Election bannerElection banner
Published:Updated:

`எல்லாமே அவர்கள் கையில்தான் இருக்கிறது!’ - கால்நடை மருத்துவராகும் கனவோடு காத்திருக்கும் சந்திரன்

சந்திரன்
சந்திரன் ( ரமேஷ் கந்தசாமி )

சந்திரனுக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்த பழங்குடி மக்களின் வாழ்க்கைக்குமான ஒட்டுமொத்த நம்பிக்கையும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கையில்தான் இருக்கிறது.

சந்திரன் என்னும் பழங்குடியின மாணவனை நாம் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க மாட்டோம். ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில் எந்தவித வசதியுமில்லாத சுண்டைப்போடு என்னும் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் தான் சந்திரன். உடுமுட்டி - பசுவி என்னும் தம்பதியருக்குப் பிறந்த 11 குழந்தைகளில் சந்திரன் 4-வது ஆள்.

"அரசு மனசுவச்சா அந்தக் கிராமத்துக்கே முதல் பட்டதாரி இவர்தான்!" - பழங்குடி மாணவருக்காக எழும் குரல்கள்

கல்வி கற்க பெரிதும் ஆர்வம் காட்டாத பழங்குடியினர் சமுதாயத்திலிருந்து வந்த சந்திரன், மேல்நிலைக் கல்வியில் வொகேஷனல் பிரிவில் 444 மதிப்பெண் பெற்றார். அதுமட்டுமல்லாமல், கால்நடை மருத்துவப் படிப்பிற்கான வொகேஷனல் ரேங்கிங்கில் பழங்குடியினப் பிரிவில் முதலிடம் பிடித்தார். ஆனால், அரசின் இட ஒதுக்கீட்டுச் சிக்கல் சந்திரனின் கனவைச் சிதைத்துப் போட்டது. சந்திரனுக்குக் கால்நடை மருத்துவம் படிக்க சீட் இல்லை எனக் கைவிரித்தது தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம். மற்றொரு வாய்ப்பான பி.எஸ்சி அக்ரி படிக்கவும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

‘கால்நடை மருத்துவப் படிப்பிற்கு வொகேஷனல் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 18 சீட்டில், பழங்குடியினப் பிரிவில் ஒரு சீட் கொடுக்க வேண்டுமென’ சந்திரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கிடையே சந்திரனின் பிரச்னையை தாமாகவே முன்வந்து தேசிய மனித உரிமை ஆணையம் கையில் எடுத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்திரன்
சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்திரன்

இந்நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் வன்கொடுமைகள் குறித்த விசாரணையை தேசிய மனித உரிமை ஆணையம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடத்தியது. இந்த விசாரணையில் சந்திரன் தரப்பு மற்றும் கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கலந்து கொண்டனர்.

மேலும் விசாரணையின் போது தேசிய மனித உரிமை ஆணையம் தரப்பிலிருந்து, `கால்நடை மருத்துவப் படிப்பிற்கு வொகேஷனல் குரூப்பில் படித்த மாணவர்களுக்கு மொத்தம் 18 சீட்களே கொடுக்கப்படுகின்றன. அதில் பழங்குடியினருக்கு ஒரு சதவிகித இடமென்றால் 0.18 சதவிகிதம்தான்.

தேசிய மனித உரிமை ஆணைய விசாரணையில் சந்திரன்
தேசிய மனித உரிமை ஆணைய விசாரணையில் சந்திரன்
ரமேஷ் கந்தசாமி

எனவே, அதை ஒரு சதவிகிதமாகக் கணக்கில் கொண்டு, பழங்குடி மாணவர் சந்திரனுக்குக் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இரண்டு வாரத்திற்குள் சீட் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தென்சிங் ஞானராஜுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

``ஆடு, மாடு மேய்த்தும், செங்கல் சூளைக்குச் சென்றும் வாழ்க்கை வீணாகிவிடும் என நினைத்தேன். ஆனால், தேசிய மனித உரிமை ஆணையத்தின் இந்தப் பரிந்துரை எனக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டியிருக்கிறது” என்கிறார் மாணவர் சந்திரன்.

சந்திரன்
சந்திரன்

சந்திரனுக்காக உடனிருந்து போராடி வரும் சுடர் அமைப்பின் இயக்குநரான நடராஜோ, ``உரிமை மறுக்கப்பட்டவர்களை கல்வி மூலம் மட்டுமே மீட்டெடுக்க முடியும். ஆனால், அந்தக் கல்வி உரிமையைப் பெறுவதற்கே பெரிய தடைகளை உடைக்க வேண்டியிருக்கிறது. சந்திரனுக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்த பழங்குடி மக்களின் வாழ்க்கைக்குமான ஒட்டுமொத்த நம்பிக்கையும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கையில்தான் இருக்கிறது. நல்ல முடிவை அவர்கள் சொல்வார்கள்; சந்திரனுக்கு நிச்சயமாக சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்” என்றார்.

சந்திரன் வாழ்விற்கு வெளிச்சம் கிடைக்குமா?...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு