Published:Updated:

'மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு... என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் நேற்று வெளியிட்டிருக்கிறார்.

சட்டப்பேரவையில், விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு வருகைக்குப் பின்னர் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகக் கூறினார். நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சிறப்பு சட்டம் இயற்ற பரிசீலித்துவருவதாகக் கூறினார். இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, ஒரு மாதத்துக்குள் அந்த ஆணையம் அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்றார்.

மருத்துவ நுழைவுத் தேர்வு நீட்
மருத்துவ நுழைவுத் தேர்வு நீட்

இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர் ஆனந்தம் செல்வக்குமார், “ மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கிறார். இப்படியொரு அறிவிப்பை வெளியிடவேண்டிய அவசியம் என்ன? நீட் தேர்வுக்கு முன்பாகவும் நீட் தேர்வுக்குப் பிறகும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ சேர்க்கை எப்படி இருந்தது. நீட் தேர்வுக்கு முன்பாகவும் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டார்களா என்ன...

நீட் தேர்வுக்கு முன்பான 10 ஆண்டுகள். அதாவது, 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான இந்த காலகட்டத்தில், மொத்தமாகவே 213 மாணவர்கள்தான் அரசுப் பள்ளியில் படித்து, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இந்த கணக்கீட்டை எடுத்துக்கொண்டால், சராசரியாக ஆண்டுக்கு 20 மாணவர்கள்தான் நீட் தேர்வுக்கு முன்பாகவும் அரசுப் பள்ளியில் படித்து அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு சேர்ந்துள்ளனர்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட் தேர்வுக்குப் பிறகு, இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தது. 2017-ம் ஆண்டு 7 மாணவர்களும், 2018-ல் 5 மாணவர்களும், 2019-ம் ஆண்டு வெறும் இரண்டு மாணவர்களும் மட்டுமே என்கிற அளவுக்கு வெகுவாகக் குறைந்ததன் விளைவுதான் இன்றைய சூழலில் தனியார் பள்ளி மாணவர்களுடன் அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டியிட முடியாது என்றுதான், இன்று உள்ஒதுக்கீடு என்ற விஷயத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

ஏனென்றால், இங்கு தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய கட்டமைப்பும், வசதிகளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய கட்டமைப்பும் வசதிகளும் வேறு. நிறைய அரசுப் பள்ளிகளில் ஒரு சில பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்கள் படிக்கின்றனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள்தான் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். அவர்களது குடும்பச்சூழல் வறுமை வீட்டில் இருக்கும் நிலைமையும் வேறு. ஆனால், தனியார் பள்ளிகளில் எல்லா வசதிகளும் செய்துக்கொடுத்து பிள்ளைகளை பெற்றோர் படிக்கவைக்கின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு என்பது நிச்சயமாக பாராட்டப்படவேண்டிய விஷயம். ஆனால், இந்த உள் ஒதுக்கீடு கல்வி தரத்தை உயர்த்திவிடுமா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூற வேண்டும்.

கல்வியாளர் 'ஆனந்தம்' செல்வகுமார்
கல்வியாளர் 'ஆனந்தம்' செல்வகுமார்

இதற்கு சரியான உதாரணம், கடந்த ஆண்டு 1,23,078 மாணவர்கள் நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து எழுதினர். அதில் 59,785 மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர். இந்த 59,785 மாணவர்களில் 4 சதவிகித மாணவர்கள்தான் அரசுப் பள்ளி மாணவர்கள். அதாவது, 2557 மாணவர்கள்தான் அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் அடிப்படைத் தகுதியே ஆகியுள்ளனர். தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 60 சதவிகித மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள். இதில் 4 சதவிகித மாணவர்கள்தான் நீட் தேர்விலே அடிப்படை தகுதியே பெற முடிகிறது என்றால், நிச்சயமாக கல்வித்தரம் கவனிக்கப்பட வேண்டும்.

உள் ஒதுக்கீடு மட்டும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்திவிடாது. இன்று எம்.பி.பி.எஸ்-க்கு உள் ஒதுக்கீடு கொடுத்துவிட்டோம். நாளை தேசிய அளவில் வரக்கூடிய பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்வதற்கு எப்படி உள் ஒதுக்கீடு கொடுக்க முடியும்? இந்தியா முழுவதும் எடுத்துக்கொண்டால் வருடத்துக்கு 80 நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த நுழைவுத்தேர்வுகளில் மாணவர்கள் கலந்துகொண்டு தங்களுக்குப் பிடித்த படிப்பை படிப்பதற்கு தமிழக அரசு எங்கிருந்து உள் ஒதுக்கீட்டை கொடுக்க முடியும்?

நீட்
நீட்

ஒருபுறம் இந்த உள் ஒதுக்கீடு, பல மாணவர்களுடைய கனவை நனவாக்கலாம். இதில் எவ்வளவு பேருக்கு வாய்ப்பு இருக்கும். அரசு கோட்டாவில் உள்ள 6300 சீட்டுகளில் தேசிய ஒதுக்கீடு போக மீதமுள்ள இடங்களில், கிட்டத்தட்ட 5 சதவிகிதம் என அரசாங்கம் அறிவிப்பு கொடுத்தால், இதில் 200 முதல் 250 மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். இந்த 200 மாணவர்களை எம்.பி.பி.எஸ் ஆக்கினால், அவர்களது குடும்பத்தில், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமே தவிர, கல்வித் தரத்திலே நிச்சயமாக மாற்றங்களை ஏற்படுத்தாது. போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் கலந்துகொள்ளும் வண்ணம் ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி அளித்து, இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தி, இதன்மூலம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். கிராமப்புறங்களில் இணைய வழிப்பயன்பாட்டை வலுப்படுத்தினால் சென்னையில் இருந்தே வகுப்பெடுக்கும் நிலை உள்ளது.

ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சி அளித்து, அரசுப் பள்ளியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு வரும் ஆர்வத்தைத் தூண்டி தரமான கல்வியை கொடுப்பதுதான் இந்திய அளவிலும், உலக அளவிலும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று அரசுப் பள்ளி மாணவர்கள் பெரிய அளவிலே அவர்கள் சார்ந்த துறையிலே சாதிக்க முடியும். இந்த உள் ஒதுக்கீடு நிச்சயமாக வரவேற்கக்கூடிய விஷயம் என்றாலும் இது, கல்வித் தரத்திலே எந்த மாற்றத்தையும் பெரிய அளவில் ஏற்படுத்திவிடாது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு