Published:Updated:

`மயானம் அருகே இயங்கும் பள்ளி; அச்சத்துடன் பயிலும் மாணவர்கள்!' - எருமைக்குளம் கிராம அவலம்

56 ஆண்டுகளாகியும் இந்தப் பள்ளி இன்னும் ஓட்டுக் கட்டடத்தில்தான் இயங்கிவருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பள்ளிக் கூரையின் ஓடுகள் பறந்தன.

மழையில் சேதமடைந்த எருமைக்குளம் ஆரம்பப்பள்ளி
மழையில் சேதமடைந்த எருமைக்குளம் ஆரம்பப்பள்ளி

கமுதி அருகே இயங்கிவரும் ஆரம்பப் பள்ளி ஒன்று மயானம் இருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 56 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அந்தப் பள்ளியை கிராமத்தின் வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனவும் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எருமைக்குளம் ஆரம்பப் பள்ளி
எருமைக்குளம் ஆரம்பப் பள்ளி

நகர்ப்பகுதி தொடங்கி கிராமங்கள் வரை தனியார் பள்ளிகள் இல்லாத இடமே இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. இதற்கு மாறாக அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டே வருகின்றன. தனியார் பள்ளிகளில் கல்வி தரமாக இருக்கிறதோ இல்லையோ அங்கு வகுப்பறை கட்டடங்கள் மட்டும் வானுயர்ந்து நிற்கின்றன. அதே நேரத்தில் நிலவுக்கு குடியேறுவது குறித்து ஆய்வு நடத்திக்கொண்டிருக்கும் நம் அரசு நடத்தும் பள்ளிகள் நிலத்தில் நிலையாக இருப்பதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அத்தகைய சூழலில்தான் இயங்கிவருகிறது கமுதி அருகே உள்ள ஒரு கிராமத்தின் அரசு ஆரம்பப்பள்ளி.

`23ல் இருந்து 69 ஆன எண்ணிக்கை..!'- இஸ்ரோ தலைவர் சிவனால் வளர்ந்த அரசுப் பள்ளி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் உள்ளது எருமைக்குளம் கிராமம். இந்தக் கிராமத்தில் 56 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட ஆரம்பப்பள்ளி ஒன்று உள்ளது. ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் இந்தப் பள்ளியில் 2 ஆசிரியர்களும், 16 மாணவர்களும் உள்ளனர். 56 ஆண்டுகளாகியும் இந்தப் பள்ளி இன்னும் ஓட்டுக் கட்டடத்தில்தான் இயங்கிவருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பள்ளி கூரையின் ஓடுகள் பறந்தன.

பள்ளி அருகில் உள்ள மயானம்.
பள்ளி அருகில் உள்ள மயானம்.

இதைவிடக் கொடுமை இந்தப் பள்ளியானது மயானத்துக்கு அருகிலேயே அமைந்திருப்பதுதான். அனைத்து சமுதாயத்தினருக்குமான இந்த மயானம் பள்ளியின் சுவற்றை ஒட்டியே அமைந்துள்ளது. கிராமத்தில் உள்ளவர்கள் யாராவது இறந்துவிட்டால் மாணவர்களின் நலன் கருதி அன்றைய தினம் அரைநாள் விடுமுறை விடப்படும் நிலையில் அந்தப் பள்ளி இயங்கிவருகிறது. ஏனெனில் அந்த மயானத்துக்கு இறந்தவரின் உடலை பள்ளி வழியாகத்தான் எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் சிறு வயது மாணவர்கள் அதைக்கண்டு பயந்துவிடக் கூடாது என்பதற்காக விடுமுறை விடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு! - போராட்டத்தை அறிவித்த அரசுப் பள்ளி ஆசிரியை

விடுமுறைக்குப் பின் மறுநாள் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மயானத்தில் எரியூட்டப்பட்ட சடலத்திலிருந்து வரும் புகையைக் கடந்தே வர வேண்டியுள்ளது. பள்ளிக்குள்ளும் அந்தப் புகை பரவும் நிலை உள்ளதால், அதை சுவாசிக்கும் மாணவர்களுக்கு உடல் நல பாதிப்பும் ஏற்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு கிராமத்தின் வேறு பகுதியில் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது கூட மழையினால் பாதிக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்துக்குப் பதிலாக அப்பகுதியில் உள்ள இ-சேவை மைய கட்டடத்தில்தான் வகுப்புகள் நடந்து வருகின்றன. அங்கு கரும்பலகை, குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் ஏதும் இல்லாத நிலையே உள்ளது.

இ-சேவை மையத்தில் இயங்கும் பள்ளி.
இ-சேவை மையத்தில் இயங்கும் பள்ளி.

எருமைக்குளம் கிராமத்தில் மயானத்துக்கு அருகே உள்ள பள்ளிக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.