Published:Updated:

பெண்களுக்கு மட்டும் ஏன் நீளமான கூந்தல்? அரசுப் பள்ளியில் சுவாரஸ்ய விவாதம் #GovtSchool

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

அரசுப் பள்ளியில் நடந்த சுவாரஸ்யமான விவாதம்!

"பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா, கிடையாதா?" என்ற அரசரின் சந்தேகத்தைத் தீர்க்கும் காட்சியை 'திருவிளையாடல்' படத்தில் பார்த்திருப்போம். ஆனால், பெண்களுக்கு நீளமான கூந்தல் அவசியம்தானா... என்ற விவாதத்தை அரசுப் பள்ளியில் நடத்தியிருக்கிறார்கள் மாணவர்கள். பள்ளியி விவாதிக்க வேண்டிய விஷயமா இது? என்ற கேள்வி சிலருக்கு எழலாம். பாடம் தவிர்த்து சமூகத்தில் நிலவும் பழக்கங்கள் குறித்து மாணவர்களைப் பேச வைப்பது ஆரோக்கியமானது எனக் கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில்தான் இந்த விவாதம் நடந்திருக்கிறது. இது குறித்து அப்பள்ளியின் ஆசிரியர் மகாலட்சுமியிடம் பேசினோம்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

"நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்வதைப்போல, அது ஏன் நடக்கிறது, எதனால் நடக்கிறது என்பதையும் காரணங்களோடு தெரிந்துகொள்வது அவசியம் என நினைக்கிறேன். அதற்காக வாரந்தோறும் வியாழக்கிழமை 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களை ஓரிடத்தில் வரச் சொல்லி, விவாதம் நடத்துவது எங்கள் பள்ளியின் வழக்கம். சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி சொல்வார்கள் அல்லது ஒரு புத்தகத்தை எல்லோரும் படித்துவந்து வெவ்வேறு கோணத்தில் அப்புத்தகம் பற்றி பேசுவார்கள். சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்துகூட இப்படி விவாதித்தோம். முதல் முறையாகக் கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கு இந்தப் பயிற்சி சமூகத்தை நன்கு புரிந்துகொள்ள உதவும். எங்கள் அனுபவத்தில் நிச்சயம் உதவுகிறது என்றே உறுதியாகச் சொல்வோம்.

இந்த வாரத்துக்கான தலைப்பாகத்தான் 'பெண்களுக்கு நீளமான கூந்தல் அவசியம்; அவசியமில்லை' என்று எடுத்துக்கொண்டோம். கருத்துச் சொல்ல ஆண், பெண் என்று பேதம் பிரிக்கவில்லை. யாருக்கு என்ன கருத்து உள்ளதோ அதன்படி அவசியம், அவசியம் இல்லை என்று தனித்தனியாக உட்காருங்கள் என்றேன். மாணவர்கள் அப்படி உட்கார்ந்ததும், இந்தத் தலைப்பை ஏன் விவாதிக்க வேண்டும் என்று ஒருசில விஷயங்களை மட்டும் சொல்லிவிட்டு, மாணவர்களின் கருத்துகளைப் பகிரச் சொன்னேன். நான் எதிர்பார்த்ததைவிடவும், புதுப்புது கோணங்களில் இந்தத் தலைப்புத் தொடர்பான கருத்துகளை மாணவர்கள் பேசினார்கள்.

அரசுப் ப்ள்ளி
அரசுப் ப்ள்ளி

மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே நீளமான முடி வைத்திருக்கிறது பழக்கம்தானே... இப்போது மட்டும் ஏன் வேண்டாம்னு சொல்றீங்க?

அதைத்தான் நாங்களும் சொறோம்; ஆண், பெண் இரண்டு பேரும்தானே நீளமான முடி வெச்சிருந்தாங்க. இப்போ ஆண்கள் மட்டும் முடியை வெட்டிகிட்டீங்க. பெண்கள் மட்டும் வளர்க்கணுமா!

கிராமத்து அழகே பொண்ணுங்க நீளமாக முடி வளர்த்துகிட்டு, சேலை கட்டிட்டு, முகத்துல மஞ்சள் பூசி, பொட்டு வைக்கிறதுலதான் இருக்கு. ஆனா, முடியை வெட்டிட்டிங்கனா நம்ம கிராமத்து அழகும் பண்பாடும் போயிடும். அதனால பொண்ணுங்க நீளமா முடி வளர்த்தே ஆகணும்

பொண்ணுங்க முடியிலதான் கிராமத்து அழகும் பண்பாடும் இருக்குனு சொல்றத ஏத்துக்கவே மாட்டோம். அதே கிராமத்துலதானே ஆம்பளைக்கு குடிச்சிட்டு வந்து பொம்பளைங்கள முடியை இழுத்துப்போட்டு அடிக்கிறாங்க. இதுக்குத்தான் நீளமா முடி வெச்சுக்கணும்னு சொல்றீங்களா... நாங்க ஒப்புக்க மாட்டோம்.

நீளமான கூந்தல் வளர்க்கிறதுல உங்களுக்கு என்னதான் பிரச்னை?

அப்படிக் கேளு! நீளமான கூந்தலை வாரத்துக்கு ரெண்டு தடவை எண்ணெய் தேய்ச்சி குளிக்கணும். பூ, கிளிப், பின், கொண்டை ஊசின்னு ஏகப்பட்ட செலவும் இருக்கு. அதுக்கு செலவு பண்றதெல்லாம் வேஸ்ட்டுதானே... அந்தக் காசை வெச்சிட்டு பசியோட இருக்கிற யாருக்காவது சாப்பாடு வாங்கிக்கொடுக்கலாம்.

(சிரித்துக்கொண்டே) அப்படின்னா, முடி கம்மியா வெச்சியிருக்க பொண்ணுங்க எல்லாம், மத்தவங்க பசியைப் போக்கிட்டு இருக்காங்களா?

நான் சொன்ன உதாரணத்தை அப்படியே புரிஞ்சுக்காம... அதுக்கான காசை வேற எதுக்காவது பயன்படுத்தலாம்னு சொன்னேன். காசை விடு, நீளமான கூந்தலை பராமரிக்கிறதுக்கு ஆகிற நேரத்தையும் மிச்சப்படுத்தலாமே!

நீ சொல்றதைக் கேட்க நல்லாத்தான் இருக்கு, ஆனா, நீளமான முடி இருந்தால்தானே டீச்சர் புரோகிராம்ல என்னைச் சேர்த்துப்பாங்க... அப்பதானே நம்ம திறமையை வெளிப்படுத்த முடியும்

நீளமா முடி இருந்ததான் ஒரு பொண்ணை புரோகிராம்ல சேர்த்துக்க முடியும்னு ஒரு டீச்சர் நினைச்சா, பொண்ணுங்க முடி வளர்க்க வேண்டியதில்ல, அந்த டீச்சர்தான் பிற்போக்கான எண்ணத்தை மாத்திக்கணும்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

இப்படி ஆசிரியராக இருக்கும் என்னையே கேலியும் கிண்டலும் செய்துகொண்டு விவாதம் செய்தார்கள். இப்படி நாங்கள் நடத்தும் விவாதங்களுக்கு இதுதான் முடிவு என்று சொல்வதில்லை. ஆனால், ஒரு விஷயத்தைப் பற்றிய பல்வேறு கோணங்களை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பாக இதைப் பார்க்கிறோம். ஆறேழு மாதங்களுக்கு முன் படிக்க கொடுத்த புத்தகத்திலிருந்துகூட திடீர் என்று மேற்கோள் காட்டிப் பேசி என்ன வியக்க வைத்துவிடுவார்கள். பெரியவர்கள்தான் பல விஷயங்களை மறந்துவிடுகிறோம். குழந்தைகள் எந்த விஷயத்தையும் தங்கள் மனதின் ஆழத்தில் பதிய வைத்துக்கொள்கிறார்கள். அவர்களிடம் இதுபோன்ற உரையாடல்கள் அவசியம் என்றே நினைக்கிறேன்" என்கிறார் ஆசிரியர் மகாலட்சுமி.

அடுத்த கட்டுரைக்கு