அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் நிரந்தரமாக்கப்படுவார்களா... அரசாணையில் இருக்கும் சிக்கல் என்ன?

தங்கள் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேறியுள்ளதாக இந்த அரசாணை குறித்து ஒருதரப்பினர் கூற, மற்றொரு தரப்பினர் இந்த ஆணை நிர்ணயித்துள்ள தகுதி அடிப்படைகள், தகுதி இருந்தும் தங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படும் நிலையை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகக் கலை, அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், பல அரசுக் கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் தவிக்கும் நிலையே இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் பணி ஓய்வு பெற்றுச்செல்லும் நிலையில், 2013-க்குப் பிறகு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை.
கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டு கல்லூரி நிர்வாகங்கள் இந்தப் பிரச்னையை சமாளித்து வந்தன. தமிழகத்தில் 2,423 பேர் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். 1,623 பேர் ஆண்கள் கலைக் கல்லூரிகளிலும், 760 பேர் பெண்கள் கலைக் கல்லூரிகளிலும், 38 பேர் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலும் பணியாற்றி வந்தனர். 2019-2020 கல்வியாண்டில் மட்டும் காலியிடங்களின் எண்ணிக்கை 3,443 ஆக உயர்ந்த நிலையில், ஆசிரியர் பற்றாக்குறை உடனடியாகக் களையப்பட வேண்டிய நிலையை எட்டியது.

காலிப் பணியிடங்கள் தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்க, அவர்களைப் பணி நிரந்தரம் செய்யும் அரசாணை கடந்த 2019-ல் வெளியானது. தங்கள் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேறியுள்ளதாக இந்த அரசாணை குறித்து ஒருதரப்பினர் சொல்ல, மற்றொரு தரப்பினர் இந்த ஆணை நிர்ணயித்துள்ள தகுதி அடிப்படைகள், தகுதி இருந்தும் தங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படும் நிலையை ஏற்படுத்தியிருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்துக் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜோதி வெங்கடேசன், 30.09.2019 அன்று உயர் கல்வித் துறையின் அப்போதைய செயலாளர் மங்கட்ராம் சர்மாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். 60 மாதங்கள் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி, அக்கடிதம் எழுதப்பட்ட தேதியை வரையறையாகக் கொண்டு, அந்தக் காலகட்டத்தில் பணியில் இருந்தவர்கள் பணி நிரந்தரத்துக்குத் தகுதியானவர்கள் என்று அரசாணை தகுதி நிர்ணயம் செய்திருந்தது. அந்த அடிப்படையில் பிப்ரவரி 15 முதல் 18 வரை 2,752 பேர் அழைக்கப்பட்டு, கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்தப் பின்னணியில்தான், கௌரவ விரிவுரையாளர் பணியில் இருந்து விலகிவிட்ட, ஆனால் 60 மாதங்களுக்கு மேல் பணி அனுபவம் கொண்டிருப்பவர்கள் தங்களையும் இதில் உள்ளடக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். “சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் பணியில் தொடரமுடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டது. ஆனாலும் அரசு நிர்ணயித்துள்ள அனுபவத் தகுதி எங்களிடம் உள்ளதால், இக்கலந்தாய்வில் எங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை உயர் கல்வித் துறைச் செயலாளர் அபூர்வாவிடம் வைத்துள்ளோம்” என்றார் ஒரு முன்னாள் கௌரவ விரிவுரையாளர்.
தமிழ்நாடு அரசுக் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.கே. அருணகிரி இதுகுறித்து நம்மிடம் பேசுகையில், “1996-ல் இருந்து 2018-வரை கௌரவ விரிவுரையாளர்களாகத் தொடர்ந்து பணியாற்றியவர்களின் கோரிக்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசு ஆணை வெளியாகியிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் 6,000 ரூபாய் ஊதியத்தில் ஆண்டுக்கு 10 மாதங்கள் பணியாற்றி வந்தவர்களில் 2752 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த ஊதியம் போதாமல், தனியார் கல்லூரிகளில் இணைப் பேராசிரியர் பணிக்குச் சென்றுவிட்டவர்கள், இப்பணியை விட்டே வெளியேறியவர்கள் இன்றைக்கு அரசு இத்தகையை நெறிமுறைகளை வெளியிடும்போது அவர்களையும் உள்ளடக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அப்படிக் கேட்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால் அவர்களையும் இச்சிறப்புத் தேர்வில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்று உயர் கல்வித் துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளோம்” என்றார்.