக்களுக்கே இருந்ததில்லை. எனவே, அதை அமல்படுத்தச் சொல்லி அப்போதைய காங்கிரஸ் அரசை வற்புறுத்தாமல் விட்டது தவறுதான்.

மருத்துவர் செந்தில்குமார்
மருத்துவர் செந்தில்குமார்

எம்.பி.பி.எஸ் என்ற மருத்துவப் படிப்பு குறித்து மக்களிடையே இருந்த தெளிவு, அதே மருத்துவப் படிப்பின் உயர் படிப்பில் உள்ள இடஒதுக்கீடு பற்றி போதுமான அளவில் இல்லை. ஏனெனில், 100 எம்.பி.பி.எஸ் சீட்களைக் கொண்ட மருத்துவக் கல்லூரியில், உயர் படிப்பு என்பது ஒவ்வொரு துறை சார்ந்தும் இரண்டு அல்லது மூன்று சீட்கள் மட்டுமே இருக்கும். அதனால், பெரியளவில் இந்த இடஒதுக்கீடு பற்றி யாரும் கவனம் கொள்ளவில்லை. ஆனால், இப்போது மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சீட்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதோடு சேர்ந்தே உயர் படிப்புகளுக்கான இடங்களும் அதிகரித்துவிட்டன. எனவே, ஓ.பி.சி-யினருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள் என்று நாடு முழுக்கவே கோரிவருகிறோம்.

உயர் படிப்புகளுக்கான இடங்கள் என்பது எல்லா மருத்துவக் கல்லூரிகளுக்கும் கிடைத்து விடுவதில்லை. உதாரணமாக, தர்மபுரியில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கே கடந்த ஆண்டிலிருந்துதான் உயர் படிப்புகளுக்கான சீட்கள் கிடைத்துள்ளன. இப்படி உயர் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில்தான், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமையும் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்க ஆரம்பித்திருக்கிறது.

எந்தவித கோரிக்கையும் எழாமலேயே, உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டு உரிமையைக் கொடுத்தவர்கள், மருத்துவ உயர் படிப்புகளிலும்கூட அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை கொடுத்துவருகிறார்கள். ஆனால், சட்டப் போராட்டங்களும் வாதங்களுமாக ஓ.பி.சி-னருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடைப் பெற நாம் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலும்கூட, மத்திய பா.ஜ.க அரசு, ``பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க மாட்டோம்" என்பதில் உறுதியாக இருக்கிறது. அதனால்தான் இந்தப் பிரச்னையை எழுப்பும்போதெல்லாம், ``உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது, இட ஒதுக்கீடு வழங்குவதில் ஒவ்வொரு மாநிலங்களுக்கிடையேயும் வேறுபாடுகள் இருக்கின்றன" என்றெல்லாம் காரணங்களை மட்டும் சொல்லிவருகிறார்கள்.

``மத்திய பா.ஜ.க அரசும் 27 சதவிகித இடஒதுக்கீட்டை கொடுக்கத் தயாராக உள்ளது" என்று உச்ச நீதிமன்றத்தில் சொன்ன மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில், ``இட ஒதுக்கீடு கொடுக்க வழியில்லை" என்று மாற்றிச் சொல்லியிருக்கிறது. ஆக, ஒரே வரியில் சொல்வதானால், `பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க மத்திய பா.ஜ.க அரசுக்கு மனம் இல்லை!'' என்றார் அழுத்தமாக.

மருத்துவப் படிப்பு
மருத்துவப் படிப்பு

``பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்தெல்லாம் இங்குள்ள தமிழக அரசியல் கட்சிகளுக்கு அக்கறையில்லை. வாக்கு அரசியலுக்காகத்தான் இந்தக் கட்சிகள் அனைத்தும் அக்கறை உள்ளதுபோல், காட்டிக்கொள்கின்றன" என்று பா.ஜ.க குற்றம் சாட்டுகிறது.

இதுகுறித்துப் பேசுகிற பா.ம.க முன்னாள் எம்.பி-யும் மருத்துவருமான செந்தில்,

``பா.ஜ.க எப்படிப்பட்ட கட்சி என்பது உங்களுக்கும் தெரியும்; எங்களுக்கும் தெரியும். பா.ம.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் அப்படியொரு முனைப்பு இல்லையென்று ஒரு பேச்சுக்காக வைத்துக்கொண்டால், பின்தங்கிய மக்களுக்கான நலனில் உங்களுக்கு சிறிதளவேனும் அக்கறை இருந்தால், அதைச் சரிசெய்ய நீங்கள் முயற்சி செய்ய வேண்டுமா, கூடாதா?

மருத்துவர் செந்தில்
மருத்துவர் செந்தில்

1990-ல் மண்டல் கமிஷன் கொண்டுவரப்பட்டபோதும்கூட, கல்வியில் கொண்டுவராமல் வேலைவாய்ப்பில் மட்டுமே கொண்டுவரப்பட்டது. அதனால்தான் 2006-ல் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், மருத்துவர் ராமதாஸ் மருத்துவ உயர் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பதை ரொம்ப அழுத்தமாக வலியுறுத்தினார். இதன் அடிப்படையில்தான் அரசியல் சாசனத்தின் திருத்தமே கொண்டுவரப்பட்டது. 2009-ம் ஆண்டுதான் இதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வருடத்துக்கு 9 சதவிகிதம் என்ற அடிப்படையில் தவணை முறையில் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், நிர்வாகத்தில் உள்ள உயர் சாதியினரின் ஆதிக்கத்தினால் நடைபெறாமலே போய்விட்டது.

அதிகார வர்க்கம் என்பது அரசியல்வாதிகளுக்கு கீழ்பட்டதுதான். அதனால்தான், மக்களுக்கான நலத்திட்டங்களை வகுக்கும்போது, அதிகாரிகள் தரப்பினர் `பணம் இல்லை' என்று தயங்கியபோதும், `நான் சொல்கிறேன்... இதைக் கட்டாயம் செய்தே ஆக வேண்டும்' என்று உறுதியாக நின்று பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார் காமராஜர். அதனால்தான் அவர் கர்ம வீரர்! திறன்மிக்க அவரது செயல்பாடுதான் நல்லதொரு அரசியல் ஆளுமை.

ஆனால், 2009-ல் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கும் அதன்பிறகு 2 முறை ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் பா.ஜ.க-வுக்கும் இட ஒதுக்கீடு விஷயத்தில் .001 சதவிகிதம் முனைப்பு இருந்தால்கூட, இதை நிறைவேற்றியிருக்க முடியும். அரசியல் சாசனத் திருத்தம் செய்யப்பட்டு, நாடாளுமன்ற அவைகளில் மசோதாவாகத் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை, அமல்படுத்துவதில் இவ்வளவு தயக்கமும் குழப்பமும் ஏன்?

2019-ம் ஆண்டில் உயர் சாதி ஏழைகளுக்காக 10 சதகிவிகித இட ஒதுக்கீட்டுக்கான அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து, அடுத்த 4 மாதங்களிலேயே 100 சதவிகிதம் அந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆண்டும் 10 சதவிகித இட ஒதுக்கீடு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

மருத்துவப் படிப்பு
மருத்துவப் படிப்பு

`2009- ஆண்டிலிருந்தே பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நடைபெறவில்லை. இதற்கு நாங்கள் காரணமில்லை...' என்று இன்றைய மத்திய பா.ஜ.க அரசு ஒப்புக்கொள்கிறது. ஆனால், இந்த மத்திய அரசுக்கு மனசாட்சி இருந்தால், இதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் - முனைப்பு இருந்தால், இவர்களாவது செய்திருக்கலாமே. எதையுமே செய்யாமல், அடுத்தவர் மீது மட்டுமே குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதென்பது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கொடுப்பதில் மத்திய பா.ஜ.க அரசுக்கு விருப்பம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் கடமை என்பது, அரசியல் சாசனத்தையும் அரசியல் சட்டங்களையும் காப்பதுதான். ஆனால், இன்றைய மத்திய பா.ஜ.க அரசால், இதைக்கூடச் செய்ய முடியவில்லையெனில், இந்த அரசு இருந்தால் என்ன... இல்லாவிட்டால் என்ன என்ற அளவுக்கு கோபம் வருகிறது. இட ஒதுக்கீட்டுக்காகக் கோரிக்கை எழுப்பி யாரையும் நாங்கள் கெஞ்சவில்லை. ஏற்கெனவே அரசியல் சாசனத் திருத்தம் செய்யப்பட்டு உறுதியாக்கப்பட்ட சட்டத்தை அமல்படுத்துங்கள் என்ற எங்களது உரிமையைத்தான் கேட்கிறோம்.

ஏற்கெனவே அமலில் உள்ள வேலைவாய்ப்புகளிலும்கூட, இட ஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்படுவது இல்லை. இதைப்பற்றிக் கேட்டால், `தகுதிவாய்ந்த நபர்கள் கிடைக்கவில்லை' என்று சாக்குபோக்கு சொல்வார்கள். ஆனால், கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு மட்டும் மிகச்சரியாக நிரப்பப்பட்டு வருகிறது'' என்றார் கொதிப்பாக.

இந்தநிலையில், தி.மு.க மற்றும் பா.ம.க முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

``மருத்துவ உயர் படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எந்தவொரு அரசாங்கமும் இதுவரை கொடுக்கவில்லை. 2007-ம் ஆண்டு, மத்திய ஆட்சிப் பொறுப்பில் காங்கிரஸ் கட்சி இருந்தபோதே, `மத்திய அரசு நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்' என சட்டம் கொண்டுவந்தார்கள். அப்போதே இந்த `அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில கல்லூரிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்' என்று ஏன் வலியுறுத்தவில்லை. அப்படி நீங்கள் கேட்கவிடாமல் உங்களைத் தடுத்தது யார்?

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இதைக் கேட்டால், அப்போது குறைந்த இடங்களே இருந்தன... மக்களிடமும் விழிப்புணர்வு இல்லை என்கிறீர்களே... அப்படியென்றால், பா.ஜ.க அரசு வந்த பிறகுதான் மருத்துவ இடங்களைப் பெருக்கியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா..? அடுத்ததாக, மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி-யினருக்கான இட ஒதுக்கீடு தொடர்ந்து கொடுக்கப்பட்டுதான் வருகிறது.

மருத்துவ உயர் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றபோது, நீதிமன்றமும் `எஸ்.டி, எஸ்.சி மக்களுக்கு இந்த இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்' என உத்தரவிட்டது. ஆக, அதன்பிறகு 7 வருடங்கள் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர்தான். `ஓ.பி.சி-யினருக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்' என அத்தனை வருடங்களாக இவர்கள் எல்லாம் ஏன் கேள்வி எழுப்பவில்லை?

``இட ஒதுக்கீடு பற்றி மத்திய அமைச்சரைக் கேளுங்கள்....'' - கடுகடுக்கும் தமிழக அமைச்சர்

ஆனால், மத்திய ஆட்சிப் பொறுப்பில், பா.ஜ.க வந்தபிறகுதான், `மருத்துவ உயர் கல்வியில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்; நீங்கள் உத்தரவிடுங்கள்' என உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சலோனிகுமார் வழக்கில் தாக்கல் செய்திருக்கிறோம். 2015-ம் ஆண்டிலேயே இந்த நிலையை நாங்கள் எடுத்துவிட்டோம். எனவே, எப்படியும் ஓ.பி.சி-யினருக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் இங்குள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் இப்போது ஒன்றுசேர்ந்துகொண்டு பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசி வருகின்றனர். அதாவது, நாளை இட ஒதுக்கீடு கிடைக்கும்போது, `நாங்கள் போராடித்தான் இட ஒதுக்கீடு கிடைத்தது' என்று சொல்லிக்கொள்ளலாம் அல்லவா.

மருத்துவம்
மருத்துவம்

ஆக, உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் சொல்லியதைத்தான் இப்போது உயர் நீதிமன்றத்திலும் சொல்லியிருக்கிறோம். ஆனால், `இட ஒதுக்கீடு கொடுக்க மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை' என்று எங்களைப் பற்றிப் பொய் சொல்கிறார்கள். மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டில், உயர் சாதி ஏழைகளுக்கு மட்டும் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாகவும் தவறான தகவலை உயர் நீதிமன்றத்திலேயே சொல்லியிருக்கிறது தி.மு.க. 10 சதவிகித இட ஒதுக்கீடு, மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இது மட்டுமல்ல... பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கான அரசியலமைப்பு அதிகாரத்தைக் கொடுத்திருப்பதே மத்திய பா.ஜ.க அரசுதான். எனவே, தேவையில்லாமல் மத்திய பா.ஜ.க அரசு மீது தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் புகார் கூறிவருவதென்பது, அவர்களது அறியாமை அல்லது பொறாமை என்றுகூட சொல்லலாம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு