பிரீமியம் ஸ்டோரி
‘சாமி வரம் கொடுத்தாலும்... பூசாரி கொடுக்க விடமாட்டார்’ என்று சொல்வது பயிர்க் காப்பீடு விஷயத்தில் 100 சதவிகிதம் பொருந்தும்.

‘பயிர்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சூழலில், அதை ஆய்வு செய்வதற்காக நடத்தப்படும் பரிசோதனை அறுவடை முடிந்து நான்கு வாரங்களுக்குள் அந்த முடிவுகளை அறிவிக்க வேண்டும். அடுத்த இரண்டு வாரங்களுக்குள், இழப்பீட்டுத் தொகையை வழங்கிவிட வேண்டும்’ என்பது விதிமுறை. ஆனால், பரிசோதனை அறுவடை முடிவுகளை அறிவிப்பதற்கே பல மாதங்களை எடுத்துக் கொள்கின்றனர் அதிகாரிகள். இந்நிலையில், இழப்பீடு பற்றிச் சொல்லவே வேண்டாம். இழப்பீடு பற்றிய கவலையில் மூழ்கினால், அடுத்த போக சாகுபடி கையைவிட்டுப் போய்விடும் என்கிற பதற்றத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் விவசாயிகள். இதைச் சரியாகப் பயன்படுத்தி லாபம் பார்த்துக்கொண்டிருக்கின்றன காப்பீட்டு நிறுவனங்கள்.

ஒரு ஏக்கர் நெற்பயிரை 32,550 ரூபாய்க்குக் காப்பீடு செய்ய, ஒரு விவசாயி 489 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். இத்துடன் மத்திய, மாநில அரசுகளும் குறிப்பிட்ட தொகையைக் கொடுக்கும். அந்த வகையில் பயிர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வருமானம் பெற்றுக் கொழிக்கின்றன.

பொதுவாகவே, காப்பீடு விஷயங்களில் வெளிப்படைத் தன்மை என்பது மிகமிகக் குறைவே. அதிலும் பயிர்க்காப்பீடு விஷயத்தில் துளிகூட வெளிப்படைத் தன்மை இல்லை என்பதே உண்மையாக இருக்கிறது. விதிமுறைகள் என்கிற பெயரில் தேவையில்லாமல் விவசாயிகளை வதைப்பதைத்தான் வாடிக்கையாகவே வைத்துள்ளன காப்பீட்டு நிறுவனங்கள் பலவும். ஏற்கெனவே இருந்த காப்பீட்டுத் திட்டத்தில் குளறுபடிகள் என்று சொல்லித்தான், புதுத்திட்டத்தை அறிவித்தார்கள். ஆனால், ‘தெரியாத பிசாசைவிட தெரிந்த பேயே மேல்’ என்கிற வகையில் விவசாயிகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது புதுக்காப்பீட்டுத் திட்டம்.

என்று தணியும் இந்தக் காப்பீட்டுக் கொடுமை?

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு