Published:Updated:

"அரைகுறையாக நடத்தப்படும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள்!" - என்னவாகும் புதிய கல்விக் கொள்கை வரைவு?

ஆ வல்லபி

”தமிழ்நாட்டில் ஆசிரியர்கள்கூட இல்லாமல் பல பள்ளிகள் உள்ளன. சென்னையில் உள்ள கேந்திரியா வித்யாலயாக்களில் மட்டும் சுமார் 30 சதவிகித ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன.”

ஐஐடி வளாகத்தில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டம்
ஐஐடி வளாகத்தில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டம்

இந்திய அரசின் தேசிய கல்வி வரைவுக் கொள்கை 2019 பற்றிய விவாதக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை அன்று சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 'கேந்திரிய வித்யாலயா சங்கதன'னின் துணை ஆணையர் மணி தலைமையில் நடைபெற்றது. இதில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயா ஐ.ஐ.டி-யின் பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் ரமணா பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர். விவாதத்தில் 'கேந்திரிய வித்யாலயா சங்தன'னின் துணை ஆணையர் மணி, புதிய கல்விக்கொள்கையில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை எடுத்துரைத்தார்.

ஐஐடி வளாகத்தில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டம்
ஐஐடி வளாகத்தில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டம்

”தமிழ்நாட்டில் ஆசிரியர்கள்கூட இல்லாமல் பல பள்ளிகள் உள்ளன. சென்னையில் உள்ள கேந்திரியா வித்யாலயாக்களில் மட்டும் சுமார் 30 சதவிகித ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. காரணம், இளைஞர்கள் பல்வேறு துறைகளில் முதுகலை படிப்பை முடிக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலர் பி.எட். படிக்க முன்வருவதில்லை. ஆசிரியர் பணிக்கும் விண்ணப்பிப்பதில்லை என்பதுதான். புதிய கல்விக்கொள்கை நடைமுறைக்கு வந்தால், அங்கன்வாடியில் பணியாளர்களுக்குப் பதிலாக, தகுதியுள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும். தற்போதுள்ள இடங்களே நிரப்பப்படாதபோது, புதிய இடங்களைச் சேர்ப்பது சுமையை அதிகரிக்கும்.

மும்மொழிக் கொள்கையும் சிக்கலானதுதான். குழந்தைகளின் மூளை வளர்ச்சி 3 - 8 வயதில் ஏற்படுகிறது என்றாலும், எந்த ஒரு தேசமும் 3 மொழிகளைக் கற்க மாணவர்களை வலியுறுத்துவதில்லை. பின்லாந்து போன்ற நாடுகளிலேயே ஒரு மொழி, அதுவும் தாய்மொழிதான் கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே புது மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. இந்தப் புதிய கல்விக்கொள்கை நடைமுறைக்கு வந்தால், அது மாணவர்களுக்குச் சுமையாகவே இருக்கும். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் கேந்திரியா வித்யாலயா போன்ற பள்ளிகளில் மாணவர்களுக்கு அவரவர் தாய்மொழியைச் சொல்லித்தருவது என்பதும் இயலாத ஒன்று. புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, தற்போதைய கல்வித் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும்” என்றார்.

கோவை ராமகிருஷ்ணன்
கோவை ராமகிருஷ்ணன்

பின்னர் பேசிய பேராசிரியர் ரமணா பிரசாத், "ஆசிரியர் மாணவர் விகிதத்தைக் குறைத்தால் மட்டுமே எந்த ஒரு திட்டமும் வெற்றிபெரும்" என்று கூறினார். "ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுப்பதைப் பற்றியும் புதிய கல்விக்கொள்கை விளக்கியிருக்க வேண்டும்" என்றும் கூறினார்.

விவாதத்தின் மத்தியில் வந்த த.பெ.தி.க உறுப்பினர்கள், 'பொதுமக்கள், மாணவர்கள் யாரும் இல்லாமல் நடக்கும் இந்தக் கூட்டம் நடக்கக் கூடாது' என்று போராட, விவாதம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதுபோலவே மேலும் ஒரு கருத்துக் கேட்புக் கூட்டம் கோவையில் நிறுத்தப்பட்டது அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

`வெளிமாநிலம் அல்ல.. வெளிநாட்டு மாணவர்களுடனும் போட்டியிடலாம்!’ - புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழிசை

பொதுமக்கள் பங்கெடுப்பின்றி ஒருங்கிணைக்கப்படும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் குறித்து நம்மிடம் பேசிய த.பெ.தி.க தலைவர் கோவை ராமகிருஷ்ணன், "தமிழத்தில் தேசிய கல்வி கொள்கையைப் பற்றிய விவாதம் 4 மண்டலங்களில் நடைபெற்றது. ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்தமாக 50 - 60 பேர் மட்டுமே இந்த விவாதத்தில் கலந்துகொண்டனர். காரணம், சரியான அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்பதுதான். பத்திரிகை அறிவிப்பு மட்டுமே செய்யப்பட்டது.

இதுபோன்ற விவாதம் நடப்பதை பொதுமக்கள் எவ்வாறு அறிந்து கொள்வார்கள்? கோவையில் நடந்த கலந்துரையாடலில் 3 பெற்றோர்களும் 2 மாணவர்களும் மட்டுமே பங்கேற்றனர். முதலாவதாக, பள்ளி அளவிலான கலந்துரையாடல் நடந்திருக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகளைப் பெற்று, பின்னர் அவற்றை மற்ற பள்ளிகளோடும் கலந்தாலோசித்திருக்க வேண்டும். விவாதத்தில் கூறப்பட்ட கருத்துகளை அரசு பரிசீலித்திருக்க வேண்டும்” என்றார்.

``ஐஐடி வளாகத்தில் ரகசியமா நடந்த புதிய கல்விக் கொள்கைக் கூட்டம்” - த.பெ.தி.க புகாரால் ரத்து

கல்விக் கொள்கை வரைவு குறித்து கருத்துக் கேட்புக் கூட்டங்கள் இனியேனும் சரிவர அறிவிக்கப்பட்டு தேவையான பொதுமக்கள் பங்களிப்புடன் நிகழ்த்தப்பட்டால் மட்டுமே வரைவின் மீதான மக்களின் எண்ணத்தை அரசுக்கு எடுத்துரைக்க முடியும்.