Published:Updated:

அண்ணாமலை பல்கலைக்கழகம்: `50 நாள் தொடர் போராட்டம்... வெளியான அரசாணை!’ - என்ன சொல்கிறார்கள் மாணவர்கள்

அண்ணாமலை பல்கலைக்கழகம் - தொடர் போராட்டம்
அண்ணாமலை பல்கலைக்கழகம் - தொடர் போராட்டம்

மாணவர்களின் 50 நாள் தொடர் போராட்டத்தையடுத்து, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறையின்கீழ் கொண்டுவருவதற்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் மறைந்த ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் 1928-ம் ஆண்டு 1,000 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். முறையற்ற நிர்வாகம், தேவைக்கு அதிகமாக பணியமர்த்தப்பட்ட பேராசிரியர்கள், எண்ணற்ற முறைகேடுகள் உள்ளிட்ட காரணங்களால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை கடந்த 2013-ம் ஆண்டு கையகப்படுத்தியது தமிழக அரசு. ஆனால், அன்றிலிருந்து கல்விக் கட்டணங்கள் மட்டும் தனியார் கல்லூரிகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக வசூலிக்கிறார்கள் என்று குற்றம்சுமத்திவரும் மாணவர்கள், அதற்காகப் பல போராட்டங்களையும் முன்னெடுத்துவருகின்றனர்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

அதனடிப்படையில் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளைப்போல தங்களுக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 2020, டிசம்பர் 9-ம் தேதி அங்கு படிக்கும் மருத்துவ மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். கவன ஈர்ப்பாகத் தொடங்கிய போராட்டம், நாளடைவில் வேலை நிறுத்தப் போராட்டமாக உருவெடுத்தது. மருத்துவ மாணவர்களின் போராட்டத்தால் மருத்துவமனை மருத்துவர்களும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்திக்கொண்டனர். அதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.

43-வது நாளான 2021, ஜனவரி 21 அன்று, `அசாதாரணச் சூழல் நிலவுவதால், கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாகவும், விடுதிகளிலுள்ள மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும்’ என்றும் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது கல்லூரி நிர்வாகம். அத்துடன் அன்று இரவு விடுதிகளில் தண்ணீர், மின்சார இணைப்புகளையும் துண்டித்தது. அதன் பிறகு மாணவர்களின் புகாரின் அடிப்படையில் மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டால் 24 மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீர், மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டன.

மாணவர்களின் போராட்டம்
மாணவர்களின் போராட்டம்

``தமிழகத்தின் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான கட்டணம் ரூ.13,600. அதேபோல முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான கட்டணம் ரூ.30,000 மட்டுமே. ஆனால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்களிடம் ரூ.5.6 லட்சமும், முதுநிலை மருத்துவ மாணவர்களிடம் ரூ.9.6 லட்சமும் கட்டணமாக வசூலிக்கிறார்கள். கேட்டால், அரசு சுயநிதிக் கல்லூரி என்று கூறுகிறார்கள். ஆனால் எம்.சி.ஐ தொடங்கி பல்கலைக்கழகம் வரை அனைத்து அலுவல் கோப்புகளிலும், ஆவணங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரி என்றுதான் குறிப்பிடுகிறார்கள். நாங்கள் போராட்டத்தை கைவிடவில்லையென்றால் எங்களை ஃபெயிலாக்கிவிடுவதுடன், எங்கள் மீது எஃ.ஐ.ஆர் போடுவோம் என்றும் எங்கள் பெற்றோர்களை மிரட்டுகின்றனர்” என்றனர் ஆவேசமாக.

மாணவர்களின் 50 நாள் தொடர் போராட்டத்தையடுத்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறையின்கீழ் கொண்டுவருவதற்கான அரசாணையை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

தொடர் போராட்டம்
தொடர் போராட்டம்

இது குறித்து நம்மிடம் பேசிய மாணவர்கள், ``தேர்தல் நேரத்தில் இதை ஒரு கண் துடைப்பு நாடகமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அந்த அரசாணையில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் குறித்து எதுவும் கூறப்படவில்லை. தவிர, ஏற்கெனவே தமிழக அரசு கையகப்படுத்திய ஈரோடு ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி டிரஸ்ட் தற்போது சுகாதாரத்துறையின் கீழ்தான் செயல்பட்டுவருகிறது. ஆனால், அங்கும் தனியாரின் கல்விக் கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. அதனால் கல்விக் கட்டணம் குறித்து அரசு வாய் திறக்காதவரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு