Published:Updated:

`10-ம் வகுப்புத் தேர்வால் கொரோனா பரவல் அதிகரிக்கும்!'- மாற்று யோசனையை முன்வைக்கும் கல்வியாளர்கள்

மாணவர்கள்
மாணவர்கள் ( மாதிரிப் படம் )

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எதிர்மறையான உளவியல் அழுத்தம் உருவாகியிருப்பதால் இந்தக் கல்வியாண்டில் தேர்வை ரத்து செய்யலாம் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர் கல்வியாளர்கள்.

தமிழ்நாடு-புதுச்சேரி பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத்தலைவரும், முன்னாள் துணைவேந்தருமான வசந்தி தேவி, மாநிலச் செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கும் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், `பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மாணவர்கள் மேல்நிலைக் கல்வியில் சேருவதற்கும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ போன்ற தொழில்சார்ந்த கல்வியில் சேருவதற்கும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை நடத்துவது அவசியம் என்ற நிலைக்கு தமிழக அரசு வந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

ஆனால் இந்த அசாதாரணச் சூழலில் தேர்வுகள் நடத்துவதால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கொரோனா தொற்று உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

இந்தப் பேரிடர் காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை அவசரமாக நடத்துவதால் நோய்த்தொற்றுக்கான சூழல் ஏற்படலாம். அரசு தொலைக்காட்சி மூலமும், இணையம் மூலமும் நடத்தும் பத்தாம் வகுப்பு பாடங்கள் பெரும்பாலான மாணவ, மாணவிகளைச் சென்றடைவைதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

கொரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழல் மாணவர்களிடத்தில் கற்பதற்கு சாதகமற்ற எதிர்மறையான உளவியல் அழுத்தங்களை உருவாக்கியிருக்கிறது. அதனால் மாணவர்கள் பள்ளிச்சூழலில் சில வாரங்களாவது படித்த பின்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்று அரசுப் பள்ளிகள் தரப்பில் கோரிக்கை எழுகிறது.

அப்படியே ஒரு மாதம் சென்றாலும் அடுத்த கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று உறுதியாகக் கூற முடியாதசூழலில், குறைந்தபட்சம் ஒரு மாதம் பத்தாம் வகுப்புக்கு என ஒதுக்கிவிட்டாலும் புதிய பத்தாம் வகுப்பு மற்றும் தேர்வு மையப்பள்ளிகளில் படிக்கும் மற்ற குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா? ப்ளஸ் 2 ரிசல்ட் எப்போது? என்ன சொல்கிறார் கல்வியமைச்சர்!

இந்த கல்வியாண்டில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களும் 11-ம் வகுப்பில் ஒரு மாதத்தை இழக்க நேரிடும். அதேபோல பெரும்பாலான மாணவர்களும், ஆசிரியர்களும் தேர்வு மையங்களுக்குச் செல்வதற்கு பொதுப்போக்குவரத்தைத்தான் நம்பியுள்ளனர். இந்தச் சூழலில் அப்படியான பயணங்கள் சமூகப் பரவல் உருவாவதற்கு வாய்ப்பளிக்கும்.

தேர்வுகளை நடத்தும்போதும், விடைத்தாள்களை திருத்தும்போதும் கொரோனா முன்னெச்சரிக்கை, தனிமனித இடைவெளி, கையைக் கழுவுதல் போன்றவற்றைப் பின்பற்றுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. பல அசாதாரணச் சூழல்களில் இதற்குமுன் தமிழக அரசு பொதுத்தேர்வுகளை தவிர்த்ததற்குப் பல்வேறு முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அதனடிப்படையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு இல்லை என்று அறிவிக்கலாம். ஆண்டுதோறும் அதிகரித்துவரும் பத்தாம் வகுப்பு தேர்ச்சிகளின் அடிப்படையில் பார்த்தால், நடப்புக் கல்வியாண்டில் 97% தேர்ச்சி இருந்திருக்கும்.

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்
பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்

அதற்கு பதில் அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டால் பள்ளி மாணவர்களில் ஏறத்தாழ 3 சதவிகிதத்தினரும், தனித்தேர்வர்களில் குறைந்த அளவிலும் தேர்ச்சி பெறுவர். குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களால் படிக்க முடிந்த பாடப்பிரிவுகள் அல்லது தொழிற்கல்வியில் சேர்வார்கள். கல்வித்துறையும் திருப்புதல் தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையிலும் மாணவர்களின் சராசரி சதவிகிதத்தையும் அதன் வளர்ச்சியையும் அறிய முடியும்.

அந்த மதிப்பெண் இ.எம்.ஐ.எஸ் தளத்தில் ஏற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ’ஏ’ ’பி’ ’சி’ என மூன்று கிரேடுகளைத் தரமுடியும். தனித்தேர்வர்களுக்கு ’சி’ கிரேடு தரலாம். கொரோனா பேரிடர் காலச்சிறப்புச் சான்றிதழில் கிரேடு, பெயர், வயது போன்றவற்றை வழக்கமான சான்றிதழ் போல இடம்பெறச் செய்யலாம். தேர்வு இல்லாவிட்டால் ஏற்படும் அனைத்துச் சிக்கல்களுக்கும் இந்தச் சான்று தீர்வாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு