Published:Updated:

`சந்தேகம் எழுகிறது; நியாயமற்ற கட்டண உயர்வு ஏன்?!' - சி.பி.எஸ்.இ முடிவால் கொதிக்கும் கல்வியாளர்

கு.ஆனந்தராஜ்

`கடந்த ஐந்தாண்டுகளாகக் கட்டணத்தை உயர்த்தவில்லை' எனக் கூறியிருக்கிறது, சி.பி.எஸ்.இ நிர்வாகம். அவர்கள் வாதப்படியே பார்த்தால், கடந்த ஐந்தாண்டுகளில் மக்களின் சராசரி வருமானம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை ஆராய வேண்டாமா?

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான தேர்வுக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. அதில், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு இரண்டு மடங்கும் பட்டியல் இன மாணவர்களுக்கு (எஸ்.சி, எஸ்.டி) 24 மடங்கும் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

இந்நிலையில், தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கான காரணத்தை சி.பி.எஸ்.இ நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதில், `புதிய தேர்வுக் கட்டணம் நாடு முழுக்க அமல்படுத்தப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சி.பி.எஸ்.இ நிர்வாகம் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தவில்லை. தற்போதுதான் உயர்த்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ தன்னாட்சி நிலையில் செயல்பட்டு வருகிறது. எனவே, லாப, நஷ்ட அடிப்படையில் செயல்படாது' எனத் தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ முடிவு குறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு,`` தனியார் பள்ளியில் அனைத்துத் தரப்பு மாணவர்களும் படிக்கின்றனர். ஆனால், தனியார் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் வசதியானவர்கள் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் நினைக்கிறதா?

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவில், `தனியார் மதிப்பீடு வாரியங்களையும் அனுமதிப்போம்' என்று கூறப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் அப்படியொரு நிலை ஏற்பட்டால், தங்களுடைய விருப்பத்துக்கேற்ப தேர்வுக் கட்டணத்தை உயர்த்துவார்கள். அப்போது எதிர்ப்புக்குரல் எழும் என்பதால், முன்கூட்டியே சி.பி.எஸ்.இ வாரியமே தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

`கடந்த ஐந்தாண்டுகளாகக் கட்டணத்தை உயர்த்தவில்லை' எனக் கூறியிருக்கிறது, சி.பி.எஸ்.இ நிர்வாகம். அவர்கள் வாதப்படியே பார்த்தால், கடந்த ஐந்தாண்டுகளில் மக்களின் சராசரி வருமானம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை ஆராய வேண்டாமா? குறிப்பாக, பட்டியலின மாணவர்களுக்குப் பன்மடங்கு தேர்வுக் கட்டணம் உயர்த்தியிருப்பதெல்லாம் அவர்களுக்குப் பெரும் சுமையாகவே அமையும்.

ஒருவேளை சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்துக்கு நிதிச்சுமை ஏற்பட்டால், அரசிடம் தேவையான நிதியைக் கேட்டுப்பெற வேண்டும். மாறாக, மக்களின் மீது சுமையை இறக்கிவைப்பது நியாயமற்றது
பிரின்ஸ் கஜேந்திரபாபு

நன்கு ஆராய்ந்து, மக்களைப் பெரிதும் பாதிக்காத வகையில்தான் கட்டணத்தை உயர்த்தியிருக்க வேண்டும். இது பிள்ளைகளின் கல்வி விஷயம் என்பதால், எவ்வித பெற்றோரையும் பாதிக்காத வகையில் முடிவுகள் எடுக்க வேண்டியது அரசின் கடமை என்கிறோம்.

ஒருவேளை சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்துக்கு நிதிச்சுமை ஏற்பட்டால், அரசிடம்தானே தேவையான நிதியைக் கேட்டுப்பெற வேண்டும். மாறாக, மக்களின் மீது சுமையை இறக்கிவைப்பது நியாயமா? இது நியாயமற்ற கட்டண உயர்வு. இந்த அதிகபட்சக் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும்" என்கிறார் வேதனையுடன்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

தேர்வுக் கட்டண உயர்வு குறித்து, சென்னை மண்டல சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் கருத்தை அறிய முயன்றோம். அவர்களிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. அவர்கள் விளக்கம் கொடுக்கும்பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பின் அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.