சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யச் சொல்லி ஆசிரியர்களுக்கு மட்டும் நெருக்கடி ஏன்?

'அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியார்களின் வருகைப் பதிவைக் கண்காணிக்க பயோமெட்ரிக் முறை கட்டாயமாக்கப்படும்' எனக் கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசு ஓர் ஆணை பிறப்பித்தது.
தமிழக ஆசிரியர்களுக்கு இந்த வருட ஆசிரியர் தினம், வாழ்த்துகளுக்கு உரிய தினமாக இல்லாமல் வருந்தத்தக்க தினமாக மாறிப்போனது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரிடமிருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கைதான் அதற்குக் காரணம்.
அதில், 'அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் தங்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்து விவரங்களை தங்கள் பதிவேட்டில் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை அறிக்கைப்படி துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் வருகைப் பதிவைக் கண்காணிக்க பயோமெட்ரிக் முறை கட்டாயமாக்கப்படும்' என, கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசு ஓர் ஆணை பிறப்பித்தது. கூடுதலாக ஒவ்வொருவரின் ஆதார் எண்ணையும், அதோடு இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அரசின் இந்த முடிவை எதிர்த்து, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆசிரியை அன்னாள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் சொத்து விவரங்களைப் பள்ளிக்கல்வித்துறை சரிபார்க்க வேண்டும். ஒருவேளை, பணிப் பதிவேட்டில் உள்ள விவரங்களிலிருந்து அது மாறுபட்டால், அவர்கள்மீது ஊழல் தடுப்புப் போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீதிபதி
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ''அரசின் பிரதிநிதிகளாக ஆசிரியர்கள் இருப்பதால், வருகைப் பதிவேட்டில் ஆதார் எண்ணை இணைப்பது விதிமீறல் இல்லை" என உத்தரவு பிறப்பித்தார். மேலும், ''ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை, பணிநேரத்துக்கு முன்பாகப் பள்ளியிலிருந்து சென்றுவிடுகிறார்கள். இடைப்பட்ட நேரங்களிலும் தங்களின் சொந்த வேலைகளைச் செய்கிறார்கள்... என மக்களிடமிருந்து ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன.

அதேபோல, அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரசு ஆண்டுதோறும் பெரும்தொகையைச் செலவிடுகிறது. ஆனால், சிறந்த கல்வி மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதனால் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் சொத்து விவரங்களைப் பள்ளிக்கல்வித்துறை சரிபார்க்க வேண்டும். ஒருவேளை, பணிப் பதிவேட்டில் உள்ள விவரங்களிலிருந்து அது மாறுபட்டால், அவர்களின்மீது ஊழல் தடுப்புப் போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனவும் குறிப்பிட்டிருந்தார்.
பல நாள்களுக்கு முன்பே தீர்ப்பு வழங்கப்பட்டபோதும், அதற்கான உத்தரவை ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளிக்கல்வி இயக்குநருக்கு நீதிபதி அனுப்பியதும், அவரும் அதை உடனடியாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பியதும்தான் எங்களை வருத்தம்கொள்ளச் செய்கிறது.அண்ணாமலை, அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர்
நீதிபதியின் இந்த உத்தரவைத் தொடர்ந்துதான், மாநிலப் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணையா, ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் மேற்கண்ட சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார் என்று பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் சமாதானம் சொல்கின்றனர்.
ஆனால், இந்தச் சுற்றறிக்கை அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 'ஆசிரியர்களுக்கு மட்டும் இப்படிச் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது ஆசிரியர் சமூகத்தை அவமதிக்கும் ஒரு செயல்' என ஆசிரியர் சங்கங்கள் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளன.
''ஆண்டுதோறும் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும், புதிய சொத்துகளை வாங்கினாலோ, பழைய சொத்துகளை விற்றாலோ அதைப் பதிவுசெய்ய வேண்டும் என்பது அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதிகளில் உள்ள விஷயம்தான். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், பணிப் பதிவேட்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியை ஒருவர் வழக்கு தொடர்ந்ததற்கு, வழக்கில் தொடர்புடையவருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்துக்கும் எதிரான சில கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் யாரும் சரியாகப் பணி செய்வதில்லை எனத் தொடங்கி பல குற்றச்சாட்டுகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், சில நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.’’ என்கிறார் அண்ணாமலை.
ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த பிறகு சொத்துகளை வாங்க அனுமதி பெற, பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய, பின்பற்றப்படும் நடைமுறைகளில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அனுமதி பெறுவதற்கு, பல நாள்கள் அலைய வேண்டியிருக்கிறது. அதற்குப் பயந்துதான் பலர் முறையாக அனுமதி வாங்குவதில்லை.மகேந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர்

"ஊழலை ஒழிப்பதற்காக எடுக்கப்படும் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். ஆனால் லஞ்சம், ஊழல் செய்வதற்கு வாய்ப்பே இல்லாத ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகிறோம். அனைத்துத்துறை ஊழியர்களுக்கும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்கிறார் மகேந்திரன்.
அதேசமயம் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் சங்கம் இயக்குநரின் சுற்றறிக்கையை வரவேற்கிறது.
''பணிப் பதிவேட்டில் சொத்து விபரங்களைச் சேர்க்க வேண்டும் என்பதும், புதிதாகச் சொத்துகள் வாங்கினால் அனுமதி பெற வேண்டும் என்பதும் அரசு ஊழியர்களின் அடிப்படை விதிகளில் உள்ள ஒரு விஷயம்தான். ஆனால், நடைமுறையில் அந்த விதிகளை யாரும் முறையாகப் பின்பற்றுவதில்லை. பலர் வாரிசு விவரங்களைக்கூடப் பதிவேட்டில் ஏற்றாமல் உள்ளனர்.
நீதிமன்ற உத்தரவும் அதைத் தொடர்ந்த சுற்றறிக்கையும் அதற்கான நினைவூட்டலாக அமைந்திருக்கிறது. ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து அரசு ஊழியர்களையும் இந்த உத்தரவை முறையாகப் பின்பற்றச் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் முன்னுதாரணமாகச் செயல்பட்டால் அது, ஊழலற்ற சமூகத்தை உருவாக்குவதற்கும் சமூக முன்னேற்றத்துக்கும் வழிவக்கும். அதனால் இந்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம்'' என்கிறார் சங்கத்தின் மாநிலத் தலைவர் பீட்டர் ராஜா.
இந்த நேரத்தில், சுற்றறிக்கை அனுப்பியது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணையாவிடம் பேசினோம். ''நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். இந்த நேரத்தில் அனுப்பியது வருத்தம் தரும் தரக்கூடிய செய்திதான் எனினும், அதில் உள்நோக்கம் எதுவுமில்லை'' என்றார் அவர்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள், மக்கள்பிரதிநிதிகள் எனப் பலதரப்பினரும் விதவிதமாக ஊழல் செய்து கோடிகளைக் குவித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதுதான் ஊழல் தடுப்புத்துறையின் கடமை. அந்தத் துறையை வைத்து ஆசிரியர்களை மிரட்டுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள் ஆசிரியர்கள்.
இதே பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லாப் பொருள்களில் நடக்கும் ஊழல் குறித்து ஏற்கெனவே பல்வேறு புகார்களும் குவிந்துவருகின்றன. வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் பள்ளிக் கல்வித் துறையில் நடக்கும் பல்வேறு டெண்டர்களை நேர்மையாக நடத்துவதுதான் முதலில் தேவையான நடவடிக்கை என்கின்றனர், இதே துறையிலுள்ள நேர்மையான அலுவலர்கள்.
வெளிநாடுகளில் கோட் சூட் மாட்டிக்கொண்டு விளையாடும் செங்கோட்டையன், கோட்டைக்குத் திரும்பியதும் இதற்குப் பதில் சொன்னால் நல்லது.