Published:Updated:

`குடியரசுத் தலைவரிடம் பட்டம் பெற விரும்பவில்லை!'- CAA, NRC க்கு எதிராக புதுவை பல்கலைக்கழக மாணவர்கள்

`மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குடியரசுத் தலைவரிடம் இருந்து பட்டம் பெற மாட்டோம்’ என்று புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர்

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியிருப்பதோடு அரசியல் கட்சியினரும், கல்லூரி மாணவர்களும் தொடர் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களும் கடந்த ஒரு வாரகாலமாக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

புதுச்சேரி பல்கலைக் கழகம்
புதுச்சேரி பல்கலைக் கழகம்

இந்த நிலையில்தான் இன்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடக்க இருக்கும் 27வது பட்டமளிப்பு விழாவில், இந்திய குடியரசுத் தலைவரும் பல்கலைக் கழகத்தின் பார்வையாளருமான ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் விருதுகளை வழங்க இருக்கிறார்.

அப்போது நேரடியாக கல்வி பயின்ற 15,020 பேர், தொலைதூர கல்வி முறையில் பயின்ற 4,269 பேர் என மொத்தம் 19,289 மாணவர்கள் பட்டம் பெற இருக்கின்றனர். ஆனால், குடியரசுத் தலைவர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாவை தாங்கள் புறக்கணிக்கப்போவதாக பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்

எம்.எஸ்ஸி எலெக்ட்ரானிக் மீடியாவில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் பெறும் கேரளாவைச் சேர்ந்த மாணவி கார்த்திகா மற்றும் சென்னையைச் சேர்ந்த ஆய்வு மாணவர் அருண்குமார் ஆகியோர் குடியரசுத் தலைவரின் கைகளால் பட்டங்களைப் பெறப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவி கார்த்திகா தன்னுடைய வலைதள பக்கத்தில், ``குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் நான் எதிர்க்கிறேன். குடியரசுத் தலைவரின் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதன் மூலம் நான் என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய முடியும். இந்த மசோதாவை சட்டமாக்கிய குடியரசுத் தலைவரிடமிருந்து பட்டத்தைப் பெற நான் விரும்பவில்லை” என்று பதிவிட்டிருக்கிறார்.

மாணவர்களின் இத்தகைய போராட்டங்களால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் போராட்டம் வெடிக்கலாம் என்ற சூழலில் பல்கலைக்கழக வளாகம் முழுவதையும் தனது பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது காவல்துறை.