Published:Updated:

`நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா? - கனிமொழி கடும் எதிர்ப்பு!

சத்யா கோபாலன்

மருத்துவ மாணவர் முதுநிலை படிக்க புதிய தேர்வு எழுத வேண்டும் என்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனிமொழி
கனிமொழி

நாடாளுமன்றத்தில் கடந்த சில நாள்களாக மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பேசிய தி.மு.க மக்களவைக் குழுத் துணைத் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, "மத்திய அமைச்சரவை நேற்று தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இது இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக இருக்கப் போகிறது.

நீட்
நீட்

தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, மருத்துவப் படிப்பின் இறுதியாண்டு மாணவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு `நெக்ஸ்ட்’ (National Exit Test) என்ற பெயரில் தேசிய அளவில் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இது அகில இந்திய அளவில் மருத்துவத்துறைக்கு இன்னொரு பொதுத் தேர்வாக அமையும்.

ஏற்கெனவே மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. நீட் தேர்வால் தங்கள் மருத்துவக் கனவுகள் சிதைவதால் பல மாணவர்கள் ஏற்கெனவே தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். நேற்று இந்த விவகாரம் பற்றி எங்கள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்” என்று கனிமொழி பேசினார்.

கனிமொழி
கனிமொழி

ஆனால், அவர் தன் கருத்துகளை முழுவதுமாக கூறி முடிக்கும் முன்பே அதற்கு மேல் பேச சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

முன்னதாக தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரையின்படி இறுதியாண்டு மாணவர்களுக்கு `நெக்ஸ்ட்’ பொதுத் தேர்வு நடத்தப்படுவதற்கு எதிராக தி.மு.க சார்பில் சபாநாயகரிடம் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டது. ஆனால், சபாநாயகர் ஒத்திவைப்புத் தீர்மானத்தை ஏற்க மறுத்ததோடு இதுபற்றி கேள்வி நேரத்தில் பேசலாம் என்று கூறினார். இது குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராடப் போவதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.