Published:Updated:

`அரசு நிதிஉதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்களை மறுப்பது சமூக அநீதியே!’ - பள்ளி நிர்வாகிகள்

புதுமைப்பெண் | அரசின் நலத்திட்டங்கள்

``எங்களைப் போன்ற பள்ளிகளுக்கு இந்தச் சலுகைகள் கிடையாது என்பது பின்னடைவாகவே இருக்கும். அரசின் நலத்திட்டங்கள், அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியருக்கு இல்லாமல் போனது சமூகநீதிக்கு எதிரானது என்றே சொல்ல வேண்டும்.’’

`அரசு நிதிஉதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்களை மறுப்பது சமூக அநீதியே!’ - பள்ளி நிர்வாகிகள்

``எங்களைப் போன்ற பள்ளிகளுக்கு இந்தச் சலுகைகள் கிடையாது என்பது பின்னடைவாகவே இருக்கும். அரசின் நலத்திட்டங்கள், அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியருக்கு இல்லாமல் போனது சமூகநீதிக்கு எதிரானது என்றே சொல்ல வேண்டும்.’’

Published:Updated:
புதுமைப்பெண் | அரசின் நலத்திட்டங்கள்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை 20 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 72 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும், மேலும் வருங்காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்களின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட பாதிப்பு, பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வர முக்கியக் காரணம் என்று கூறுகின்றனர். அதே சமயம் அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் வசதிகளும், கற்பித்தல் முறைகள் நன்றாக இருப்பதாலும் பெரும்பாலான ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருவதாகவும் கூறுகின்றனர்.

நெல்லை இந்து தொடக்கப்பள்ளி செயலாளர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற செல்லப்பா, ``தமிழ் வழியில் கற்பிக்கும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைவான நிலையில் இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்விகளில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது; அதைத் தொடர்ந்து இப்போது `புதுமைப் பெண்’ திட்டத்தையும் கொண்டுவந்துள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நிச்சயமாக மேலும் அதிகரிக்கும். அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற இத்திட்டங்கள் பெரிதும் உதவுகின்றன’’ என்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், ``அரசுப் பள்ளிகளைப் போல அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் நலத்திட்டங் களை வழங்க வேண்டும். அரசாங்கம் இரண்டையும் வேறுபடுத்தி பார்க்கக் கூடாது'' என்று அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து அவர்களிடம் பேசினோம்.

அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க செயலாளரும், திருநெல்வேலி தாயம்மாள் பள்ளி நிர்வாகியுமான கணேஷ்குமார் கூறியதாவது:  

கணேஷ்குமார் | திருநெல்வேலி தாயம்மாள் பள்ளி
கணேஷ்குமார் | திருநெல்வேலி தாயம்மாள் பள்ளி

``பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி அமைய வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது பள்ளியைத் தொடங்கியது தனியார் நிர்வாகிகளே, அவர்கள் சேவை மனப்பான்மையோடு இலவச தமிழ் வழிக் கல்வியை இப்போதும் வழங்கி வருகின்றனர்.

மதிய உணவுத் திட்டத்தை ஆரம்பித்து கல்வியை மேம்பட வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டமாகவும், கலைஞர் ஆட்சிக் காலத்தில் முட்டை வழங்கியும் வந்தனர். அதைத் தொடர்ந்து சிறப்புடன் நடத்தி வருகிறது தமிழக அரசு.

கிராமமோ, நகரமோ அரசுப் பள்ளிகளைவிட அதிகமாக இருப்பது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள்தான். இங்கு படிக்கும் மாணவர்கள் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள். அரசு வழங்கும் எல்லா சலுகைகளும் இவர்களுக்கு கிடைத்து வந்த நிலையில், உயர் கல்வியில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு இந்த மாணவர்களுக்குக் கிடையாது என்பது வேதனை.

உயர் கல்வியில் 7.5% உள்ஒதுக்கீடு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், மற்றும் உயர் கல்வி ஊக்கத்தொகை, காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும்’’ என்றார்.

புளியங்குடி பரமானந்தா பள்ளியின் செயலாளர் ஞானப்பிரகாசம் இது குறித்து பேசியபோது, ``50 ஆண்டுகள், 100 ஆண்டுகளைத் தாண்டிய அரசு உதவிபெறும் பள்ளிகள் நிறைய உள்ளன. அரசுப் பள்ளிகள் ஆரம்பிக்காத காலத்திலே இந்தப் பள்ளிகள்தான் கிராமங்கள் வரை கல்விப்பணியைச் செய்தன. இதில் பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள குடும்ப பிள்ளைகள்தான் படிக்கின்றனர்.

ஞானப்பிரகாசம் | புளியங்குடி பரமானந்தா பள்ளி
ஞானப்பிரகாசம் | புளியங்குடி பரமானந்தா பள்ளி

இவர்களுக்கும் எல்லா அரசு சலுகைகளும் கிடைத்து வந்தது. இப்போது வந்துள்ள சில திட்டங்கள் இவர்களுக்குக் கிடையாது என்பது இந்தப் பள்ளி மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்குச் சென்று சேருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். தேவையற்ற பல குழப்பங்கள் ஏற்படும்.

மாணவர்களின் நலனில் மிகுந்த கவனமெடுத்து கற்பித்து வரும் நிலையில், எங்களைப் போன்ற பள்ளிகளுக்கு இந்தச் சலுகைகள் கிடையாது என்பது பின்னடைவாகவே இருக்கும். அரசின் நலத்திட்டங்கள், அரசு நிதி உதவி பெறும் மாணவ, மாணவியருக்கு இல்லாமல் போனது சமூகநீதிக்கு எதிரானது என்றே சொல்ல வேண்டும்.

அரசு நிதி உதவி பெறும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளான கிறிஸ்துவ, இந்து, இஸ்லாமிய பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு...

1. உயர் கல்வி பயில 7.5% இட ஒதுக்கீடு

2. உயர்கல்வி படிக்க இருக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000

3. மாணவ, மாணவிகளுக்கு காலைச் சிற்றுண்டி

4. மாணவ, மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் உரிமை

இவையெல்லாம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு கிடையாது என்று சொல்வது தமிழக அரசால் தற்போது இழைக்கப்பட்டுள்ள சமூக அநீதியாகும்’’ என்றார்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற செல்லப்பா தொடர்ந்தபோது, ``அரசு பள்ளிகளுக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? ஆசிரியர்களுக்கு சம்பளம் அரசாங்கம்தான் கொடுக்கிறது. நிர்வாகம் மட்டும்தான் மாறுபடுகிறது. ஆசிரியர்கள் நியமனத்தைப் பள்ளி நிர்வாகிகள் செய்கிறார்கள் என்று பெரிதாகச் சொல்கிறார்கள். ஆனால், பள்ளிக் கூடத்துக்கு வெள்ளையடிப்பது முதல் கட்டுமான பணிகள் வரை எல்லா செலவுகளையும் செய்வதற்குள் நிர்வாகி படும்பாடு யாருக்கும் தெரிவதில்லை.

தேசிய நல்லாசிரியர் செல்லப்பா | நெல்லை இந்து தொடக்கப்பள்ளி
தேசிய நல்லாசிரியர் செல்லப்பா | நெல்லை இந்து தொடக்கப்பள்ளி

கற்றல், கற்பித்தல் இங்கு சிறப்பாக இருப்பதால்தானே ஏழை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இங்கு அதிகமாக சேர்த்து வந்தனர். இந்நிலையில், அரசின் நலத்திட்டங்கள் கிடையாது என்கிற ஒரு காரணத்தால் மட்டும் இந்தப் பள்ளியில் இருந்து விலகி அரசுப் பள்ளிக்கு சென்று சேரும் சூழ்நிலை வருவது ஆரோக்கியமானது அல்ல. எனவே, அரசுப் பள்ளிகளையும், அரசு உதவி பெறும் பள்ளிகளையும் அரசாங்கம் வேறுபடுத்தி பார்க்கக் கூடாது.

மேலும்,

1. நடுநிலைப் பள்ளிகளுக்கு விளையாட்டு ஆசிரியர்.

2. நூறு மாணவ, மாணவியர் உள்ள பள்ளிக்கு துப்புரவு தொழிலாளி.

3. கம்ப்யூட்டர் உதவியாளர்.

4. ஏற்கெனவே இருந்த பள்ளிக் கட்டடங்களுக்கு சொத்து வரி விலக்கு.

5. நிர்வாக மானியம் 2% வழங்கிடல்.

6. MLA தொகுதி மேம்பாட்டு நிதியும் வழங்கல்.

இவையெல்லாம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கிடைக்க வேண்டும். இவற்றை முதல்வர் கவனத்தில் கொண்டால் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் சிறப்பாக நடைபெறும். நலத்திட்டங்கள் முக்கியம்; அதே நேரம் அனைத்துத் தரப்பு மாணவர்களும் பயன்பெற வேண்டியது முக்கியம். அதில் பாரபட்சம் கூடாது’’ என்றார்.