Published:Updated:

அரசு அதிகாரிகள் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படித்தால் என்ன மாற்றம் வரும்? - சர்வே முடிவு

அரசு ஊழியர்கள் தொடர்பான சர்வே முடிவு

 அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

பொருளாதாரத்தில் எளிய மனிதர்களின் வீட்டுப் பிள்ளைகளும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவது அரசுப் பள்ளிகளே. ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. இதை எப்படிச் சரிசெய்யலாம் என்ற விவாதம் வரும்போதெல்லாம் 'அரசுப் பள்ளி ஊழியர்கள் அதிலும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற வாதம் முன் வைக்கப்படும். சமீபத்தில் வெளியான 'ராட்சசி' திரைப்படத்திலும் இது வலியுறுத்தப்பட்டிருந்தது. எனவே, இது குறித்து விகடன் இணையதளத்தில் ஒரு சர்வே நடத்தியிருந்தோம். அதில், ஏராளமான வாசகர்கள் ஆர்வமாகப் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். அவர்களுக்கு எங்களின் நன்றி. இனி சர்வே முடிவுகளைப் பார்ப்போம்.

விகடன் சர்வே
விகடன் சர்வே

அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்பது... என்ற கேள்விக்கு,

'சரியானது' என்றும் 67.2 சதவிகிதத்தினரும், 'தனிமனிதர் விருப்பத்தைத் தடுத்தல்' என்றும் 32.8 சதவிகிதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டுமா?

விகடன் சர்வே
விகடன் சர்வே
இந்தக் கேள்விக்கு 'ஆமாம்' என்று 67.5 சதவிகிதத்தினரும், 'அவசியமில்லை' என்று 32.5 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படித்தால்....

விகடன் சர்வே
விகடன் சர்வே
இந்தக் கேள்விக்கு, 'பள்ளியின் தரம் மேம்படும்' என்று 70.9 சதவிகிதத்தினரும், 'இதே நிலைதான் நீடிக்கும்' என்று 17.4 சதவிகிதத்தினரும், 'மாணவரின் பெற்றோர் பதவிக்கு ஏற்ப பள்ளிகளில் பாகுபாடு வரலாம்' என்று 11.6 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் அரசு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை எடுக்க வேண்டும் எனச் சிலர் சொல்வது?

விகடன் சர்வே
விகடன் சர்வே
இந்தக் கேள்விக்கு, 'சரியானது' என்று 52.9 சதவிகிதத்தினரும், 'வற்புறுத்தக்கூடாது' என்று 47.1 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டுமா?

விகடன் சர்வே
விகடன் சர்வே
இந்தக் கேள்விக்கு, 'நிச்சயமாக' என்று 82.5 சதவிகிதத்தினரும், 'அவசியம் இல்லை' என்று 13.3 சதவிகிதத்தினரும், 'பதவியில் இருக்கும் காலத்தில் மட்டும்' என்று 4.2 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சர்வே முடிவின்படி பார்க்கையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்க்கச் சொல்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, இந்த முறை சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்த வேண்டும் என்று 82.5 சதவிகிதத்தினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், அரசு அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமா என்பதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிட்டத்தட்ட சரிவிகிதத்தில் இருக்கிறது. இந்தச் சர்வே முடிவுகளைப் பற்றிச் சிலரிடம் பேசினோம்.

மாணவர்கள்
மாணவர்கள்

வங்கிப் பணியில் உள்ள அரசு ஊழியர் ஒருவர் பேசுகையில், "அரசு ஊழியரின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் படித்தால், அந்தப் பள்ளி தரத்திலும் கட்டமைப்பிலும் சிறப்பாக இருக்கும் என்பதில் உண்மை இருக்கவே செய்கிறது. இப்போது இருக்கும் சில பிரச்னைகள் சரியாகவும் கூடும். ஆனால், தம் பிள்ளை எங்கு படிக்க வேண்டும் எனும் அவரது சொந்தமாக முடிவெடுக்கும் உரிமைக்கு எதிராகவும் மாறிவிடும் அபாயம் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் சட்டத்தின் படி அரசுப் பள்ளிகளைக் கண்காணிப்பதே தற்போதைய பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என நம்புகிறேன்" என்றார்.

ஆசிரியை பிரீத்தி, "அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றும் சூழலில், பெற்றோர்கள் தாமாகவே எந்தத் தயக்கமும் இல்லாமல், தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வருவார்கள். இதற்காகப் பல முறை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குரல் கொடுத்தவாறே உள்ளனர். ஆனபோதும், பல ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்க வைப்பதைப் பார்க்கிறேன். அனைவரும் என்ற நிலை வர முன்கூறிய விஷயங்களும் சரியாக வேண்டும் என்பது என் எண்ணம்" என்கிறார்.

விகடன் சர்வே
விகடன் சர்வே

அரசுப் பள்ளி ஆசிரியர் என்.மாதவன் கூறுகையில், "இந்த சர்வே முடிவில், அரசு ஊழியர்கள் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதை வற்புறுத்தக்கூடாது என, ஏறக்குறைய சரிபாதியினர் கூறியுள்ளனர். அதற்கு என்ன காரணம் என்றால், அது 'ஒருவரின் உயிரோடு தொடர்புடையது. அதில் அதிக ரிஸ்க் எடுக்கக்கூடாது' என்று நினைக்கிறார்கள். கல்வியும் அதற்கு இணையானதுதான் என்பது என் எண்ணம். தமிழ் மொழியின் சிறப்புகளை விவரிக்கும் நாம், உயர் கல்வியில் தமிழில் படிக்கும் சூழலை உருவாக்கவில்லை. ஆங்கிலம் வழியில்தான் இருக்கிறது. அதனால், பள்ளிக்கல்வியில் ஆங்கில வழியில் தேர்ந்தெடுக்க நினைக்கிறார்கள்.

வகுப்புக்கொரு ஆசிரியரோடு இயங்கும் தனியார் பள்ளி, அருகில் அந்தளவு ஈர்க்காத அரசுப் பள்ளி எனும்போது எதற்குப் பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதைச் சமூகம் சார்ந்த உரையாடலாகப் பார்க்க வேண்டும்.
ஆசிரியர் என்.மாதவன்
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டுமா! உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

வகுப்புக்கொரு ஆசிரியரோடு இயங்கும் தனியார் பள்ளி, அருகில் அந்தளவு ஈர்க்காத அரசுப் பள்ளி எனும்போது எதற்குப் பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதைச் சமூகம் சார்ந்த உரையாடலாகப் பார்க்க வேண்டும். சமூகத்தின் ஓர் அங்கம்தானே அரசு ஊழியர்களும். அதனால் அவர்களுக்கு மட்டும் இதுதான் உங்களுக்கு என வரையறுக்கக் கூடாது எல்லாவற்றுக்கும் மேலை நாடுகளைப் போலச் செய்யும் நாம் கல்வியை அவ்வாறு நினைக்காதது பெருங்குறையே. அனைத்துத்தரப்பினர் குழந்தைகளும் ஒன்றாய்ப் பயிலும் அருகாமை பள்ளி முறையே இதற்குத் தீர்வாகும் என்பது என் கருத்து" என்கிறார்.