Published:Updated:

நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி வகுப்பு எப்போது? கல்வியாளர்களின் கேள்வியும் கல்வித்துறையின் பதிலும்

மருத்துவ நுழைவுத் தேர்வு நீட்
மருத்துவ நுழைவுத் தேர்வு நீட்

தமிழக அரசு தொடங்கிய நீட் பயிற்சி மையங்களும் தரமாக இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் கல்வியாளர்கள்.

'எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு, மே 3 -ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இம்மாதம் 27-ம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்' என்று தேசியத் தேர்வுமுகமை தெரிவித்துள்ளது.

neet exam
neet exam

இதனிடையே, தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்துள்ள மாணவர்களில் பலர், நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்னும் தயாராகவில்லை என்பதே பலரின் எண்ணம். குறிப்பாக, நீட் தேர்வை நடைமுறைப்படுத்தியபோது, 'தேசியத் தேர்வு முகமையின் கீழ் நீட் பயிற்சி மையங்கள் கொண்டுவரப்படும்' என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்த மையங்களை இதுவரை மத்திய அரசு கொண்டுவரவில்லை. அதோடு, தமிழக அரசு தொடங்கிய நீட் பயிற்சி மையங்களும் தரமாக இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் கல்வியாளர்கள்.

தமிழ் வழியில் தேர்வு எழுதுவதற்கான பாடத் திட்டங்கள் கொண்டுவந்தும், அவற்றை மொழிபெயர்க்க எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை
டாக்டர் ரவீந்திரநாத்
மருத்துவர் ரவீந்திரநாத்
மருத்துவர் ரவீந்திரநாத்

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசியபோது, "மாநில பாடத் திட்டத்தில் படிக்கின்ற மாணவர்களையும், அரசுப் பள்ளி மாணவர்களையும் நீட் நுழைவுத் தேர்வு பெரிதும் பாதித்துள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குபெற முடியாத சூழலில், அதில் உள்ள குறைந்தபட்ச சிக்கல்களையாவது அரசாங்கம் களைந்திருக்க வேண்டும். அதற்கான எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லை.

அதற்கு மாறாக, பயிற்சி மையங்கள் என்ற பெயரில் கண்துடைப்பு வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, தமிழக அரசு தொடங்கிய 412 நீட் பயிற்சி மையங்களும் சரியாகச் செயல்படாத காரணத்தால், மாணவர்கள் தேர்ச்சி மிக மோசமாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நுழையவே முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. அதற்குக் காரணம், தமிழக அரசு தொடங்கிய பயிற்சி மையத்தில் ,தேர்வை எதிர்கொள்கிற அளவிற்கு, பயிற்சி அளிப்பதற்கான தரமான ஆசிரியர்கள் இல்லை. தேர்வுக்கான பாடப் புத்தகங்கள் இல்லை. தமிழ் வழியில் தேர்வு எழுதுவதற்கான பாடத்திட்டங்கள் கொண்டு வந்தும், அவற்றை மொழிபெயர்க்கவும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

நீட் தேர்வு
நீட் தேர்வு

அதேபோன்று, அரசு தொடங்கிய பயிற்சி வகுப்புகளும் சரியான நேரத்தில் தொடங்கவில்லை. தாமதமாகத் தொடங்கப்பட்ட அந்தப் பயிற்சி வகுப்புகளையும் உள்ளாட்சித் தேர்தல், பொங்கல் உள்ளிட்ட காரணங்களைக்கூறி வகுப்புகளை நிறுத்திவிட்டன.

குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 'பொங்கல் முடிந்ததும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்' என்று அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை அந்தப் பயிற்சி வகுப்புகள் தொடங்கவே இல்லை.

neet
neet

கடைசியாக, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வைக் காரணம் காட்டி, பயிற்சியைத் தொடங்காமலேயே இருந்த நிலையில், தற்போது நடந்துவரும் பொதுத்தேர்வு முடிந்த பிறகாவது, அரசு பயிற்சி வகுப்புகளைத் தொடங்குமா? என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

ஆனால், இதுகுறித்த எந்தவோர் அறிவிப்பும் அரசிடமிருந்து இல்லை. இப்படியான பல சிக்கல்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீடித்துக்கொண்டிருக்கின்றன. அதனால் இந்த ஆண்டின் நீட் தேர்வை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்ற அச்சம் எழுகிறது" என்றார் .

இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் சுரேஷ், "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சரியான முறையில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையையும் பள்ளிக் கல்வித்துறை இதுவரை எடுக்கவில்லை. இதனால், நடைபெற உள்ள நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்வது மிக மிகக் கடினம். ஏற்கெனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியே பிரச்னையாக இருக்கும்போது, நீட் தேர்வில் அவர்களால் எவ்வாறு வெற்றிபெற முடியும். அதனால் இந்த நீட் தேர்வை முற்றிலும் ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

neet exam
neet exam

அரசு நீட் பயிற்சியின்மூலம் சென்ற ஆண்டு நீட் தேர்வை எதிர்கொண்ட மாணவர் கமலேசன், "தமிழக அரசு அளித்த நீட் பயிற்சி மையங்கள் தரமாக இல்லை. குறிப்பாக, பயிற்சி வகுப்புகள் முறையாக நடைபெறுவதில்லை. ஒரு மாதத்தில் இரண்டு மூன்று நாள்கள் வைத்துவிட்டு, பயிற்சி கொடுத்துவிட்டதாகக் கூறி முடித்துவிடுகிறார்கள். தொடர்ந்து பயிற்சி வகுப்பு நடந்தால், தேர்வை எதிர்கொள்வதில் மாணவர்களுக்குப் பிரச்னை இருக்காது. அதேபோன்று, நீட் தேர்வுக்கு எனப் பயிற்சிபெற்ற ஆசிரியர்களைத் தமிழக அரசு நியமிக்க வேண்டும். தற்போது உள்ள ஆசிரியர்களால், நீட் தேர்வை எதிர்கொள்கிற அளவுக்கு மாணவர்களுக்குப் பயிற்சியைத் தரமுடியவில்லை" என்றார்.

தரமான ஆசிரியர்கள் இல்லாமல், இந்தப் பயிற்சியை மாணவர்களுக்கு அளிப்பது வீண் வேலை.

இதுகுறித்து அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பிரபுதாஸ் பேசுகையில், "கடந்த சில நாள்களாக நீட் பயிற்சியை மீண்டும் தொடங்குவதற்கான வேலைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. குறிப்பாக, பொதுத்தேர்வுக்குப் பிறகு வகுப்புகள் தொடங்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால், உறுதியான தகவல் எதுவும் அரசிடமிருந்து இதுவரை வரவில்லை. குறிப்பாக, அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்படுகிற பயிற்சி தரமானதாக இல்லை. தரமான ஆசிரியர்கள் இல்லாமல், இந்தப் பயிற்சியை மாணவர்களுக்கு அளிப்பது வீண் வேலை. எனவே, தமிழக மாணவர்கள், நீட் தேர்வை எதிர்கொள்கிற அளவுக்கு அதற்கான கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்க வேண்டும் அல்லது இந்தத் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதற்கான நடவடிக்கைகளையாவது எடுக்க வேண்டும்" என்றார் தீர்க்கமாக.

பிரபுதாஸ் தலைமையாசிரியர்
பிரபுதாஸ் தலைமையாசிரியர்

கல்வியாளர்களின் கருத்துகளுக்கான விளக்கத்தைப் பெற பள்ளிக் கல்விதுறை செயலர் தீரஜ்குமாரைத் தொடர்புகொண்டோம்.

"அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ள 412 மையங்களில், கடந்த செப்டம்பர் மாதத்தில் தொடங்கி இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. பொங்கல் விடுமுறை என்பதால் வகுப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து, இந்த பொதுத்தேர்வு முடிந்தவுடன் மீண்டும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கும். எந்தெந்தப் பயிற்சி மையங்களில் குறைகள் இருக்கின்றன என்பது குறித்து மாணவர்கள் தெரிவித்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு